ஏன் படைத்தாய் மனிதனை?

ஏன் படைத்தாய் மனிதனை?

பூமியென்ற சொர்க்கத்தில்,
புற்றிலிருந்து ஈசல் போல்
பரவி எங்கும் பெருகி,
இருக்கும் வளத்தை எல்லாம்
இயன்றவரை சுரண்டும்
மனிதனை ஏன் படைத்தாய்,
இப்பிரபஞ்சத்தில் இயற்கையே?
மனதில் என்ன நினைத்தாய்
இவனை இங்கு படைக்கையில்?

அறிவு தனக்காறென்று
தானே அவன் அறிவித்தான்,
விலங்குக்கு ஐந்து என்று விளங்கிக் கொண்டதெவ்வாறு?
இதை நீ விளக்கமாய்
இயற்கையே எனக்குரைப்பாய்!

மனிதனில்லா பூமியை மனதில் எண்ணிப் பார்த்தால்
மாசேதும் இல்லாமல்
துல்லியதொரு இடமாக
வாழும் சொர்க்கம் இது வேயென இருக்குமென எண்ணுகிறேன்!

வாழுமிந்த பூமியை
வளமாக மாற்றி,
வாழ்ந்த சுவடேதுமின்றி
வரப்போகும் உயிர்களுக்கு,
விட்டுச் செல்லும் வழக்கமுண்டு
வானில் மண்ணில் நீரில் என்று வாழும் விலங்கனைத்துக்கும்!

மனிதர் மட்டுமிங்கு வேறுபட்டு நிற்கிறோம்
முடிந்த மட்டும் பூமியை அழித்து விட்டுச் செல்கிறோம்
சென்ற பின்னும் விடேனென்று கல்லறை கட்டுகிறோம்!
விட்டுச்செல்லும் குப்பை போக வேண்டும் இங்கு யுகங்களே.

சிந்திக்கும் திறன் இழந்து சுயநலத்தில் தனை மறந்து
கற்பனைப் பேயென்ற
பணத்திடம் மாட்டிக்கொண்டு,
மெய்யென்ற பூமியை சுரண்டிக் கெடுத்திடும்
மனிதனவன் மனதை
மென்மனமாய் மாற்றி
பூவுலகைக் காப்பாயா
இயற்கை எனும் சக்தியே?


👇🏼 மாறுமா மனம்?

பூமியைப் பலவிதங்களில் அழித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை கிட்டத்தட்ட கடந்த 30 வருடங்களுக்கு மேலாக  உணர்ந்திருக்கிறோம் நம் நாட்டில். மேலைநாடுகள் சிலவற்றில் அதற்கு முன்பாகவே அதை உணர்ந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
உணர்ந்த அவர்கள் தங்களின் காட்டுப் பகுதிகள் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்,கழிவுகள் மறுசுழற்சி செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். ஆனால் கண்டிப்பாக முழுமையாக எங்கும் செய்வதில்லை. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே கழிவுகள் மலைகளாக பெருகி, கடலையும் நிறைத்து, கடலில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றன.
தங்கள் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் கழிவு மூட்டைகளோடு இறந்து கடற்கரையோரம் ஒதுங்கும் திமிங்கலங்களை நிறைய செய்திகளில் பார்க்கிறோம்.

நம்முடன்  வாழும் நாய் மாடு முதலியவைகளும் பிளாஸ்டிக் பைகளை தின்று குடல் அடைத்து கால்நடை மருத்துவர் சிகிச்சை செய்வதையும் செய்திகளில் பார்க்கிறோம்.

காற்று மாசுபட்டு பல நகரங்களில் தெளிவான காற்றே என்றும் இல்லாத நிலைமையும் உருவாகியிருக்கின்றன. நம்முடைய தலைநகர் டில்லியில் இப்படித்தான் என்று செய்திகள் கூறுகின்றன.

மின்சாரம் தாக்கி யானை, இறப்பு ரயில் வண்டிகள் மற்றும் காட்டுப் பாதையில் போகும் நான்கு சக்கர வண்டிகள் மோதி உயிரிழப்பான விலங்கினங்கள், மனிதனின் கொடுமை தாங்காமல் இறக்கும் விலங்குகள் என்று பலவகை செய்திகள் நம்மைச் சுற்றி சுழன்ற வண்ணம் இருக்கின்றன. மனித மனதின் இயல்பை இயற்கை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும்.
அல்லது நாமே கூட மாற்றிக்கொண்டால் அதைவிட நன்றாக இருக்கும்.










Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

புலியும் முறமும்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

மாட்டுப் பொங்கல்

நகரும் 🐌 நத்தை

வாசலில் மண்புழு

டையப்பர் 👶

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

பக்திப் படம்