புகைபோக்கி



 புகைப்போக்கி


            சமையற்கட்டில் வேலை செய்தால்

        சுற்றிச்சூழும் புகை நிறைய..

          அடைத்துவைத்த கூரை வழியே 

         எப்படிச் செல்லும்  கரும்புகை வெளியே?         

       அந்தக் கால வீட்டில்      இருந்தது 

       அருமையான       புகை போக்கி!


           அடுப்பை எரித்தால் எரியும்

          புகையும் 

தாளிதம் செய்தால்      கிளம்பும்

          புகைச்சலும்

வெளியே செல்லத் தடம் தேவை!

         காற்றும் ஒளியும் வீட்டின் உள்ளே 

         வந்துபோகத் தடம் தேவை!

         பாதை மட்டும் விட்டால் போதும்,

          உள்ளும் வெளியும் செல்லும் வேலை

         காற்றும் ஒளியும் பார்த்துக் கொள்ளும்!


         முழுதும் அடைத்து வீட்டைக் கட்டி 

        மின்சார விசிறி மாட்டி விட்டு,

        இல்லையென்றால் புதிய சிம்னி! 

         இரண்டும் தானே எதுவும் செய்யா 

             மின்சாரம் இருந்தால் மட்டும் ஓடும்,

            மட்டிலா சத்தம் நிறைய போடும்!

           சமையற்கட்டில் உள்ளே படிய 

        புகையைப் பாதி தங்கச் செய்யும்!


          வேலியில் ஓடும் ஓணான் தன்னை 

           வேண்டும் என்று கட்டிக்கொண்டு,

             குடையுது குடையுது

என்று கூவும் 

           கதை போலல்லோ இருக்கிறதிது?!


🏭🏫🏡🏘️🏠⛲🛴🛹🚲


கிட்டத்தட்ட ஒரு இருபது வருடங்களாக என்னுடைய ஆசை, சமையல் செய்தால் மின்விசிறியின் துணையில்லாமல்

புகை தானே வெளியே செல்லவேண்டும் என்பது.

(நான் சிறிய வயதில் பார்த்தது போல).


நான் சொந்த வீடு கட்டும் பொழுது கண்டிப்பாக இதை செய்ய வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன் அதனுடன் வீட்டிற்குள்ளே குளிர்ந்த காற்று வரவும்   வெப்பம் வெளியே செல்லவும் 

தகுந்த  சாளரங்கள் இருக்க வேண்டும் என்றும்  நினைத்துக்கொள்வேன். ஆனால் நாங்கள் திருமணம் ஆனது முதல் 30 வருடங்கள் வரை அடுக்குமாடிக் குடியிருப்புகளிலேயே இருந்ததனால் என்னுடைய ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.


வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் என் தம்பி மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தபொழுது அவர் வீட்டுக்கு  ஒருமுறை நான்

சென்றேன்.

அங்கும்  மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புதான் கொடுத்திருந்தார்கள் .

ஆனால்-

அங்கு அனைத்து மாடிகளிலும் சமையலறை ஒரே மூலையில் ஒன்றின் மேல் ஒன்றாக இருந்தன. ஒவ்வொரு வீட்டு சமையலறையில் இருந்தும், ஒரு சாளரம், அடியில் இருந்து மேல்மாடி வரை சென்ற ஒரு நான்கு அடி விட்டமுள்ள சிமெண்ட் குழாயில்  இணைத்திருந்தது.


சமையல் செய்யும் பொழுதும், தாளிக்கும் பொழுதும், எழும்பும் புகை, காற்றழுத்த இயக்கவியலினால், பக்கவாட்டில் பயணம் செய்து அந்த குழாய்க்குள் சென்று மேலே செல்லும் விந்தையைக் கண்டேன். இது எனக்கு சுட்டிக் காண்பித்தவர் பொறியியல் வல்லுநராக இருந்த என் தந்தை.

எந்தவிதமான மின்சார விசிறியும் அவ்வளவு சுத்தமாக இதுவரை வேலை செய்து நான் பார்த்ததில்லை

'எல் என் டி' கன்ஸ்டிரக்ஷன்ஸ் கட்டிய  குடியிருப்புகள் அவை.


திருப்பூரில் இருக்கும் என் தாய் வீட்டு  சமையலறையில் அடுப்பின்மேலே ஓடும் எக்ஸாஸ்ட் ஃபேன் இருக்கிறது. ஆனால் அதிலிருந்து எப்பொழுதும் எண்ணை  சுவற்றின் மேலிருந்து கீழே ஒழுகி, சுவரை சதா அழுக்காக செய்து கொண்டிருக்கும். அடிக்கடி சுத்தம் செய்தாலும் திரும்பவும் படிந்துவிடும்.  


அந்த மின்சார விசிறியை ஓடவிட்டால் வரும் சத்தம்... அருகில் நின்று சமையல் செய்ய முடியாது. அவசர அவசரமாக முடித்துவிட்டு வெளியே வரவேண்டும்.  நிம்மதியாக நிதானமாக நின்று சமையல் வேலையை செய்வது இயலாத காரியம். இந்த மின்சார விசிறியின் அண்ணன் இப்பொழுது வந்திருக்கும் மின்சார சிம்னி! அவன் போடும் சத்தம் கிணற்று மோட்டார் கூட போட முடியாது. வெறும் சத்தம் தான்.... குரைக்கும் நாய் கடிக்காது என்பது போல் இதுவரை இவர்கள் இருவரும் பெரிதாக எதுவும் புகையை இழுத்து வெளியே விட்டு 😁 நான் பார்க்கவில்லை ஏதோ கொஞ்சம் போல் செய்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.... அதுவும் சிறிது நாட்கள்தான், 

பிறகு அண்ணன்காரன் அடைத்துக்கொள்வான்!  


அதைக் கழற்றி சுத்தம் செய்வது என்பது   பொறியியல் போன்ற படிப்பு படித்தவர்களால் மட்டுமே முடியும், நான் மருத்துவப் படிப்பு படித்ததால் எனக்கு அதை சுத்தம் செய்யத்தெரியாது. 


ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையில் என் தாய் வாங்கி கொடுத்த வீடு தனி வீடு. அடுக்குமாடிக் குடியிருப்பு அல்ல.

வாங்கியபிறகு, நேரம் கிடைத்தவுடன் வந்து, நான் செய்த முதல் வேலை இந்த வீட்டின் சமையலறை, இரண்டு குளியலறைகள், மற்றும் மாடிப்படி என்று நான்கு இடங்களிலும் கூரையில் ஓட்டைகள் போட்டு விட்டேன். என் தாயின் அதிர்ச்சியையும், என் குடும்பத்தாரின் லேசான கிண்டல் கலந்த நகைப்பையும்  கண்டுகொள்ளாமல்......

போட்டு முடித்தவுடன் நம்ம  கரோனா வந்துவிட்டது. ஆகையால் கடந்த நான்கு மாதங்களாக எதுவும் செய்ய முடியவில்லை.  


இப்பொழுது போனவாரம் ஆட்கள் கிடைத்து எல்லா ஓட்டைகளிலும் புகைப்போக்கி போல் செங்கல் வைத்து கட்டிடமும்,  அதன் மேல் வெளிச்சத்திற்காக கண்ணாடியினால் கூரையும் போட்டு விட்டேன்.

காற்று வெளியே போக பக்கவாட்டில் இடைவெளிகள் விட்டிருக்கின்றேன்.

இப்பொழுது சமையல் செய்தால் புகை அழகாக தானே மேலே சென்று அண்ட வெளிக்காற்றுடன் கலப்பது கண்கொள்ளா காட்சி!

(பூமியினுடைய அண்டவெளி...🤗)


அந்தக் காலத்தில் அனைத்து வீடுகளும் இயல்பாகவே இப்படித்தான் இருந்தன.

நான் பள்ளி செல்லும் காலத்தில் வீட்டுச் சமையலறையில்

புகைப்போக்கி இருக்கும். சில வீடுகளில், மத்தியில் இருக்கும் பெரிய ஹாலில் மேலே சாளரங்கள் இருக்கும். அதன் வழியே   வெப்பமான காற்று வெளியேற, கதவு ஜன்னல்கள் வழியே குளிர்ந்த காற்று வீட்டின் உள்ளே வரும். வீட்டு சீதோஷ்ணநிலை நன்றாக இருக்கும். பெரிதாக மின்சார விசிறி, காற்று பதனாக்கி, என்று எதுவும் தேவைப்படவில்லை.(AC ங்க 🤭). 


இன்று குளிர்ச்சி தரும் மரங்களை வெட்டிவிட்டு 

வீட்டையும் அடைத்தது போல் கட்டி விடுகிறோம்.

மின் விசிறியும், காற்று பதனாக்கியும் போட்டு, சுவாசித்த காற்றையே சுவாசித்துக் கொண்டு அடைந்த வீட்டில் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை என்னவென்று கூறுவது என்று எனக்கு சரியாக தெரியவில்லை.

'பெண் புத்தி பின் புத்தி' என்று கூறும் ஆண்கள், இந்தப் புத்திக்கு, ஏதாவது ஒரு பெயர் அவரவரே வைத்துக் கொள்ளலாம்!

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி