ஓய்வு

ஓய்வு

ஓய்வுமின்றி ஒழிவுமின்றித்
தேடும் திரவியமென்றும்
நன்மை தருமாவென்று
ஐயம் என்றும் எனக்குண்டு!
நாளில் மணிகள் இருபத்தி நான்கு உறங்கும் நேரம் ஏழென்றால்
மீதம் உள்ளது பதினேழு.
இதிலேழை  மட்டும் தந்திட வேண்டும் திரவியம் தேடும் வேலைக்கு!
மீதம் உள்ள பத்தும்
நம்மைச் சேர்ந்த சொத்து!

வீடு வந்த பிறகும்
உடன் வராத மனமும்,
வேலை பற்றி நினைவில் ஆழ்ந்திருக்கும் சிந்தையும்
அளிக்கப் போவதில்லை அமைதியென்ற உணர்வை!

பரந்திருக்கும் பூமியில் விரிந்திருக்கும் வாழ்வு,
வந்ததிங்கே என்பது திரவியம் தேடத் தானா?
பின்னெதற்கு வந்தோம்?
அறிய நமக்கு வேண்டும் தேவையான ஓய்வும் தெளிந்திருக்கும் மனமும்!

முனைப்பெதுவுமில்லாமல்
விரிந்து பரந்த வெளியென்று
சஞ்சரிக்கும் மனம்,
தேவை இங்கு தினம்
ஞானம் என்ற குணம்
வந்து சேர நம்மிடம்!
குற்றமில்லா ஓய்வொன்றே
தருமிந்த மனம்!


விருப்பமில்லா வேலை 👇🏼

நான் பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் பொழுது விடுமுறை வந்தால் மகிழ்ச்சிதான் என்றாலும், எப்பொழுது விடுமுறை வரும் என்று என்றுமே ஏங்கிக் கிடந்தது கிடையாது. மருத்துவ படிப்பு முடிந்து கண்ணுக்குத் தனியாக மேற்படிப்பு  படிக்கும்பொழுதும், பிறகு வேலை பார்க்கும் போது அங்கு வேலை பார்க்கும் நேரம் கொஞ்சம் அதிகம், காலை ஏழு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை.
வாரம் ஒரு நாள் விடுமுறை என்பதும் உறுதி கிடையாது.  ஒரு ஏழு வருடங்கள் அங்கு நான் வேலை பார்த்தேன் அதனாலோ என்னவோ எனக்கு எப்பொழுதுமே  விடுமுறை எப்போது வரும் என்ற ஒரு ஏக்கம் மிகவும் அதிகமாகத் தொடங்கியது.

அதன் பிறகு ஏழு வருடங்கள் நான் வெளியூரில் இருந்தேன் அங்கு இதே நிலை தொடர்ந்தது,ஆனால்  குறைந்த வீரியத்துடன் .
விடுமுறை என்றால் கொஞ்சம்  ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பேன்.
எப்படியோ அங்கு ஒரு ஏழு வருடம் வேலை பார்த்து முடித்து திரும்பவும் ஊருக்கு வந்த பிறகு பழைய நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.
ஒரு நான்கு வருடங்கள் நன்றாக இருந்தது, அதன் பிறகு வேலை நேரம் அதிகமானது.

மீண்டும் அதை கதை....விடுமுறை எப்போது வரும் என்ற ஏக்கம் தொடர்ந்து என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.
வேலை செய்கிறோமோ இல்லையோ அந்தக் குறிப்பிட்ட மணி நேரம் நிறுவனத்தில் இருக்கவேண்டும்.அதனால் எப்போதடா தப்பித்து வீட்டுக்கு போவோம் என்று எனக்கு ஒரு எண்ணம் வர ஆரம்பித்தது.
இதற்குக் காரணம் வேலை நேரம் மட்டுமல்ல நமது இயல்பும் கூட வேலை முடிந்து வீடு வந்த பிறகு நமது மனம் சுதந்திரமாக செயல்பட நாம்தான் பழக்கிக்கொள்ளவேண்டும்!

இதனால்தான் இந்த ஓய்வு என்பது முக்கியம் என்கிற ஒரு மனநிலைக்கு நான் வந்திருக்கிறேனோ என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது.
நான் கூறுவது சரியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
ஆனால் இதன் பிறகு நான் சொந்தமாக மருத்துவமனை வைத்து நடத்திய பொழுதுமே அதிக வேலை பார்க்கும் நேரம் நான் வைக்கவில்லை மிகவும் குறைந்த மணி நேரம் வேலை பார்த்தாலும் எப்பொழுது வீட்டுக்கு போவோம் எப்பொழுது விடுமுறை வரும் என்று காத்திருக்க ஆரம்பித்தேன்.
இந்தக் காரணங்களாலேயே நான்கைந்து வருடங்களுக்குள் என் மருத்துவமனையை மூடிவிட்டுப் வேலை பார்த்தது போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
விரும்பிச் செய்யாத தொழில் நமக்கு நன்மை பயக்காது.

இவ்வளவுக்கும் நான் மருத்துவப் படிப்பு, மேற்படிப்பு எல்லாம் மிக மிக விரும்பிப் படித்தேன்.மருத்துவத்தின் மீதிருந்த அதிதீவிர ஆவலில் தான் படித்தேன், வேண்டா வெறுப்பாக படிக்கவில்லை.
இருந்தும் எனக்கே அந்த வேலையின் மீது ஒரு சலிப்பு வந்து விட்டதென்றால் அளவுக்கு அதிகமாக அதை செய்ததும் வேலையில்லா நேரமும் முழுதுமாக என் சொந்தமில்லாமல் இருந்ததும் காரணமாக இருக்கலாம்.
யாருக்குமே வேலை ஒருபக்கம் இருந்தாலும், ஓய்வு நேரத்தில் சுத்தமாக அந்த வேலை பற்றிய எண்ணம் மனதில் இருக்கக் கூடாது.
இது தான் ஒரு ஆரோக்கியமான மனநிலையாக இருக்க முடியும் என்று எனக்கு படுகிறது.

நாம் வேலை பார்க்கும் நேரம் போக மீதமிருக்கும் நேரமும் அந்த அலுவலக சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு இருந்தோமென்றால் ஓய்வு நேரம் என்பதற்கு ஒரு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
நான் வேலை பார்த்த நிறுவனம் கிட்டத்தட்ட அது போலத்தான்..... ஓய்வு நேரத்தில் கூட நாம் சுதந்திரமாக ஒரு சினிமாவுக்கோ வேறு எங்குமோ செல்லமுடியாது, அடுத்தநாள்  யாரெல்லாம் சினிமாவுக்குச் சென்றீர்கள் என்று கேட்பார்கள்..... கிட்டத்தட்ட ஒரு ஹாஸ்டல் போலத்தான் அதுவும். இது ஒரு ஆரோக்கியமான சூழலாக எனக்குப் படவில்லை.
குற்ற உணர்வில்லாத விடுமுறை தான் உண்மையான விடுமுறை.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி