திட்டமெல்லாம் நடப்பதில்லை

திட்டமெல்லாம் நடப்பதில்லை

போட்டு வைத்த திட்டமெல்லாம் போட்டபடி நடந்தால்,
அடுத்தடுத்து என்னவென்று
அச்சுப்போல தெரிந்து விடும்!
நடப்பதெல்லாம் திட்டப்படி,
புதிதொன்றும் இல்லையென்றால்,
பள்ளிக்கூட அட்டவணை
இட்டதுபோல் வாழ்வாகும்!

உள்ளபடி உலகிலே அப்படியொன்றும் நடப்பதில்லை!
ஆயிரம்தான் திட்டங்கள்  போட்டாலும் நாமெல்லாம்,
எல்லாமே மாறிவிடும்
சொல்லாமல் நம்மிடம்..
நாளையென்ன நடக்குமென்று
யாரும் சொல்லல் ஆகா,
சொல்லிவிட்டால் அவருமே ஆண்டவராய் ஆவாரே!

நாளைக்கென்று திட்டம் பல போடுவதை விட்டு விட்டு,
இன்றைக்குக் காரியத்தை நன்றாக நாம் செய்தால்
நிச்சயமாய் நாளை நமதென்றே ஆகும்!

தவிடுப்பொடியான திட்டங்கள்👇🏼

பொதுவாக அனைவரின் வாழ்விலும் ஒரு (design) வடிவமைப்பிருக்கும்.
என் வாழ்வின் வடிவமைப்பில் நான் மிகவும் விரிவாகத் திட்டம் போட்டது எதுவுமே கிட்டத்தட்ட நடந்ததில்லை, அப்படியே நடந்தாலும் அது நன்றாக திருப்திகரமாக அமைந்ததில்லை. திட்டமே போடாமல் நடந்தவை எல்லாம் ஓரளவு எனக்கு திருப்திகரமான நன்றாகவும் அமைந்திருக்கின்றன.

இதில் என்னவென்றால் நாம் ஒன்றை மிகவும் விரும்புவது என்பது வேறு, அதற்காக திட்டம் போடுவது வேறு.
மருத்துவராக வேண்டும் என்று மிகமிக விரும்பினேன், அதற்காகப் படித்தேன் அது நடந்தது.
கண் மருத்துவம் என்பது எனக்கு பிடித்த ஒரு சப்ஜெக்ட், அது எதேச்சையாக அமைந்தது.
நான் திட்டம் எதுவும் போடவில்லை.
அதேபோல்தான் என் திருமணமும் நான் திட்டம் ஏதும் போடாமல் பெற்றோர்கள் பார்த்து அமைந்தவர்தான் என் கணவர். 

நான் வேலை பார்த்த இடங்கள் அனைத்தும் எதுவும் திட்டமிடாமல் எதேச்சையாக அமைந்தவை தான் எல்லாமே ஓரளவுக்கு திருப்திகரமாக தான் அமைந்திருக்கின்றன என்று எண்ணுகிறேன.
ஆனால் நான் விரிவாக திட்டம் போட்டு  செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடி ஓடி செய்தது எதுவுமே எனக்கு நன்றாக அமைந்தாக எனக்கு ஞாபகமில்லை.
சமீபத்திய உதாரணம் நான் வாங்கிய வீடு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அலைந்து திரிந்து இப்படி வேண்டும் அப்படி வேண்டுமென்று  என்று ஏதேதோ நினைத்துக் கடைசியில் ஆறு மாதங்களுக்கு முதன் முதலில் பார்த்த வீட்டைத் தான் வாங்கினேன். ஆனால் எனக்கு இன்றும் அந்த அவ்வளவு திருப்திகரமாக இல்லை. அதனுடைய தரம் நான் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருக்கிறது.
இதற்கு ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு நான் பல நாட்கள் திட்டம் போட்டு மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு வீடு வேண்டும் என்று, தாயார் எனக்கு கொடுத்த நிலத்தில் ஒரு சிறிய வீடு கட்டினேன்.
ஏகப்பட்ட மரங்களை நட்டு தண்ணீர் வாங்கி ஊற்றுவேன்.
ஆனால் சில நாட்களில் அதை விட்டுவிடும்படி ஆனது.
அந்த நிலத்தை விற்றும் ஆகிவிட்டது, திட்டம் போட்டது எதுவும் நடக்கவில்லை.

இப்பொழுது நான் என் தொழிலை விட்டுவிட்டு வீட்டில்தான் இருக்கிறேன், திட்டமிட்டு நடக்கவில்லை திடீரென்று ஒரு நாள் நடந்தது. இதில் எனக்கு மகிழ்ச்சியே!

விலங்குகளின் உரிமை பற்றி குழந்தைகளுக்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்று பல வருடங்களாக நான் திட்டம் போடுகிறேன் அது எதுவுமே நடக்க மாட்டேன் என்கிறது.
என்னுடைய தயக்கம் ஒரு காரணம் என்று தெரிகிறது,
இன்னும் நடக்காதது நடக்காது தான்.
அதனால் சரி ஏதாவது எழுதுவோம், அதைப் பற்றிய நம் எண்ணங்களைப் பதிவு செய்யலாம் என்ற எண்ணத்தில் திடீரென்று என்று ஒரு நாள் எழுத ஆரம்பித்தேன், திட்டம் எதுவும் இல்லை. எழுத ஆரம்பித்தவுடன் என் எண்ணங்கள் மடைதிறந்த வெள்ளமென கரைபுரண்டு ஓடுகின்றன. அவற்றை அன்றாடம் நான் பதிவு செய்து வருகிறேன். திட்டமிடாமல் வந்த காரியம் இது நான் எதிர்பார்த்ததை விட நன்றாகவே செய்து கொண்டிருக்கிறேன்.
நம் கருத்துக்களைப் பதிவு செய்கிறோம் என்று திருப்தி மிஞ்சுகிறது.
ஆகையால் என் வாழ்வை வடிவமைக்கும் அந்த ஏதோ ஒரு சக்தியின் கையில் நான் விட்டுவிட்டேன், திட்டங்கள் இனி போட வேண்டாம் என்று நினைக்கிறேன்.





Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி