வெல்வெட் பூச்சி


வெல்வெட் பூச்சி 🐞🐛

சின்னஞ்சிறு வயது தாண்டி 
சிறுமியாக இருந்த காலம்,
சுற்றிப் படர்ந்த நிலத்திலே மரங்களடர்ந்த பரப்பிலே, பல்லுயிரெங்கும் பெருகி செழித்திருந்த காலத்திலே...

மேலிருந்து கீழே வந்து விழுந்து தெறித்த மழையிலே,
கீழிருந்து மேல் வந்து
நெளிந்து நகரும் புழுக்கள், 
எண்ணிலடங்கா கால்களுடன் எங்கெங்கும் ரயில் பூச்சி,
செக்கச் சிவந்த நிறத்தில் நிலமெங்கும்  வெல்வெட் பூச்சி....

உலாப் போக எழுந்து வந்து ஊர்ந்து போன பூச்சிகளை,
தீப்பெட்டியில் போட்டெடுத்துப் பிடித்தடைக்கும் விளையாட்டு...
பின்னோக்கிப் பார்க்கிறேன்
பிழையென்று உணர்கிறேன்!

தீப்பெட்டி திறந்தவுடன்
சின்னஞ்சிறு காலெடுத்துத்
தப்பித்தோட எத்தனித்த செக்கச்சிவந்த பூச்சியே,
என்றும் நீ என்னையே
மன்னிக்க மாட்டாயே...
வாயில்லா ஜீவனதை
வதைக்காதே என்று, 
யாரேனும் கூறி இருந்தால்
கண்டிப்பாய் சிந்தித்து 
மாறியிருப்பேன் மனதளவில்!



🐝🦟🦗🐜🐛🦋🐞🦂🕷️🕸️🐌


சிறுவர் விளையாட்டு

என்னுடைய குழந்தை மற்றும் சிறுவயது பருவத்தில், காலப்பருவங்களுக்கு ஏற்ப விளையாட்டுக்கள் மாறும். எப்போதும் இருக்கும் ஸ்கிப்பிங்குடன்,  காற்று காலத்தில் பட்டம் விடுதல், வெயில் கால விடுமுறையில்  வாசலில் பம்பரம் சுற்றுதல், மற்ற நேரங்களில் கில்லித் தாண்டு, ஒளிந்து கண்டுபிடித்தல், ஓடிப்பிடித்து விளையாடுதல் போன்றவைகளுடன்,  மழைகாலத்தில் பூச்சிகளும் பிடித்தும் விளையாடி இருக்கிறோம். எங்களுக்குத் தானது விளையாட்டாய் இருந்திருக்கிறது, பூச்சிகளுக்குப் பெரும் துன்பம் என்பதை நாங்கள் உணரவில்லை.

பிற உயிர்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை நாம் குழந்தைகளுக்குக் கொடுப்பது இல்லை, இன்று வரை அப்படித்தான்.
நாம், மற்றும் நம்மை சுற்றி நம் எண்ணங்கள், நம் திருப்தி, இது மட்டும்தான் என்று வாழ்கிறோம். 
மனிதன் பூமியைப் பிடித்த ஒரு வைரஸ் என்று ஒரு ஆங்கில படத்தில் நான் கேட்டது மிகவும் உண்மை எனத் தோன்றுகிறது 
👇
https://youtu.be/L5foZIKuEWQ

ஆனால் இந்த மனித வைரஸ் சிந்தித்து மாறும் திறன் கொண்டது.... 
சிறு குழந்தைகளின் சிந்தனையை அடக்காமல் அது சுதந்திரமாக செயல்படுமாறு வளர்த்தால் அது அவர்களுக்கும் நாட்டுக்கும் நல்லதென்று நான் நினைக்கிறேன்.

ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை நம்மைச் சுற்றி இருக்கும் உயிரினங்களுக்கு முடிந்தவரை துன்பம் தராமல் இருப்பதே இயற்கையோடொன்றிய வாழ்க்கை என்று ஒரு விழிப்புணர்வு எனக்கு வருவதற்கு கிட்டத்தட்ட 40 வயதைத் தாண்டி விட்டது.இதற்குக் காரணம் என்னுடைய சிந்தனை பெரும்பாலும் சொல்லிக்கொடுத்த வழிகளிலேயே சென்றதுதான், சுயமாக நான் சிந்தித்ததே வயதான பிறகுதான்......

இதெல்லாம் விட இன்னொரு கொசுறு எண்ணம் என்னவென்றால் இன்று வீடு கட்டும் பலரும் சுற்றுச்சுவர் வரை வீட்டைக் கட்டி விடுகிறார்கள்.
குழந்தைகள் ஓடியாடி விளையாட படர்ந்த நிலப்பரப்பு தேவை.....அதில் இருக்கும் மகிழ்ச்சியும் உற்சாகமும் வேறு எதிலும் இல்லை.
குழந்தைகளுக்கு மிக மிக முக்கியமானது விளையாட்டும் இயற்கை சூழலும்.

நாங்கள் அந்த விவசாயக் கல்லூரி க்வாட்டர்ஸ் வீட்டைச் சுற்றியிருந்த  படர்ந்த நிலங்களில் அங்குமிங்கும் நடப்போம், ஓடுவோம்,
மரத்தில் தூரி கட்டி ஆடுவோம்.....
ஒருநாள் என் பாட்டியுடன் சிறிய பாதையின் மேல் நடந்து சென்று கொண்டிருக்கையில் என் பக்கவாட்டில் வேலியின் ஓரமாக கிட்டத்தட்ட ஆறேழு அடி நீளமும், நல்ல தடிமனும் உள்ள பிரவுன் கலர் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்தேன். எனக்கும் அந்த பாம்புக்கும் இடையில் ஒரு ஐந்தாறு அடி தூரம் தான் இருக்கும், நான் பாட்டுக்கு தடத்தில் நடக்கிறேன், அதுபாட்டுக்கு வேலியோரம் தன் வேலையை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தது.

அன்று வீட்டைச்சுற்றி ஏக்கரா கணக்கில் வெறும் நிலப்பரப்பு மரங்களுடன் இருந்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்பதை இன்று நான் உணர்கிறேன்.
அது ஒரு கிடைத்தற்கரிய சொர்க்கலோகமென்பதை என்னுடன் விளையாடிய நண்பர்களும் நானும் அப்போது உணரவில்லை.

இப்பொழுது நான் இருக்கும் வீட்டின் முன்புறமும் பின்புறமும் இருக்கும் சிறிய இடத்தில் எத்தனை முடியுமோ அத்தனை மரங்களை வளர்க்க  படாதபாடு படும்பொழுது அதை இன்னும் தீவிரமாக உணர்கிறேன்......





Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி