படமும் புத்தகமும்

படமும்
புத்தகமும் 🙇


புத்தகம் ஒன்று படித்தவுடன் 
திரைப்படம் ஒன்று பார்த்தவுடன்
ஏன் என்றறியா 
ஏதோ மாற்றம்
நிகழ்ந்து முடிந்து மனதுக்குள்ளே,
சிந்தனை சிறிதே மாறி
மேலோரு படி ஏறி,
எல்லாவற்றின் மறுபக்கம் என்னைப் பார்க்க வைத்து.....
சின்னச் சிறுவன்
தம்பியின் மகன்
இயன்றான் ஒரு நாள் என்னிடம் வந்து
'கணினியில் ஆடும் விளையாட்டைக் 
குறைவாய் எடை போடாதே, 
வாழ்வின் பாடம் அதிலும் உண்டு அறிந்து கொள்வாய் அத்தை நீயே'
அதுபோல் ஏதோ தெளிந்து விட்டோம் 
என்று வந்த தன்னிறைவு!

உன்னதமான படைப்பென்றால் 
இதுவேதானோ அதுவென்று என் மனம் கூறுது அடிக்கடியே!
அப்படிக் கூறிய சிலவற்றை 
பகிர்ந்தேன் இங்கே நண்பர்களே!
12Angry Men  திரைப்படமும்
Millennium Trilogy 
புத்தகமும்!

 👇👇👇👇👇👇👇👇👇👇👇
🖥️📖📚📀🗞️📕📝🖋️✒️🖌️📜


சில வருடங்கள் முன்பு வரை புத்தகம் படிப்பது அதுவும் கதை புத்தகம் படிப்பது என்றால் கிட்டத்தட்ட ஒரு வெறி போல் எந்நேரமும் படித்துக் கொண்டிருப்பேன்.
சிறுவயதிலிருந்தே அப்படி ஒரு பழக்கம். நான் படித்த பள்ளியில் நல்லதொரு நூலகம் இருந்தது.
தமிழ் ஆங்கிலம் என்று எல்லா கதைப் புத்தகங்களும் பள்ளிக் குழந்தைகளுக்கு வேண்டிய அளவுக்கு மேலேயே அங்கு கிடைக்கும். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளலாம்.
நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அங்குதான் பொன்னியின் செல்வன் படித்தோம். என் தோழிகளும் நானும் ஆளுக்கொரு பகுதியாக எடுத்துப் பரிமாறிக் கொண்டு  படித்து முடித்தோம்.
பிறகு ஆங்கிலத்தில் 'எனிட் ப்ளிட்டன்' என்ற பெண்மணி எழுதிய கதைப் புத்தகங்கள் அனைத்தையும் ஒரு இரண்டு மூன்று முறை படித்திருப்பேன் அவர் ஒரு இருநூறு புத்தகங்களுக்கு மேல் எழுதி இருப்பார்.
அதன்பிறகு பிகில்ஸ் என்ற ஒரு போர் விமானி கதாபாத்திரம் பற்றிய புத்தகங்கள் மிகவும் திரில்லிங்காக இருக்கும் படிப்பதற்கு..... பிறகு நிறைய மர்மக் கதைகள் திரில்லர் டிடெக்டிவ் கதைகள் என்று  ஏதோ ஒரு புத்தகம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.... படிப்போம். 

தமிழில் எனக்கு ஏனோ தெரியவில்லை கல்கியை தவிர வேறு யாரையுமே அவ்வளவாகப் பிடித்ததில்லை. ஒரு சிறு காலம் மட்டும் சுஜாதாவின் புத்தகங்கள் படித்தேன், பிறகு அதில் ஈடுபாடு குறைந்து விட்டது. அகிலனுடைய சில புத்தகங்கள் எனக்கு அவை வந்த காலத்தில் பிடித்து இருந்தன.ரா கி ரங்கராஜன் என்பவர் எழுதிய புத்தகங்கள் சிலது பிடித்திருந்தன.
வீட்டில் அம்மா 'கல்கி' 'கலைமகள்' இரண்டு பத்திரிகைகளும் வாங்குவார்கள். அதில் வரும் தொடர்கதைகளை சேர்த்து பைண்ட் செய்வது பிடித்தமான பொழுதுபோக்கு. ஒரு இருபது முப்பது வைத்திருந்தேன் எல்லாம் தொலைந்து விட்டன காலப்போக்கில்.

கல்கியின் அலையோசை எனக்கு மிக மிகப் பிடித்த புத்தகங்களில் ஒன்று. அதில் என்ன ஆச்சரியம் என்றால் ஒரு பெண்ணின் மனதைப் பற்றி ஆணாகிய அவர் எப்படி ஒரு பெண்ணை விட   அவ்வளவு அழகாகப் புரிந்து வைத்து எழுதினார் என்பதுதான்!

ஆங்கிலத்தில் நான் மீண்டும் மீண்டும் படிப்பவை ஜேன் ஆஸ்டின் மற்றும் அகதா கிறிஸ்டி எழுதிய புத்தகங்கள்.
சமீபத்தில் அறிமுகமாகி என் மனதை விட்டு நீங்கா ஒரு புத்தகம் 'மில்லெண்ணியம் டிரிலஜி'. ஸ்வீடிஷ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்யப்பட்டது. மூன்று முறை படித்து விட்டேன் மீண்டும் அடுத்த வருடம் படிப்பேன்! 😄
அது 'ஸ்டீக் லார்ஸன்' என்ற எழுத்தாளர் எழுதியது.(புத்தகம் பதிப்பிட்டு வெளி வரும் போது அவர் இறந்துவிட்டார்)

கிட்டத்தட்ட நாட்டுநடப்பை பிரதிபலிக்கும் புத்தகம்தான் அது, ஆனால் கதை கற்பனை. முக்கிய கதாபாத்திரம் ஒரு சின்னப் பெண்!
அதில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால்  நாம் கண்ணால் பார்ப்பது எதுவும் உண்மையல்ல காதால் கேட்பதும் உண்மையல்ல தீர விசாரித்து அறிவதே உண்மை என்பது எவ்வளவு தூரம் மெய்யான ஒரு கருத்து என்பதுதான்.
இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் மொழியாக்கமான புத்தகத்தில் கூட இவ்வளவு அருமையான ஒரு எழுத்து நடை இருக்க முடியுமா என்பது!

12 angry men என்ற திரைப்படத்தை பார்ப்பதே ஒரு அனுபவம். இதோடு ஒரு நான்கைந்து முறை பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் எனக்கு அதில் ஏதோ ஒரு புதிய பாடம் கிடைப்பது போல் ஒரு உணர்வு. அந்த படத்தில் இன்று வரை என்னால் ஒரு குறை கூட கண்டுபிடிக்க முடிந்ததில்லை!

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி