அறிவாளி யார்

அறிவாளி யார்?

பள்ளி படிக்கும் காலத்தில்
படிக்கும் பாடம் எதிலுமே
நானே முதலாய் வந்ததால்
அறிவாளி  என்ற எண்ணம்
என்னில் ஊறிப் போனது.

அறுபதில் திரும்பிப் பார்க்கிறேன் படித்ததை மனதில் வாங்கிப்
பின் அதையே எழுதி கொடுப்பது
அறிவென்று கூறல் எங்கனம்?

படித்ததை மூளையில் பதித்து
பரீட்சையில் எழுதிக் கொடுத்தால்
அதைத் திறமை என்று கூறலாம்
அதில் பெருமை என்பது அவ்வளவே!

புத்தகத்தைப் பார்த்துப்
படித்து வளர்ந்த அறிவு
அன்றாட வாழ்க்கையிலே அவ்வளவாய்ப் பயனில்லை.....

சூழ்நிலை எதுவென்றாலும்
சுயமாய் சிந்தனை செய்து
அடுத்தவர் கூற்றால் சாயாமல் முடிவொன்றெடுக்க முடிந்தால்
அது ஒரு வகை அறிவெனலாம்!

நேர்கோடான சிந்தனையில் மனதை அடைத்து வைக்காமல்
பலவிதமான கோணங்களும் ஆலோசித்து அணுகினால் அறிவாளி எனக் கூறலாம்!

இறக்கும் வரை வளர வேண்டும் அறிவும் ஞானமும் சேர்ந்தே இங்கு அதற்குத் தேவை ஒன்றே ஒன்று
திறந்திருக்கும் மனமே என்றும்!


🙇🙇🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️


ஐந்தாவது வகுப்பு படிக்கும் வரை வகுப்பில் 10 ராங்கிற்க்கும் கீழ் தான் வாங்குவேன் அதாவது 15, 20, 23 என்று....
ஐந்தாவது வகுப்புக்குப் பிறகு எனக்கு 'பள்ளிக்கல்வி' விளங்க ஆரம்பித்தது.
ஆறாம் வகுப்பில் இருந்து கிட்டத்தட்ட இரண்டாவதுஅல்லது மூன்றாவதும் பல நேரங்களில் முதல் ராங்கும் வருவேன்.
இது பியுசி வரை தொடர்ந்தது.

நான் இப்பொழுது பின்னோக்கி நினைத்து பார்க்கையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு என்னைப்பற்றி பெரிதாக எண்ணம் இருந்ததில்லை....7, 8, 9 க்கு மேல் நான் கொஞ்சம் அறிவாளி என்கிற மாதிரி அடி மனதில் ஒரு எண்ணம் வந்ததாக ஒரு சின்ன சந்தேகம் எனக்கு வருகிறது.

பிறகு பியூசி படிக்கும்பொழுது எந்நேரமும் படிப்பிலேயே ஆழ்ந்திருப்பேன், ஏன் என்றால் போதிய மார்க் வாங்கினால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும், பணம் கொடுத்து சேர்க்கும் அளவுக்கு வசதி இல்லை, மார்க் வாங்கினால் படிக்க வைக்கிறேன் என்று தந்தை கூறிவிட்டார்!

ஆனால் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, முதல் வருடத்திற்கு பிறகு கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போனதால், என்னால் என் படிப்பைத் தொடர முடியவில்லை. இதற்கு காரணம்  படிப்பைத் தவிர எந்த நினைப்பும் இல்லாமல் இருந்தது என்று கூட சொல்லலாம்.
ஒரு வருட ஓய்வுக்கும் வைத்தியத்துக்கும் பிறகு மீண்டும் சேர்ந்து படித்தேன். ஆகையால் மார்க் பாஸாகும் அளவிற்கு கொஞ்சம் மேலே வாங்குவேன் அவ்வளவுதான்.

இருந்தாலும் கூட எனக்கே என்னைப்பற்றி புத்திசாலி என்ற ஒரு எண்ணமும் இருந்ததோ என்ற ஐயம் வருகிறது.
இந்த எண்ணத்துடன் என்னுடைய இயல்பான கொஞ்சம் 'இன்ட்ரோவர்ட்' என்று கூறுவார்களே.... அந்த வகையான சுபாவம்,  ஜனங்களிடம் அதிகம் பேசாமல் விலகியிருக்கும் மனப்போக்கு, எல்லாம் சேர்ந்து நாம் ஏதோ மற்றவர்களை விட அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ?

இப்பொழுது நினைத்துப் பார்த்தால் நாம் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் படிப்புக்கும், அறிவு மற்றும் உலகஞானத்துக்கும் சம்பந்தமே கிடையாது என்றுதான் தோன்றுகிறது.
சொந்தமாக சிந்தனை செய்வது, சுற்றுப்புறத்தைப் புரிதலுடன் நோக்குவது, வாழ்க்கையை அணுகும் விதம், நடைமுறையில் நடக்கும் விஷயங்களை எப்படி பார்க்கிறோம், அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் என்ற முடிவுகள் எப்படி எடுக்கிறோம், நமக்கு இன்றைக்கு ஒன்று நடக்கிறது என்றால் அதனுடைய பின் விளைவுகள் என்னவாக இருக்கும், என்ற சிந்தனைகள்.... இதெல்லாம் எதுவுமே இல்லை.
ஒரு விசாலமாக இல்லாமல் குதிரைக்குக் கண்ணைக் கட்டியது போல் நேர்கோடாக என்னுடைய பார்வை இதுவரை இருந்திருக்கிறது என்பதை  சில காலமாக நான் உணர்கிறேன்.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி