கேள்வியும் பதிலும்

கேள்வியும் பதிலும்

பலநாள் தேடும் ஏதோ ஒன்று
கண்ணின் முன்னே தெரிகின்றது,
கையின் அருகே இருக்கின்றது,
கண்ணை நாம் திறக்கவில்லை,
இன்றுவரை அதைக் காணவில்லை.
மனதின் கண்ணைத் திறந்தாலே
சட்டென தெரியும் கையின் அருகே!

மனதில் தோன்றும் கேள்விகள் யாவும்
மிகமிக குழம்பிக் காணும் அன்று
கிடைத்த பிறகே தெரியும் அதன்
விடையில் எத்தனை எளிமை என்று!

அங்கும் இங்கும் அலைய வேண்டாம்
அலைந்து திரிந்து தேட வேண்டாம்
கையின் அருகில்
கண்ணின் முன்னே என்றுமுள்ளது எல்லா விடையும்....
காணும் ஞானம் இருந்தால் போதும்!


கதையிலும் படித்தேன் என் கருத்தை 👇🏼

பல வருடங்களுக்கு முன்பு நான் படித்த ஒரு ஆங்கில நாவல் ஞாபகத்துக்கு வருகின்றது. 'அங்கிள் டாம்ஸ் காபின்' என்ற அந்தப் புத்தகம் அமெரிக்க நாட்டில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையிலிருந்த அடிமை வேலை ஆட்கள் பழக்கமும் அதனால் ஆப்பிரிக்க நாட்டு பிரஜைகள் அடைந்த துன்பத்தை பற்றியும், :ஹாரியட் பீச்சர் ஸ்டவ்' என்ற ஆங்கிலேயப் பெண்மணி எழுதிய ஒரு நாவல்.
அதில் அடிமைத்தளையில் கட்டுண்டு சொல்லொன்னாத் துன்பத்தில் கிடக்கும் ஒரு பெண் எப்படியாவது தப்பித்து ஓட வேண்டும் என்ற எண்ணத்தில் நாட்கணக்கில் மனதிற்குள்ளேயே திட்டம் போடுகிறார்.
ஆனால் தப்பித்து எங்கே ஓடுவது? எங்கே எந்த பக்கம் ஓடினாலும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்துக்கொண்டிருக்கும் காவலாளிகள் (அவர்களும் அடிமைகளே) கண்டுபிடித்துவிடுவார்கள், மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பதற்கு நாய்களும் இருந்தன, எந்தப் பக்கம் போகலாம் என்று நாட்கணக்கில் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டு அவளும் யோசனை செய்த வண்ணமே இருந்தாள். எப்பக்கம் திரும்பினாலும் நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சம் இருந்தது.
மேலும் மைல் கணக்கில் நாள் கணக்கில் நடந்து போனாலும் எல்லாமே அடிமைகள் இருக்கக் கூடிய மாகானங்கள்தான், எங்கே யார் பார்த்தாலும் பிடித்துவிடுவார்கள்.

சிலநாட்கள் எங்காவது ஒளிந்திருந்து விட்டு பிறகு அவளைப் பற்றிய கவனம் மறைந்தவுடன் இரவு நேரங்களில் பயணம் செய்து சுதந்திர மாகாணத்துக்குப் போய்விடலாம் என்பது அவள் திட்டம்.

வெகுநாட்கள் யோசனைக்குப்பின் திடீரென்று மின்னல் போல் அவள் மூளையில் உதித்தது ஒரு எண்ணம், கையின் அருகிலேயே இடம் இருக்கையில் இவ்வளவு தூரம் யோசித்தேனே என்று ஒரு கணம் தன்னையே கடிந்து கொண்டாள்.... அவர்கள் அனைவரும் குடியிருந்த வீட்டு மாடியிலேயே ஒரு 'அட்டாரி' என்று கூறப்படும் அறை இருந்தது. அதற்குள் சாதாரனமாக யாரும் செல்ல மாட்டார்கள், மேலும் காற்று வீசும் பொழுது வரும் சத்தங்களினால்  பீதியடைந்திருந்த காரணத்தினாலும் அவ்வறைக்குச் செல்ல மாட்டார்கள்.
'அந்த அறையிலேயே நாம் ஒளிந்து கொண்டால் என்ன'
என்ற யோசனை வந்தது.
வீட்டுக்கு வெளியில்தான் ஓடி இருப்பாள் என்ற எண்ணத்தில்,
கண்டிப்பாக அந்த அறைக்குள் யாரும் தேட மாட்டார்கள்....
அருகிலேயே ஒரு அருமையான இடத்தை வைத்துக் கொண்டு நாம் இவ்வளவு யோசித்தோமே என்று அவளுக்கு ஆச்சரியம்!
பிறகு அவளது திட்டத்தை செயல்படுத்தவும் செய்கிறாள்!
இந்த நிகழ்ச்சி கதையில் தான் வருகிறது, உதாரணத்துக்காக தான் நான் சொன்னேன்..…
ஆனால் யதார்த்தத்திலும் இந்தக் கருத்து உண்மை என்றே நான் நினைக்கிறேன்.

நம் வாழ்வில் பல பிரச்சனைகளும் இதே போலதான் என்று எனக்கு அடிக்கடி தோன்றும், நமக்கு இருக்கும் படபடப்பிலும் பீதியிலும் நாம் அங்கே இங்கே என்று அலைந்து தேடுவோம்.
ஆனால் கொஞ்சம் அமைதியாக யோசித்தால் நம் அருகிலேயே பல கேள்விகளுக்கு விடை இருக்கும்.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி