மேதைக் குழந்தைகள்

மேதைக் குழந்தைகள்
 
பிறந்த பின்னே அறிவாளியாகக் கொடுங்கள் இந்த பானத்தை,
பிறக்கும் முன்னே ஊக்கமாகக் குடியுங்கள் இதைப் பாலுடனே,
வளரும் குழந்தை உயர வளர
அருந்தச் சொல்லு சத்துப் பாலை,
பள்ளியில் முதலாய் அவனே வரவே உண்ண வேண்டும் இந்த உணவை,
விளையாட்டிலும்
பரிசுகள் வாங்கக் கொடுங்கள் இந்த ஊக்கபானம், எல்லாவற்றிலும் அவனே முதலாய் வந்தே தீர, வேண்டும் வேண்டும்! வளர்ச்சியில் படிப்பில்
விளையாட்டிலென்று நம் குழந்தை மட்டும் வர வேண்டும்!
ஏனைய குழந்தை எல்லாரும்
வந்தாலென்ன போனாலென்ன?
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை!
நம்மைச் சுற்றி உலகமெல்லாம் நவிலும் பாடம் இதுவே இன்று!

உலகின் மூலை முடுக்கெல்லாம், மற்றும் இந்தியத் திருநாட்டில், தாய்த்தமிழ் நாட்டிலும் சேர்த்து,
அறிவாளியென்றும் மேதையென்றும் இருந்தோரெல்லாம்,
இதயக்கண்ணில்  தெரிகின்றாரே!
ராமானுஜம், ராமன் சி.வி,
சிவாஜி என்னும் நடிப்பின் ஆளுமை,
முதல்வரான எம்ஜிஆர், கலைஞரான கருணாநிதி,
அமெரிக்காவின் ஆபிரகாம், ஆப்பிரிக்காவின் மண்டேலா
பிரான்ஸில் பிறந்த மேரி க்யூரி...

இதுவும் போக இன்றைய உலகில்
கூகுள் தலைவர் சுந்தர்  பிச்சை,
ஓட்டம் ஓடிய பிடி உஷா,
கிரிக்கெட் ஆடிய கேப்டன் தோனி
ஹீமாதாஸ் என்னும் சின்னச்சிறுமி
இன்னும் இன்னும் இன்னும் நூற்றுக்கணக்கில் உள்ளோர்...

அனைத்தும் மேலே முதலாம் இந்தியர் காந்தி மகாத்மா!
இவர்களெல்லாம்
உண்ட உணவு என்னென்ன?
குடித்த பானம் எவை எவை ?
எந்தப் பாலை  அருந்தி வந்தனர்?
எப்படி இந்த உயரம் அடைந்தனர்?
அறியேன் நானே!
அறிந்தவர் கொஞ்சம் கூறுங்களேன்?

விளம்பரம் போடும் அனைவரும்
விளும்புவதெல்லாம் மெய்யென்றெண்ணி
ஏமாற வேண்டாம் சின்னத் தாயே!
சிந்தனைக் கதவைத் திறவாய் நீயே!



தொலைக்காட்சி தூண்டிய எண்ணத் துளிகள்!👇🏼

சாதாரணமாகவே நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அப்படியொன்றும் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. இருந்தாலும் சில நேரம் அம்மாவுக்குத் துணையாக நாமும் அமர்ந்து பார்க்கும் பொழுது ஒரு மூன்று நான்கு நிமிடங்களுக்கு ஒருமுறை அதே கால அளவுக்கு விளம்பரம் வரும்.
இந்த விளம்பரங்களில் ஒன்றாவது நமக்கு உபயோகமாக இருக்குமா என்றால் இல்லை.
முடிந்தவரை நம்மிடம் இருக்கும் பணத்தை எல்லாம் வற்றக் கறப்பதற்காகவே வரும் விளம்பரங்கள் இவை!
'இல்லையில்லை! விளம்பரங்களுக்கு எல்லாம் வேறு காரணங்கள் இருக்கின்றன' என்று யாராவது எண்ணினால் விளக்குங்கள், என் மனதை மாற்றிக் கொள்கிறேன்.

ஆதிகாலத்தில் சாம்பலையும் உப்பையும் போட்டு பல் துலக்கிக் கொண்டு இருந்த நம்மை மாற்றி டூத்பேஸ்ட்க்கு வரவழைத்து இப்பொழுது அதே உப்பையும் கரித்தூளையும் பேஸ்ட்டிலும் பிரஷ்ஷிலும் போடுகிறார்கள்! அப்படியென்றால் இவர்கள் பொருட்களை வாங்கும் நம்மை எவ்வளவு பெரிய முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?!
இவர்களுக்கு இருக்கும் அதேபோல மூளை நமக்கும் இருக்கிறது என்பதை இவர்கள் சவுகரியத்துக்காக மறந்து விட்டார்கள், நாம் ஏமாளித் தனமாக மறந்து விட்டோம்!

நான் சிறுவயதில் பலமுறை சாம்பல் போட்டு பல் துலக்கி இருக்கிறேன். அதன்பிறகு மாமூலாக கிட்டத்தட்ட அனைவர்  வீட்டிலும் இருந்தது 'கோபால் பல்பொடி'.
அந்தக் கோபால் பல்பொடி ஆரம்பத்தில் எந்தவிதமான சுவையும் இல்லாமல் கொஞ்சம் கரித்தது போல் இருந்தது.
பிறகு சில வருடங்களில் திடீரென்று அதன் சுவை சற்று இனிப்பாக மாறியது ஞாபகம் இருக்கிறது.
ரோஸ் கலரில் இருக்கும் இந்தப் பல் பொடி போட்டு பல் துலக்கிய பிறகு சில மணித்துளிகள் வாயெல்லாம் லிப்ஸ்டிக் போட்டதுபோல் ஒரு கலர் மாறி இருக்கும்.
இப்பொழுது நினைத்தால் நடுக்கமாக இருக்கிறது.

இன்று பொருள் எதுவாயிருந்தாலும் விளம்பரங்கள் மட்டும் குழந்தைகளைக் குறிவைத்து வருகின்றன. வீட்டில் அதிகாரம் யாருக்கு என்பதை உணர்ந்திருக்கிறார்கள் கம்பெனி முதலாளிகள்.
பெரியவர்கள் போடும் சோப்பிற்கும் சரி, நாம் சமைக்கும் எண்ணெய்க்கும் சரி உபயோகிக்கும் மாவு, மற்ற உணவுப் பண்டங்கள் எதுவாகினும்,  கிட்டத்தட்ட எந்த விளம்பரமும் குழந்தை இல்லாமல்
வருவதில்லை...... பிள்ளைப்பேறு உண்டாகாமல் தடுக்கும் பொருளுக்கான விளம்பரத்தைத் தவிர!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நோக்கும் இளம் தாய்மார்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருந்தாலன்றி வீட்டில் உள்ள பணம் பூராவையும் பிடுங்கிக் கொள்வார்கள்  இந்த விளம்பரம் கொடுக்கும் கம்பெனிக்காரர்கள். இவர்கள் கூறும் எந்தப் பொருளும் இல்லாமலே குழந்தை அருமையாக வளர்த்து பெரிய அறிவாளியாக மாறுவார், அதில் சந்தேகமே இல்லை.
நாம் சொல்லிக் கொடுக்கும் மன வன்மையும், நல்ல 'வேல்யூ' க்களும்,அதற்கும் மேலே சுற்றியிருக்கும் உலகை அவர்களே உற்று நோக்கும் திறனை வளர்த்துக்கொள்ளவும், சுயமாக  சிந்திக்கவும் நாம் அனுமதிப்பது, இவையெல்லாம்தான் வாழ்வை வளமாக உருவாக்குகின்றன.
இந்த விளம்பரங்கள் கூறும் உணவுப் பொருட்கள் அல்ல!

ஓரளவிற்கு மூன்றுவேளை ஒரு நல்ல சாதாரண உணவை கொடுத்தாலே குழந்தைகள் நன்றாக வளர்ந்துவிடும். அதிகப்படியான சத்து என்று எதுவும் தேவை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இந்த செயற்கையான உணவுப் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்க வசதி இருக்கும். அவர்கள் அவற்றைக் கொடுத்தாலே போதும்.

கிருமிநாசினி சோப் வைத்து எந்நேரமும்  கையையும் உடம்பையும் கழுவிக் கொண்டு இருந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை போய்விடும். மேற்கத்திய நாடுகளில் இன்று பல அலர்ஜிகள் வருவதற்கு அதீத 'சுத்தம்' காரணம் என்பது என் கருத்து.
இதை அமெரிக்காவில் வசிக்கும் என்னுடைய 'கஸின்' கூறினார். அவரும் இதையே நினைக்கிறார்.
அங்கே இருக்கும் பொழுது இருக்கும் அலர்ஜி சென்னை வந்தால் மிகவும் குறைவாகிறது என்று கூறினார்.
எதையும் அளவுக்கதிகமாக செய்யாமல் இயல்பாக இருப்பதே ஆரோக்கியம்.
இதுவும் என் கருத்து மட்டுமே!







Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி