Posts

Showing posts from January, 2020

ஒவ்வாமை

ஒவ்வாமை பழமொழி எல்லாம் மெய்யல்ல ஆனால் பொய்யா மொழியொன்றதிலுண்டு! 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' பல நோய் பெருகும் நம்நாட்டில் இந்நோய் கொஞ்சம் குறைவாகும் ஒவ்வாமை என்பது அதன் பெயரே! 'வளர்ந்த' மேலை நாடுகளில் எதற்கெடுத்தாலும் ஒவ்வாமை எதெடுத்தாலும் 'அலர்ஜி ' உயிரையும் வாங்கும் சிலநேரம் ஒவ்வாமை எனும் நோயதுவே!யுஎஸ்ஏவில்  இருக்கையிலே தொல்லை கொடுக்கும் ஒவ்வாமை மெட்ராஸ் வந்ததும் குறைந்துவிடும்! காரணம் என்ன நாமறியோம்! சிந்தனை என்ன செய்துமே  விளங்கவில்லை காரணமே, சுத்தம் சுத்தம் எனும் பெயரில் சுற்றுச்சூழல் எல்லாமே நுண்ணுயிரின்றிப் போய்விட்டதோ? அதனால் வருதோ ஒவ்வாமை? எதற்கெடுத்தாலும் மேற்கின் பின்னே ஓடிச்செல்லும் நம் நாடும் இன்னும் சிறிது காலத்தில் ஒவ்வாமை இருப்பிடம் ஆகிடுமோ? அளவை மிஞ்சி எதுவந்தாலும் அதுவே விஷமாய் மாறிடலாம் சுத்தமும் அதிலே சேருமம்மா! கிருமிகள் எல்லாம் போகும் வண்ணம் கழுவிக்கொண்டே இருக்க வேண்டும் கைகள் இரண்டையும் என்று கூறும் நம்மைச் சுற்றும் விளம்பரமெல்லாம் வியாபாரம் ஒன்றே குறியென்று, அறிந்து கொள்வீர் குழந்தைகளே! அறுவை ச

ஏன் படைத்தாய் மனிதனை?

ஏன் படைத்தாய் மனிதனை? பூமியென்ற சொர்க்கத்தில், புற்றிலிருந்து ஈசல் போல் பரவி எங்கும் பெருகி, இருக்கும் வளத்தை எல்லாம் இயன்றவரை சுரண்டும் மனிதனை ஏன் படைத்தாய், இப்பிரபஞ்சத்தில் இயற்கையே? மனதில் என்ன நினைத்தாய் இவனை இங்கு படைக்கையில்? அறிவு தனக்காறென்று தானே அவன் அறிவித்தான், விலங்குக்கு ஐந்து என்று விளங்கிக் கொண்டதெவ்வாறு? இதை நீ விளக்கமாய் இயற்கையே எனக்குரைப்பாய்! மனிதனில்லா பூமியை மனதில் எண்ணிப் பார்த்தால் மாசேதும் இல்லாமல் துல்லியதொரு இடமாக வாழும் சொர்க்கம் இது வேயென இருக்குமென எண்ணுகிறேன்! வாழுமிந்த பூமியை வளமாக மாற்றி, வாழ்ந்த சுவடேதுமின்றி வரப்போகும் உயிர்களுக்கு, விட்டுச் செல்லும் வழக்கமுண்டு வானில் மண்ணில் நீரில் என்று வாழும் விலங்கனைத்துக்கும்! மனிதர் மட்டுமிங்கு வேறுபட்டு நிற்கிறோம் முடிந்த மட்டும் பூமியை அழித்து விட்டுச் செல்கிறோம் சென்ற பின்னும் விடேனென்று கல்லறை கட்டுகிறோம்! விட்டுச்செல்லும் குப்பை போக வேண்டும் இங்கு யுகங்களே. சிந்திக்கும் திறன் இழந்து சுயநலத்தில் தனை மறந்து கற்பனைப் பேயென்ற பணத்திடம் மாட்டிக்கொண்டு, மெய்யென்ற பூமியை ச

சகிப்பும் விருப்பும்

சகிப்பும் விருப்பும் என் மகனுக்கும் எனக்கும் நடந்த ஒரு டெலிபோன் உரையாடலுக்குப் பின் நான் அவனுக்கு எழுதிய ஒரு சிறு பாடல் 👇🏼 இயற்கை மனிதனைப் படைத்தது இவ்வாறேயென அறிவாய் மகனே! இயற்கை கொடுத்த இயல்பிருக்கு, இதனை மாற்ற நினைத்தாலும் அவ்வப்போது தலைதூக்கும் உள்ளே உள்ள இயல்பதுவே! கேள்விகள் கேட்பது, ஏனென்று கேட்க நினைத்துக் கேட்டாலும், கேள்விக்குப் பதிலே கிடையாது. கேளிதை  மகனே சின்னத்தம்பி கேள்விகள் ஆயிரம் உண்டிங்கு பதில்கள் கிடைப்பது கடினமப்பா! அடிப்படை குணமென ஒன்றுண்டு, அதனை அந்த மனிதன், தானே எண்ணி முயன்றால் கூட குணத்தை மாற்ற முடியாது. ஆகையினாலே நாமெல்லாம் அதை மனதில் வைக்கத் தேவையில்லை, அவரவர் வாழ்க்கை உண்டிங்கே அதனை மகிழ்வுடன் களிப்போமே! இன்னும் ஒன்று கூறுகிறேன் செவியை நீயும் தீட்டிக்கொள் சொல்வதை மட்டும் நீயே ரகசியமாக வைத்துக் கொள்! சக மனிதனை சகிப்பதென்பது எனக்கும் மிகவும் கடினமே! விலங்கினம் எல்லாம் எனக்குமே விருப்பம் மிகவும் ஆனதே, மனிதரில் எடுத்துக்கொண்டால் மனதிலே விருப்பம் என்பது சிலரிடம் மட்டும் உள்ளதே! இவ்வாறென என்னையே இயற்கை ஏன் படைத்தது? எல்லா மனிதரை விரு

'சூ'

'சூ' 'சூ' என்னும் சிறைக்குச் சென்றோம் நாமும் பொழுதைப் போக்க, கூண்டெனும் அறையிலே விலங்குகள் கண்டோம் பரிதவிக்க.... காட்டுக்குள்ளே திரிந்து பிடித்த உணவை உண்டு வாழ்ந்த வாழ்க்கை சென்று, கூண்டுக்குள்ளே கைநீட்டி மனிதன் கொடுக்கும் உணவு தீர வேண்டும் தின்று! பறந்து போக வழியில்லை திரிந்து நடக்க இடமில்லை! எதற்கென்று கேட்டால் அறிவுக்கென்று பகர்கிறார், விலங்கினம் அழியாது காக்கவென்று சொல்லுகிறார்! அங்கே வருவது அறிவல்ல, விலங்கினம் காப்பதும் மெய்யல்ல! அடைத்து வைத்த விலங்கினைப் கண்டுகளிக்கும் குரூரம், அதுவே வளருது அவ்விடம! அழியும் விலங்கும் இருக்கும் விலங்கும் இயற்கை செய்யும் விந்தை! தலையிடாமல் மனிதன் இருந்தால் அதுவே போதும் குழந்தை.... செல்லாதே நீ சூவருகே! நீயிருக்கும் இடத்தில் உன்னைச் சுற்றும் உலகம் உற்று நோக்கு அதையே நிறைந்து வரும் அறிவு அறிந்து கொள்வாய் குழந்தாய்! 👇🏼சூ என்னும் ஏமாற்று இயற்கை படைத்த விலங்கினங்களில் மிகக் கொடூர விலங்கினமான மனிதன் என்னும் நாம் உருவாக்கிய ஒரு குரூரமான 'கான்செப்ட்' தான் zoo என்பது. விலங்குகள் பறவைகள் அனை

நீதி மறந்த இனம்

நீதி மறந்த இனம் ஆயுள் முழுவதும் நமக்கென உழைத்து, அம்மாவென்றழைக்கும் பசுவும் காளையும் உழைக்கும் காலம் முடிந்தவுடன் ஒய்வுக் காலம் இல்லாமல் அடிமாடென அனுப்பி வைக்கும் நாமெல்லோரும் மனிதர்தானா? வளர்க்கும் நமக்கே உணவென மாறி உயிரைக்கொடுக்கும் கோழியும் குஞ்சும் கூட்டில் அடைந்து, நடக்க விடாமல் வளரவைக்கும் மனிதர் நாம் மனிதர்தானா? 'சூ'வென்றழைத்து விலங்குகள் அனைத்தும் சின்னஞ்சிறியக் கூண்டினுள்ளே ஆயுளுக்கும் அடைந்து வைத்து அவற்றைப் பார்த்துப் பொழுதைப் போக்கும் கொடூர ஜந்து நமக்குப் பெயர் மனிதர் தானா? செல்லப்பிரானி என்ற பெயரில் காசு கொடுத்து வாங்கி வந்து குப்பி போன்ற தொட்டிக்குள் மீனைப் போட்டுத் தீனி போடும் மனிதர் நமக்குத் தண்டனை என்ன? பறந்து செல்லும் பச்சைக்கிளியின் இறக்கை இரண்டை வெட்டிவிட்டு இரும்புக் கூண்டில் உள்ளே வைத்து 'நாளை நன்றாய்  நான்   இருப்பேனா? நீயே சொல்லு செல்லக்கிளியே?' மனிதாபிமானம் இதுதானா? காட்டில் எங்கும் அலைந்து இலையைத் தின்று விதையைப் போட்டு காடு வளர்க்கும் கம்பீர யானை, யானையைப் பிடித்து இழுத்து வந்து சங்கிலியில் பிணைத்து வைத்து,

ஓய்வு

ஓய்வு ஓய்வுமின்றி ஒழிவுமின்றித் தேடும் திரவியமென்றும் நன்மை தருமாவென்று ஐயம் என்றும் எனக்குண்டு! நாளில் மணிகள் இருபத்தி நான்கு உறங்கும் நேரம் ஏழென்றால் மீதம் உள்ளது பதினேழு. இதிலேழை  மட்டும் தந்திட வேண்டும் திரவியம் தேடும் வேலைக்கு! மீதம் உள்ள பத்தும் நம்மைச் சேர்ந்த சொத்து! வீடு வந்த பிறகும் உடன் வராத மனமும், வேலை பற்றி நினைவில் ஆழ்ந்திருக்கும் சிந்தையும் அளிக்கப் போவதில்லை அமைதியென்ற உணர்வை! பரந்திருக்கும் பூமியில் விரிந்திருக்கும் வாழ்வு, வந்ததிங்கே என்பது திரவியம் தேடத் தானா? பின்னெதற்கு வந்தோம்? அறிய நமக்கு வேண்டும் தேவையான ஓய்வும் தெளிந்திருக்கும் மனமும்! முனைப்பெதுவுமில்லாமல் விரிந்து பரந்த வெளியென்று சஞ்சரிக்கும் மனம், தேவை இங்கு தினம் ஞானம் என்ற குணம் வந்து சேர நம்மிடம்! குற்றமில்லா ஓய்வொன்றே தருமிந்த மனம்! விருப்பமில்லா வேலை 👇🏼 நான் பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் பொழுது விடுமுறை வந்தால் மகிழ்ச்சிதான் என்றாலும், எப்பொழுது விடுமுறை வரும் என்று என்றுமே ஏங்கிக் கிடந்தது கிடையாது. மருத்துவ படிப்பு முடிந்து கண்ணுக்குத் தனியாக மேற்படிப்பு  படிக்

திட்டமெல்லாம் நடப்பதில்லை

திட்டமெல்லாம் நடப்பதில்லை போட்டு வைத்த திட்டமெல்லாம் போட்டபடி நடந்தால், அடுத்தடுத்து என்னவென்று அச்சுப்போல தெரிந்து விடும்! நடப்பதெல்லாம் திட்டப்படி, புதிதொன்றும் இல்லையென்றால், பள்ளிக்கூட அட்டவணை இட்டதுபோல் வாழ்வாகும்! உள்ளபடி உலகிலே அப்படியொன்றும் நடப்பதில்லை! ஆயிரம்தான் திட்டங்கள்  போட்டாலும் நாமெல்லாம், எல்லாமே மாறிவிடும் சொல்லாமல் நம்மிடம்.. நாளையென்ன நடக்குமென்று யாரும் சொல்லல் ஆகா, சொல்லிவிட்டால் அவருமே ஆண்டவராய் ஆவாரே! நாளைக்கென்று திட்டம் பல போடுவதை விட்டு விட்டு, இன்றைக்குக் காரியத்தை நன்றாக நாம் செய்தால் நிச்சயமாய் நாளை நமதென்றே ஆகும்! தவிடுப்பொடியான திட்டங்கள்👇🏼 பொதுவாக அனைவரின் வாழ்விலும் ஒரு (design) வடிவமைப்பிருக்கும். என் வாழ்வின் வடிவமைப்பில் நான் மிகவும் விரிவாகத் திட்டம் போட்டது எதுவுமே கிட்டத்தட்ட நடந்ததில்லை, அப்படியே நடந்தாலும் அது நன்றாக திருப்திகரமாக அமைந்ததில்லை. திட்டமே போடாமல் நடந்தவை எல்லாம் ஓரளவு எனக்கு திருப்திகரமான நன்றாகவும் அமைந்திருக்கின்றன. இதில் என்னவென்றால் நாம் ஒன்றை மிகவும் விரும்புவது என்பது வேறு, அதற்காக திட்டம் போட

அறிவாளி யார்

அறிவாளி யார்? பள்ளி படிக்கும் காலத்தில் படிக்கும் பாடம் எதிலுமே நானே முதலாய் வந்ததால் அறிவாளி  என்ற எண்ணம் என்னில் ஊறிப் போனது. அறுபதில் திரும்பிப் பார்க்கிறேன் படித்ததை மனதில் வாங்கிப் பின் அதையே எழுதி கொடுப்பது அறிவென்று கூறல் எங்கனம்? படித்ததை மூளையில் பதித்து பரீட்சையில் எழுதிக் கொடுத்தால் அதைத் திறமை என்று கூறலாம் அதில் பெருமை என்பது அவ்வளவே! புத்தகத்தைப் பார்த்துப் படித்து வளர்ந்த அறிவு அன்றாட வாழ்க்கையிலே அவ்வளவாய்ப் பயனில்லை..... சூழ்நிலை எதுவென்றாலும் சுயமாய் சிந்தனை செய்து அடுத்தவர் கூற்றால் சாயாமல் முடிவொன்றெடுக்க முடிந்தால் அது ஒரு வகை அறிவெனலாம்! நேர்கோடான சிந்தனையில் மனதை அடைத்து வைக்காமல் பலவிதமான கோணங்களும் ஆலோசித்து அணுகினால் அறிவாளி எனக் கூறலாம்! இறக்கும் வரை வளர வேண்டும் அறிவும் ஞானமும் சேர்ந்தே இங்கு அதற்குத் தேவை ஒன்றே ஒன்று திறந்திருக்கும் மனமே என்றும்! 🙇🙇🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️ ஐந்தாவது வகுப்பு படிக்கும் வரை வகுப்பில் 10 ராங்கிற்க்கும் கீழ் தான் வாங்குவேன் அதாவது 15, 20, 23 என்று.... ஐந்தா

முகராசி

முகராசி முகராசி என்பதொரு மூட நம்பிக்கையென முன்பு முனைப்பாயிருந்தேன், ஆனால் மனம் அதில் முனைந்தது ஆய்ந்தது அதிலே மெய்யும் சிறிதுண்டென அறிந்தது ஆச்சரியமடைந்தது! எதுவோ எண்ணம் அதுவே வருமது முகத்தில் அதன் எதிரொலிதான் முகராசி என்றொரு தெளிவு, இன்றது வந்தது உண்மை என்றே இதனை எண்ணுகிறேன்! ஆதலினால் புன்னகை தவழும் முகமும் அன்புடன் நோக்கும் விழிகளும் அடுத்த ஜென்மத்திலேனும் அளித்திடுவாய் நீ ஆண்டவனே  🙏 👇🏼என் முகராசி 'அவர் மிக இனிமையான மனிதர் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பார்க்கலாம் நன்றாக உரையாடுவார்'என்று பிறர் கூறக் கேள்விப்பட்டு நான் யாரையாவது (உ_ம்  மருத்துவர் ) பார்க்க செல்லும் பொழுது அந்த உணர்வு எனக்கு வந்ததில்லை. அவர் கூறியது போல இனிமையானவராக இல்லாமல் கொஞ்சம் 'உம்' என்ற முகத்துடன் முசுட்டுத்தனமான ஒரு நடத்தையைக் கவனித்திருக்கிறேன்... எனக்கு பல நாட்கள் ஆச்சரியமாக இருக்கும்.... என்னடா அப்படிக் கூறினார்கள் இவர் இப்படி இருக்கிறார் என்று.....! மிக மிக சமீபத்தில்தான் எனக்கு திடீரென்று ஞானோதயம் வந்தது, இது நம் முகத்தை வைத்து அவர் நடத்தையில் மாறுதல் வரு

முகஸ்துதி

முகஸ்துதி 'உன்னைப் போல யாருமில்லை உன் செயலைப் போல ஏதுமில்லை! நீ செய்வது எல்லாம் அருமை நீ இங்கிருப்பதுமே ஒரு பெருமை! அறிவென்றாலும் நீயே அன்பென்றாலும் நீயே! மற்ற மனிதன் முட்டாளே, மூளைமழுங்கிய அறிவிலியே! இப்படி யாரும் சொன்னாலும் இதுபோல் எதுவும் பகன்றாலும் இதுவே முகஸ்துதி என்பதை அறிந்து கொள்வாய் நெஞ்சே.... உண்மை என்பது இதிலில்லை நன்மை என்பது அறவே இல்லை இதையும் நீயே அறிவாய், அறிந்து தெளிவாய் நன்னெஞ்சே! உன்னைப்பற்றி நீயே உணர்ந்து கொள்வது நலமே பிறரின் கூற்று எதுவாயினும் சிந்தனை செய்த பிறகே ஏற்றுக் கொள்வாய் மனமே! சுயமாய் சிந்தனை செய்ததனால் வாழ்வில் வளத்தினைப் பெறுவாயே! வளமென்றால் அது பணம் அல்ல மனத்தின் வளமதைக் கூறுகிறேன்! முகஸ்துதி  இதுவே என்றென மனமுணரா வண்ணம் பேசிடும் மகிமை உண்டு சிலருக்கு மனமே  இதை நீ மறவாதே மெய்கள் எதுவென உணர்ந்து மகிழ்ச்சி காண்பாய் வாழ்வினிலே! முகஸ்துதியும் நானும் 👇🏼 நான் பள்ளி படிக்கும் காலத்தில் என் தந்தையார் கூறுவார் எங்கள் ஊர் ஆட்களைப் பற்றி.... 'என்ன கவுண்டரே* ன்னாப் போதும் கலப்பைய தொப்புனு போட்டுருவான்' என்று. அதாவ

கெடாது நெகிழி

கெடா நெகிழி நெகிழி நெகழி என்றுரைத்தால் அழகி அழகி என்றே செவியில் விழுகின்றதே சில நேரம்... அழகோ இலையோ நானறியேன், அழுகல் மட்டும் ஆகாது எத்தனை வருடம் ஆனாலும். மனிதனுக்காயிரம் பயனென்றாலும், இதனாலிந்தப் பூமிக்குக் இன்னலன்றி வேறில்லை. எந்தப் பொருளாய் இருந்தாலும் அழுகிமக்கிப் போனாலே பூமியினுள்ளேதான் கலந்து புத்துயிர் உரமாய் மாறிடும். மாறுதலில்லா எப்பொருளும் மரிக்கச் செய்யும் பூமியின் உயிரை, நிலத்தில் நீரில் எதிலுமே நிலைக்க முடியாதெவ்வுயிரும் மக்கா நெகிழிப் பொருளாலே! அதனால் மனிதர் நாமும் அறிவுகள் ஆறின் துணையோடு, நெகிழிப் பொருள் எதுவாயினும் மறுசுழல் முறையோடு மீண்டும் மீண்டும் பயன்படுத்தி, பூமியின் மாசைக் குறைத்தோமென்றால், பல்லுயிர் பெருகி வளமாகி, நமக்கே நண்மை பயக்கும் நாளை, சுயநலமான நோக்கில் கூட நெகிழிப்பொருள் ஆகாது! நம்மால் இயன்றது...👇🏼 ஏறத்தாழ நூறு வருடங்களாக நெகிழி நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்டது. அதனால் இனிமேல் நெகிழி இல்லாத வாழ்க்கை உருவாகுமா என்று தெரியவில்லை. ஆனால் நெகிழியினால் வரும் கெடுதல்களை இன்றைக்கு நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்... அக்கெட

நீச்சலும் கையெழுத்தும்

நீச்சலும் கையெழுத்தும் நீருக்குள்ளே மீனைப்போல, கையைக் காலை வீசி போட்டு நீரின் தூரம் எதுவென்றாலும் அம்பைப் போல முன்னே செல்வது கண்டிப்பாக பெரிய சுகமே! நீச்சல் எனக்குத் தெரியாதென்பது நிச்சயமாக மனக்குறையே வருடம் இத்தனை சென்ற பின்னே வருமா பழக்கம் அறியேன் நானே? குழந்தைப் பருவ ஞாபகம் ஒன்றில், குட்டிச் சிறுவன் அத்தையின் மகன் கிணற்றுச் சுவரின் மேலிருந்து நீருக்குள்ளே அம்பாய்ப் பாய்ந்து மேலும் கீழும் நீச்சலடித்து நகைத்துக்கொண்டே பார்ப்பான், மேலே நின்று அவனை ஏங்கிப் பார்க்கும் என்னை! என்னையொத்த சிறுமிகளான அத்தை மகளும் மாமன் மகளும் அங்குமிங்கும் தண்ணீருக்குள் இஷ்டம் போல ஆடுவதை கிணற்றுப் படியின் மேலமர்ந்து பார்ப்பது மட்டும் என் வேலை.. வருடம் சிலவும் சென்ற பின்னே விடுமுறைக்குக் கிராமத்துக்கு விரும்பி வரா என் தம்பி, எவ்வாறென்று நானறியேன் அந்தக் கிணற்றில் அதே கிணற்றில் நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டான்! அவனின் விடாமுயற்சியா? ஆண்பிள்ளை என்ற கவனிப்பா? சரிவர எனக்குத் தெரியவில்லை! நிறைந்த வாழ்வில் சிற்சில குறைகள்👇🏼 நான் மகிழ்ச்சியடைய வேண்டிய எத்தனையோ விஷயங்களை வாழ்க்

விழிப்புணர்வு

விழிப்புணர்வு சுற்றிலும் நடப்பது என்னென்ன நடப்பதின் அர்த்தம் என்ன அதனைத் தொடரும் விளைவுகள் என்ன விளைவால் நமக்காவது என்ன என்பதையெல்லாம் உணரும் அறிவும், நினைவின் உள்ளே நடப்பது என்ன நடக்கும் எண்ணங்கள் என்னென்ன ஏன் அவை வந்தன? வந்ததினால் வரும் செயல்கள் என்ன, என்பதை எல்லாம் தெளிவாய் உணர்ந்து உள்ளும் புறமும் அறியும் மதியே விழிப்புணர்வென்பது அதுதானோ? ஆமாமென்றால் எனக்கது குறைவு! இத்தனை வயது ஆனபின்னே இனிமேல் வருமா அறியேன் நானே இருப்பதைக்கொண்டு நடப்பதைத் தவிர வேறொன்றறியேன் பராபரமே! 👇🏼எனக்கிது குறைவு மேலே கூறிய விழிப்புணர்வு எனக்கு மிகவும் குறைவு. என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சுற்றியிருக்கும் பொருட்கள், காதில் விழும் செய்திகள், இவைகளை நான் ஓரளவுதான் கவனிப்பேன். மிகவும் கூர்மையாக அனைத்தையும் உள்வாங்கும் அளவிற்கு எனக்கு கவனிக்கும் தன்மை கிடையாது. இதை என்னில் இருக்கும் ஒரு குறையாகவே நான் கருதுகிறேன். எந்த ஒரு மனிதராக இருந்தாலும் விழிப்புணர்வு என்பது அத்தியாவசியமான ஒன்று. நாம் என்ன தொழில் செய்கிறோம், பணம் சம்பாதிக்கிறோமா இல்லையா, சாதனை செய்கிறோமா இல்லையா, என்பதெல்

மனிதன் மனிதனே

மனிதன் மனிதனே உலகத் தலைவர் ஆனாலும் நாட்டின் முதல்வர் என்றாலும் தளபதி பொறுப்பில் இருந்தாலும் மனதில் அனைவரும் மனிதர்களே! உணர்ச்சிகள் உள்ள உருவங்களே! அவரிடம் அச்சம் தேவையில்லை தயக்கமென்பது வேண்டியதில்லை. மனதைத் திறந்து பேசலாம் நினைத்ததை அழகாய்க் கூறலாம்.. அவரின் அல்லல் உணரலாம் அவர்  நம் துன்பம் அறியலாம் பேசும் விதத்தில் பேசலாம் நினைத்த காரியம் முடிக்கலாம்! இருவரும் நண்மை அடையுமாறு இடைஞ்சல் இல்லா நிலை வரலாம் இதற்குத் தேவை சிந்தையின் பலம் இதனுடன் சேர்ந்து காலமும் நேரமும். இதனை உணர்ந்தோருக்கு நிச்சயமாக தன்னினும் மேலே உள்ளோரிடமும் தன்னிடம் கீழே உள்ளோரிடமும் இரு வேறு மனிதர் தம்மிடமும் இனிமையான உறவிருக்கும்! என்னிடம் இல்லை empathy.. 👇🏼 இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, மேற்படிப்புக்குப் பிறகு நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்தின் சீனியரான தாளாளர் மகன் திருமணத்திற்கு அனைவருக்கும் அழைப்பு கொடுத்தனர். அதே தேதியில் என்  தம்பி திருமண 'நிச்சயதார்த்தம்' நடந்ததால் என்னால் திருமணத்திற்குச் செல்ல முடியவில்லை. அதனால் நான் ஒரு வாழ்த்து மடலை முதலிலேயே கொடுத

விவசாயம் வெள்ளாமை

விவசாயம் வெள்ளாமை ஆதியான காலத்தில் அன்றைய மனிதன்  செய்ததென்ன? தானே விளைந்த காய்களை கனியப் பழுத்த பழங்களை பரித்துத் தின்றான் உயிர் வாழ்ந்தான். அதற்கும் மேல் என்ன செய்தான்? அங்கே கண்ட விலங்குகளை வேட்டையாடி விருந்துண்டான்... பின்னே செய்தான் விவசாயம் அன்றே பிரிந்தான் இயற்கையினின்று , அதற்கு மேலே மருந்துமிட்டு அள்ளியெடுத்தான் வெள்ளாமை, மருந்தால் சிதைந்த அன்னைபூமி, தேறுவாளா தெரியவில்லை... அள்ளியெடுத்த வெள்ளாமை அளவில்லாமல் சமைத்தெடுத்து, மிஞ்சிப்போன உணவெல்லாம் சிந்திக்காமல் வீசியெரியும் பொறுப்பில்லாத பழக்கத்தை நாமெல்லோரும் குறைப்பது, பாடுபடும் விவசாயிக்கும் பலன் கொடுக்கும் பூமித்தாய்க்கும் நாம் கொடுக்கும் நன்றியுரை! ஆடம்பரமாய்த் திருமணம் முடிக்கும் இருமனமிதை மனதில் வைத்துத் திருமணம் செய்தால் நன்மைபலவும் உண்டாகும்! இயற்கையை விட்டுத் தூர.... 👇🏼 இன்று அனைவரும் மருந்தில்லா விவசாயம் என்று பேசுகிறோம், இயற்கை முறை என்று பேசுகிறோம், 'perma culture' என்றும் பலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்,perma cultureஐத் தன்னிறைவு விவசாயம் என்ற நான் அர்த்தம் கொண

வீடும் வீதியும்

வீடும் வீதியும் தனியொரு தீவாய் இருத்தலென்பது தன்னால் இங்கே முடியாதென்று, அமைத்துக் கொண்டார் மனிதரெல்லாம் சமூகமென்றும் ஊரென்றும். சட்டதிட்டம் போட்டுக்கொண்டார் எத்தனை மனிதர் இருந்தாலும் என்றும் பிரச்சினை வாராதிருக்க! 'சட்டம் என்ன சொல்வது! சொன்னபடி செய்வதா? என்னால் அது ஆகாது,என் எண்ணம் போல செய்குவேன்! சரி சமமாக அனுபவிப்போம் சமூகத்தின் நன்மைகளை, சார்ந்து நடக்க மாட்டோம் சமூகம் போடும் சட்டத்தை!' என்று கூறும் மனிதர் எண்ணிலடங்கா உள்ளனர் இந்தத் திருநாட்டிலே! வீட்டைப் பெருக்கிப் பள பள வென்று வைத்தருக்கும் நாமேதான், வீதியிலே குப்பைகளைப் வீசிவிட்டுப் போகிறோம். வீசுமந்த மனிதருக்கு சட்டம் அறியாமலலில்லை, உடம்பு முடியாமலலில்லை! கண்ணோட்டத்தின் கோளாறிது, வேறொன்றுமில்லை! வயதான எங்கள் மனம் திடமாகிப் போனதே, வழக்கமினி மாறுமோ தெரியவில்லை..... நாங்களினி மாறவேண்டும் என்றெண்ணினால், நீங்கள் ரெண்டு போட வேண்டும் எங்களையே, இன்றிருக்கும் இளைய  தங்கங்களே! சின்னஞ்சிறிய சிறார் நீவிர் சமூகத்தில் பொறுப்புடனே வீட்டைப் போல் வீதியும், வீதி போல ஊரையும் சுத்தமாக வைத்து சுகாதாரம் க

எண்ணினால் எய்தலாம்

எண்ணினால் எய்தலாம் எண்ணத்தின் வலிமை எப்படிப்பட்டது என்பதை என்றோ கேள்விப்பட்டேன், இருந்தும் மனதில் ஐயம் கொண்டு, இருந்தேன் நானும் ஒரு பொழுதில். ஆனாலுமே அவ்வப்போது, வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை,  அவை நடந்த காரணம் என்னவென்று எண்ணிப்பார்த்தால் சிலநேரம்... எண்ணம்தான் அந்தக் காரணமோ? என்னும் சிறிய ஐயம் ஒன்று வருகிறதின்று என் மனதில். ஒரே குறியாய் ஒன்றை நினைத்து, நினைத்துக் கொண்டே நாமிருந்தால், உலகில் எங்கும் விரவி இருக்கும் அதிசய சக்தி அதே சக்தி, அந்த ஆசையை நமக்கெனவே நடத்திக்காட்டும் என்பதையே  நண்பர் பகர்ந்தார் ஒரு நாளில். புத்தகம் ஒன்றில் பல நாள் முன்பு படித்தும் இருந்தேன், இந்தக் கூற்றை இதே கூற்றை! எண்ணும் அந்த ஒரே எண்ணம் என்றும் வேண்டும் நம் மனதில்,  அடிப்படை எதுவும் இல்லையென்றாலும்  நடக்கும் என்ற உறுதியுடன்! பற்றுறுதி என்பது இதன் பெயராம் 'ஃபெய்த்' என்பார் இதை ஆங்கிலத்தில்! 63 எண்ணம் பற்றிய நினைவு 👇🏼 சில நேரங்களில் நாம் ஒன்றை மிக விருப்பப்பட்டு நினைத்துக்கொண்டே இருந்தால், திடீரென்று எதிர்பாராத ஒரு நாளில் அது நடந்து விடுவதை அநேகமாக நாம் அனைவருமே கவனித்திர

வைரஸ்

வைரஸ் மனிதனைத் தாக்கும் நுண்ணுயிரி,  பாக்டீரியா என்பது பெயராகும், பலவகையுண்டு பாக்டீரியாவில், மனிதன் உடம்பினுள்ளே போனால் இரு வகையான செயல்பாடுண்டு, உதவி என்றும் கெடுதி என்றும் இரண்டும் உண்டு அதிலேயே! இந்தக் கிருமியைக் கொல்வது என்ன? இதனினும் நுண்ணிய இன்னொரு கிருமி வைரஸ் என்று பெயராகும்! வைரஸ் தாக்கிய பாக்டீரியா விரைவில் சாகும்  சிறுவுடல் வெடித்து, வெடிக்காவிட்டால் உணவாகும் வைரஸ் என்ற கிருமிக்கு. கிருமித் தாக்கம் தாங்காமல் இறந்து போகும் பாக்டீரியா.  அதனுள்ளே இருந்த வைரஸ் அடுத்த கிருமியின் உடலுள் போகும்! வைரஸ் தாக்கும் பல உயிரில்   மனித உயிரும் ஒன்றாகும்,  வைரஸ் தாக்கம் காரணமாக மனிதனும் இறந்து போகக்கூடும். இந்தக் கிருமிக்கான மருந்து    இன்னும் தெளிவாய்த் தெரியவில்லை. எனினும் மனிதன் மூளையினாலே பிழைத்தெழுகின்றான் பலநேரம், மருத்துவ அறிவின் முன்னேற்றத்தால்! இந்த சுழற்சி வட்டத்தில் பூமியைத் தாக்கும்  கிருமியுமுண்டு,  பிழைத்தெழுமா பூமியிது?  மடிந்து விழுமா கிருமியினாலே? பூமியைத் தாக்கும் கிருமியது மிக வீரியமான பெரிய கிருமி, அழிக்க முட

கேள்வியும் பதிலும்

கேள்வியும் பதிலும் பலநாள் தேடும் ஏதோ ஒன்று கண்ணின் முன்னே தெரிகின்றது, கையின் அருகே இருக்கின்றது, கண்ணை நாம் திறக்கவில்லை, இன்றுவரை அதைக் காணவில்லை. மனதின் கண்ணைத் திறந்தாலே சட்டென தெரியும் கையின் அருகே! மனதில் தோன்றும் கேள்விகள் யாவும் மிகமிக குழம்பிக் காணும் அன்று கிடைத்த பிறகே தெரியும் அதன் விடையில் எத்தனை எளிமை என்று! அங்கும் இங்கும் அலைய வேண்டாம் அலைந்து திரிந்து தேட வேண்டாம் கையின் அருகில் கண்ணின் முன்னே என்றுமுள்ளது எல்லா விடையும்.... காணும் ஞானம் இருந்தால் போதும்! கதையிலும் படித்தேன் என் கருத்தை 👇🏼 பல வருடங்களுக்கு முன்பு நான் படித்த ஒரு ஆங்கில நாவல் ஞாபகத்துக்கு வருகின்றது. 'அங்கிள் டாம்ஸ் காபின்' என்ற அந்தப் புத்தகம் அமெரிக்க நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையிலிருந்த அடிமை வேலை ஆட்கள் பழக்கமும் அதனால் ஆப்பிரிக்க நாட்டு பிரஜைகள் அடைந்த துன்பத்தை பற்றியும், :ஹாரியட் பீச்சர் ஸ்டவ்' என்ற ஆங்கிலேயப் பெண்மணி எழுதிய ஒரு நாவல். அதில் அடிமைத்தளையில் கட்டுண்டு சொல்லொன்னாத் துன்பத்தில் கிடக்கும் ஒரு பெண் எப்படியாவது தப்பித்து ஓட வேண்டு

புதையலெடுத்த பூமி

புதையலெடுத்த பூமி பூமிக்குள்ளே புதைந்திருக்கும் தங்கம் வைரம் எல்லாம் காதில் கழுத்தில் மின்னலாம் பணமாய்க் கூட மாறலாம்.... வயிற்றுக்குள்ளே செல்லுமோ? உயிருக்குணவாகுமோ? எண்ணைக் கிணற்றின் கதையதுவும் தங்கச் சுரங்கம் போன்றே! எண்ணெயதனை எடுக்க எடுக்கப் பெருக்கிக்கொடுக்கும் பணத்தை, பக்க விளவைப் பார்த்தால் பணத்தின் பயன் ஒன்றுமில்லை! விவசாய பூமியிலே விளைச்சலுக்குப் பின்னே இயற்கை பாக்கி உண்டு, இன்னும் அதைச் சோலையாக்க  வாய்ப்பு மிச்சம் உண்டு, உலோகச் சுரங்க பூமியும் எண்ணெய் எடுத்த நிலமும் பாதிப் பாலை ஆகிடும்! சோலை வாழ்க்கை சுகமா, பாலை வாழ்க்கை பலமா? எண்ணெய்க் கிணறு வெடித்ததால், தெறித்து வந்து எண்ணெய் சிறகின் மேலே படிந்ததால், பறக்க முடியா பறவை இனம் மடிந்த கணக்கு பல்லாயிரம், கணக்கிலடங்கா இறந்த கணக்கு கடலிலுமே நடந்த நாள் 2010 இல் வந்ததொரு கரியநாள்! எண்ணெய் தங்கம் வைரம் என்று எதை எடுத்த போதிலும், உயிருக்கேதும்  சேதமின்றி பூமித்தாயும் கெடா வன்னம், பார்த்தெடுத்தல் நலமே. அதிலுமோர் அளவு வைத்தல் அதனினும் பெரும் புண்ணியமே! 60 ஏன் வந்தன எண்ணெய் பற்றிய எண்ணங்கள்?  👇🏼 சி

மேதைக் குழந்தைகள்

மேதைக் குழந்தைகள்   பிறந்த பின்னே அறிவாளியாகக் கொடுங்கள் இந்த பானத்தை, பிறக்கும் முன்னே ஊக்கமாகக் குடியுங்கள் இதைப் பாலுடனே, வளரும் குழந்தை உயர வளர அருந்தச் சொல்லு சத்துப் பாலை, பள்ளியில் முதலாய் அவனே வரவே உண்ண வேண்டும் இந்த உணவை, விளையாட்டிலும் பரிசுகள் வாங்கக் கொடுங்கள் இந்த ஊக்கபானம், எல்லாவற்றிலும் அவனே முதலாய் வந்தே தீர, வேண்டும் வேண்டும்! வளர்ச்சியில் படிப்பில் விளையாட்டிலென்று நம் குழந்தை மட்டும் வர வேண்டும்! ஏனைய குழந்தை எல்லாரும் வந்தாலென்ன போனாலென்ன? ஒன்றுமில்லை ஒன்றுமில்லை! நம்மைச் சுற்றி உலகமெல்லாம் நவிலும் பாடம் இதுவே இன்று! உலகின் மூலை முடுக்கெல்லாம், மற்றும் இந்தியத் திருநாட்டில், தாய்த்தமிழ் நாட்டிலும் சேர்த்து, அறிவாளியென்றும் மேதையென்றும் இருந்தோரெல்லாம், இதயக்கண்ணில்  தெரிகின்றாரே! ராமானுஜம், ராமன் சி.வி, சிவாஜி என்னும் நடிப்பின் ஆளுமை, முதல்வரான எம்ஜிஆர், கலைஞரான கருணாநிதி, அமெரிக்காவின் ஆபிரகாம், ஆப்பிரிக்காவின் மண்டேலா பிரான்ஸில் பிறந்த மேரி க்யூரி... இதுவும் போக இன்றைய உலகில் கூகுள் தலைவர் சுந்தர்  பிச்சை, ஓட்டம் ஓடிய பிடி உஷா, கிரிக்க

நோய் முதல் நாடி

நோய் முதல் நாடி நோயில் தவிக்கும் நோயாளி தானே கூறும் நோயின் கதையை, தீரக் கேட்கும் தன்மை தேவை திண்ணியதொரு மருத்துவராகி நோயின் தன்மை விளங்கிக் கொள்ள! அவர் சொல்லும் கதையைக் கேட்க கேட்க நோயின் கூறு எதுவென்று தன்னால் விளங்கும் நமதறிவுக்கு! மூலக்கூறு எதுவென்று நமக்குக் கொஞ்சம் விளங்கிய பின்னே, பரிட்சை செய்து பார்க்க வேண்டும் நோயாளியவரின் உடம்பு தன்னை, அதற்குப் பிறகு தேவையென்றால் ஆய்வுக்கனுப்பலாம் இரத்தத்தை, அதன் முடிவில் விளங்கும் நோயின் கதை. அதன் பின்னாலே சிந்தனை செய்தால் நோயின் தன்மை என்னவென்று விளங்கிடும் தெளிவாய் நமதறிவுக்கு! முடித்து வைக்க நோயின் கதையை மருந்துகள் எதுவும் தேவையா, விளக்கம் மட்டும் போதுமா? சிந்தித்தாலே சில மணித்துளிகள்  விளங்கிடும் தானே  நமதறிவுக்கு! விளங்கிய பின்னே அவரிடமே எடுத்துக் கூற எடுக்க வேண்டும் நிதானமாக சில மணித்துளிகள்... அவ்விதம் விளக்கிக் கூறாவிட்டால்  விடயம் விளங்காதவரறிவுக்கு! இருவர் அறிவும் தெளிந்த பின்னே கேட்டு வாங்கலாம் கட்டணத்தை மருத்துவர் அந்த நோயாளியிடமே! செய்யும் தொழிலாம் மருத்துவத்தை, அவசரம் ஏதும்  இல்லாமல் செப்புடன் செய்

கேரட் பீட்ரூட்

கேரட் பீட்ரூட் சோறு  செய்வதெப்படியோ அரிசியும் ஊறனும் அப்படியே, தளதளவென்ற கேரட்டும் கருகருவென்ற பீட்ரூட்டும் கொஞ்சமே கொஞ்சம் முட்டைக்கோசும், துருவித் துருவித் தட்டில் போட்டு தனியா எடுத்து வைப்பாய் தம்பி! சின்னச் சின்ன சீரகம் பூண்டுப்பல்லும் இஞ்சித் துண்டும் பச்சைப் பசேல் மிளகாயும், அனைத்தும் ஒன்றாய் அரைத்து விழுதாய் எடுத்து வைப்பாய் எந்தன் கண்ணே! அடுப்பில் ஏனம் ஏற்றி காய்ந்ததும் நெய்யை ஊற்றி அரைத்த விழுதை உள்ளே போட்டு கரண்டி கொண்டு கலக்கிவிட்டு இரண்டு நிமிடம் வதக்கியதும் அரைக் கரண்டி மிளகாய்த் தூள் அதே அளவு மஞ்சத் தூள் அளவுக்கேத்த உப்புடன் மூன்றும் உள்ளே தூவிவிட்டு, துருவிய காயை உடனே கொட்டி மெதுவென்றூறிய அரிசி மெல்ல உள்ளே போட்டுவிட்டு, வெந்நீர் ஊற்று இரண்டுக்கொன்று வெந்த சோற்றைக் கொஞ்சம் கிளறி ஏனமதிலே போட்டு வைத்தால் சிவந்த நிறமும் புதிய சுவையும், நிறைந்த சோறு சூடாய்த் தின்றால்! தொட்டுக்கொள்ளக் கண்டிப்பாய் ஏதோ வேண்டும் என்போருக்குத் தயாராய் இருக்கு தயிர் பச்சடி! 57 சிவந்த சாதம் உதித்த விதம் 👇🏼 🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕 ‌‌‍‌பல வருடங்களுக்கு

யாருக்கு சொந்தம்

யாருக்கு சொந்தம்? அன்னை என்று ஆன பின்பு அன்புடன் பேணிய அருமை மகன், அவனும் வளர்ந்து ஆளாகி ஆனான் அழகிய ஆண்மகனாய், அன்னையைப் பார்த்தான் அருமையாக... வருடங்கள் பல போனதும் வயது வந்தவன் ஆனதும் வாழ்வை அவனுடன் நடத்தவே வந்தாள் மனைவி என்பவளே. அழகும் குணமும் நிறைந்தவள் அன்பைப் பொழிந்தாள் கணவனிடம் அவ்வப்போது சண்டை வரும் அன்றே முடியும் பேச்சின் மூலம். தாயின் மனதில் சஞ்சலம் தனயன் தன்னை தனியே விட்டு தன்னைக் கொண்டவளுடனே போய் விடுவானோ? கொண்டவளுக்கும் சந்தேகம் கணவனுக்குத் தாய் முதலா தான் முதலாவென்று கேட்டுக் கொள்வாள் கணவனிடம் கேள்வியிதை தினமொரு முறை. அழகுப் பையன் மத்தளமாய் ஆனான் திருமணம் ஆன பின்னே அவன் தாயும் தாரமும் மறந்தனரே அவன் தனியொரு மனிதன் என்பதையே! தாயின் மூலம் தான் வந்தான் தாயிடம் இருந்து இல்லையம்மா தான் வந்து பிறந்தது இவ்வுலகில் தன் வாழ்வைத் தானே வாழ்வதற்கு... வாழ்வில் முதலடி கொடுத்தவள் தாய் வாழ்க்கை த்துணையாய் வந்தவள் தாரம் முறையில் இருவரும் வேறென்றாலும் அன்பில் இருவரும் சமமம்மா! வாழ்வை வளமாய் ஆக்கிடவே வரவேண்டும் சொந்தம் என்போரே! அடிமை என்று யாரும் இல்லை

ஆளுமை

ஆளுமை நல்ல உயரம் சிவந்த நிறம் நிறைந்த கூந்தல் விரிந்த கண்கள்... பார்க்கும் பார்வைக்கினிய உருவம் உடுத்தும் உடையில் இருக்கும் நேர்த்தி அனைத்தும் கொடுத்தது அழகிய தோற்றம்! தோற்றம் தருமா ஆளுமை என்பது? தராதென்றே நினைக்கின்றேன்.... சின்னதான உருவமும் சுமாரான நிறமும் நேர்த்தி என்று எதுவும் இல்லா விழியும் மூக்கும் வாயும் முகமும்.... இருந்தும், அவர் நடையில் பேச்சில் பார்க்கும் விதத்தில் வெளியே  தெரியும் மனத்தின் வலிமை எல்லாம் சேர்ந்தது, அவருக்கென்றோர் ஆளுமையானது! 55 ஆளுமை என்றால் இவர்👇🏼 ஒருமுறை டிவியில் திரைப்பட நடிகை லட்சுமி அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி   தன் நினைவலைகளைக் கூறினார். அவர் கூறியது ராஜராஜசோழன் படப்பிடிப்பின் பொழுது தனக்கு ஏற்பட்ட அனுபவம். வீட்டிலிருந்து சூட்டிங் இடத்திற்கு அன்றாட உடையில் வந்த சிவாஜி கணேசன் அவர்கள் லட்சுமியுடன் பேசிவிட்டு மேக்கப் அறைக்கு சென்றார். அவர் ராஜராஜ சோழனாக உருமாறி வெளியே வந்து நின்றவுடன் அவரைப் பார்த்த லட்சுமி கொஞ்சம் அதிர்ந்து விட்டதாக கூறினர். உயரத்தில் சிவாஜி தன்னை விட மிக அதிக உயரமில்லை,  தன்னுட

மாறும் கோணங்கள்

மாறும் கோணங்கள் பத்து வயதில் என்னெண்ணம் பதினைந்து வயதில் மாறிவிடும், பதினைந்து வயதுக் கண்ணோட்டம் இருபத்தைந்தில் வேறாகும், முப்பது வயதுப் பார்வையெல்லாம் நாற்பதிலே நகைப்பு வரும்.... நாற்பது வயதைத் தாண்டியவுடன் நோக்கும் கோணம் எல்லாம் மாறும், அதுவரை இருந்த கருத்தெல்லாம் குழந்தைத்தனமென எண்ணம் வரும் இன்னும் மேலே போகப்போக ஐம்பது அறுபது வயதினிலே வருடம் ஒன்றாய் எண்ணம் மாறும். ஒருவர் மனதில் இத்தனை என்றால் மற்ற மனிதர் எல்லாம் சேர்ந்தால் எண்ணில் அடங்கா கோணங்கள் இருக்கும்...  நாம் இருபது வயதில் நினைப்பது எல்லாம் ஐம்பது வயதில் மனதில் இல்லை, ஐம்பது வயது நமக்காகும் போது நம்முடன் இருக்கும் இருபது வயதின் எண்ணம் என்பது இவ்வாறேதான் இருக்கும் என அமைதி அடைந்தால்  நலமது நமக்கே! கேளிதை மனமே ஒருகணமே ஒருவர் போன்றே எல்லாரும் எண்ணம் இங்கே கொண்டு விட்டால் எங்கே சுவை வாழ்க்கையிலே? 54 இப்பாடலைப் பற்றிய புலனாய்வு👇🏼 கல்லூரி படித்த காலத்தில், நல்ல கணவர் வேண்டுமென்றால் செவ்வாய்க்கிழமையன்று காலை விரதமிருந்து கோவிலில் எலுமிச்சம்பழ தீபம் வைக்க வேண்டுமென்று கேள்விப்பட்டு, சில மாதங்கள் வ

ஒட்டுவதும் ஒட்டாததும்

ஒட்டுவதும் ஒட்டாததும் 'டெப்ஃலான்' பூச்சு போட்ட கல்லில், தோசை மாவை ஊத்திக் கொஞ்சம் கூட ஒட்டாமல், திருப்பிப்போடா தோசையாக, எண்ணை எதுவுமில்லாமல் சுட்டெடுக்க சுளுவாக, எடுத்துத் தட்டில் வைத்தால் வெள்ளை வெளேர் தோசை பார்க்க மிகவும் அழகாக, ருசிக்க மட்டும் சுமாராக ஏதோ ஒன்னு தோசையின்னு! சமைக்கும் பொருள் எதுவுமே ஒட்டாதிருக்கும் ஏனம்,அது ஒட்டாதிருக்க வேண்டியே கலக்கப்படும் ரசாயனம்.... கண்டிப்பாக அதுவும் நன்மையில்லை உடம்புக்கே! சமைக்கும் பொருளில் எல்லாம், ஒட்டிக் கொண்டு வரும் இரும்புக்கல்லாம் தோசைக்கல், அதிலே சமையல் செய்தால் ஒட்டிக் கொண்டு வரும் இரும்புப் பொருளாம் ஓர் சத்து  நன்மையாகும் நம் உடம்பில்! நல்ருசியும் வரும் நம் நாவில்! இரும்புக் கல்ல அடுப்பில் வெச்சு இருகரண்டி மாவை ஊத்தித் தாராளமாய்க் கடலை எண்ணெய் தெளிச்சு விட்டு திருப்பிப் போட்டு மொறுமொறுன்னு சுட்டெடுத்தா அதுக்குப் பேர்தான் தோசை! காஞ்ச மிளகாய் போட்டரைச்ச தேங்காய் சட்னி தொட்டுக்கிட்டா அதுக்குப் பேரு சொர்க்கம்!  👇🏼 சமீபத்தில் முகநூலில் இந்த 'நான்ஸ்டிக் குக்வேரை'ப்பற்றி ஒரு ஃபார்வர்ட் அன