வைரஸ் வழங்கும் வாய்ப்பு

வைரஸ் வழங்கும் வாய்ப்பு

கற்றது எல்லாம் வீணின்றி
உற்ற துணையாய் வைத்திருக்க,
என்னது கற்றோம் எதைப் பெற்றோம்
என்பதைக் கொஞ்சம்
எண்ணிப் பார்த்தால்.....

சரித்திரம் திரும்பி வந்தது இங்கே
ஆண்டுகள் நூறு ஆன பின்னே!
சட்டென உலகம் ஸ்தம்பித்தது,
சுதாரித்தெழ நேரமில்லை!
வீட்டினுள் இருந்தால் பிழைப்பாய் மனிதா......
விடுதலை கிடைப்பதெப்பொழுதென்று,
கணித்துச் சொல்வது கடினமப்பா,
என்று சொன்னது வைரஸ் கிருமி!
வாழ்க்கையென்றால் இதுதானா...!
வல்லிய சிந்தனை வந்தது இன்று🤔!

சிங்கம் புலி யானை என்று விலங்கினைக் கூண்டில் அடைத்தோம்,
வேடிக்கையாக்கி கேளிக்கை செய்தோம்,
உடன்பிறந்த உயிரையெல்லாம் கொன்று நாமும் தின்று முடித்தோம்,
விலங்கிடம் வாழ்ந்துவந்த கிருமி
வெளியே வந்தது நம்மைத் தாக்க!
'நாமே நிலையிந்த உலகில்
இல்லை'
நித்திய உண்மை சத்தியமென்று விளங்கவைத்தது நமக்கது இன்று!

'மனதில் மின்னும் லட்சியங்கள்,
எழுந்துவரும் எண்ணங்கள்,
நீராய் ஓடும் நினைவுகள்,
எல்லாம் ஒன்றாய் சேர்த்துவைத்து,
இயற்கையுடன் இயைந்த வாறு
பாதை மாற்றி செலுத்திப் பாரு,
எண்ணம் பின்னால் தொடரும் வாழ்க்கை எவ்வாறுள்ளதென்பதைக் காணு......
பல்லுயிர் ஓம்பும் புதிய உலகில்,
பேரின்பம் கண்டு மகிழ்வாய் வாழ
வழிகள் உண்டு நிறைய   இங்கே,'
என்கிறதோ அந்த வைரஸ் கிருமி?


🐘🐅🦇🐔🐣🍐🌶️🌿🌱🌧️💧

கற்பித்த பாடம் யாதெனில்....

என் தோழி டாக்டர் வடிவு அவர்கள் முகநூலில் கூறியதுபோல் நாம் மிக மிக அவசரமாகப் பிடுங்கி கொண்டிருந்த ஆணிகளில் பல பிடுங்க வேண்டிய அவசியமே இல்லை என்பது முதல் பாடம்!🤗

மூன்று வேளை உணவும், குளித்ததும் மாற்ற உடுப்பும்,
இருக்க ஒரு வீடும் இருந்தால் போதும், மாதக்கணக்கில் மகிழ்ச்சியாகவே வாழலாம் என்பதொரு மிகப்பெரிய உண்மை.... நம் கண்களுக்கு இன்று தான் தெரிகிறது, உபயம் கரோனா கிருமி.

இந்தக் கரோனாப் புயலில்
சில மனிதர்கள் மடிகிறார்கள் என்பதைத்தவிர மற்றவை எல்லாம் நன்மையாகவே இருப்பது போல்தான் எனக்குப்படுகிறது.
இறப்பது வேதனை என்றாலும், அதுவும் வாழ்வின் ஒரு பகுதிதானே?
மடியும் அந்த மனிதர் கூட்டத்தில் நானும் ஒருநாள் சேரத்தான் வேண்டும். ஒருவேளை இந்த கரோனாப் புயலிலேயே அது நடந்தாலும் நடக்கலாம்.
என்போன்ற 60+எல்லாம் போனால் பிரச்சினையே இல்லை.
பேராசை இல்லாமல் சுற்றுச் சூழலோடும் இயற்கையோடும் ஒன்றி வாழலாம் என்றெண்ணும் புதிய இளையவர்கள் தலையெடுத்து பூமி நேராக வாய்ப்புள்ளது.

கரோனா இதை நேரடியாக சொல்லாவிட்டாலும் கூட  இந்த உலகம் தழுவிய அடைப்பு என்பது என் வரையில் மிக மிக அரிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு. அனைவருமே கொஞ்சம் தற்சோதனை செய்து நாளை பிறக்கவிருக்கும் புதிய உலகில்,  உலகிற்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பூமிக்கும் அனைத்துக்கும் எது நன்மையாய் இருக்கும் என்று சிந்தித்து,  தனிமனித அளவில் அவரவர் வாழ்க்கையில் சிற்சில மாற்றங்கள் செய்தால் போதும் , அழகானதொரு உலகம் பிறக்க வாய்ப்புள்ளது! கரோனா தந்த இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்தவோம் என நான் நம்புகிறேன்👍.

நான் பள்ளியில் படிக்கும்போது  மதிய உணவிற்குப்பின் அனைவரும் ஒரு முக்கால் மணி நேரம் நன்றாக வெயிலில் விளையாடிவிட்டு பிறகு மணி அடித்தவுடன் அவசரமாக ஓடி தண்ணீர் குடித்துவிட்டு வகுப்பறைக்குச் செல்வோம்.
பல நேரங்களில் வீட்டில் பெரியவர்கள்
'ஸ்ஸ் அப்பா!வெயில் தாங்க முடியவில்லை'!
என்று பேசும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும் எதைக் குறிப்பிடுகிறார்கள் என்றும் புரியாது, வருடம் பூராவும் எனக்கு ஒரே மாதிரிதான் தென்பட்டது. அந்தப் பருவம் அப்படி!
அப்படிப் பழகிய எனக்கே இன்று வெயில் தாள முடிவதில்லை.

இன்று பல பள்ளிகளில் வகுப்பறைகளின் உள்ளே செயற்கையாக குளிரூட்டப்படுகின்றன என்று கேள்விப்படுகிறேன்.
இது எதற்கு என்று புரியவில்லை, குழந்தைகளுக்கும் கெடுதல், சுற்றுப்புற சூழலுக்கும் கெடுதல், தேவையில்லாத செலவு மட்டும் இல்லை தேவையில்லாத மின்சார உபயோகம்கூட.
இதற்கு பதில் வகுப்பறைகளைச் சுற்றி மரங்களை நட்டு வளர்த்தால்,ஒரேகல்லில் பல மாங்காய்கள் எடுக்கலாம்.
குழந்தைகளுக்கு மரம் வளர்ப்புக் கல்வி, ஆரோக்கியம்,இயற்கைப் பாதுகாப்பு,பல வருடங்களுக்கு இலவசமாக குளிர்ச்சி சூழல்,மின்சார செலவு மிச்சம் பல வருடங்களுக்கு.......மிக முக்கியமாக மனதிற்கு சாந்தி.
பல நேரங்களில் மரத்தடி நிழல் போல் ஒரு அமைதி தரும் இடம் வேறு எதுவும் இல்லை......


Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி