வைரஸ்

வைரஸ்

மனிதனைத் தாக்கும் நுண்ணுயிரி, 
பாக்டீரியா என்பது பெயராகும்,
பலவகையுண்டு பாக்டீரியாவில்,
மனிதன் உடம்பினுள்ளே போனால்
இரு வகையான செயல்பாடுண்டு,
உதவி என்றும் கெடுதி என்றும் இரண்டும் உண்டு அதிலேயே!

இந்தக் கிருமியைக் கொல்வது என்ன?
இதனினும் நுண்ணிய இன்னொரு கிருமி வைரஸ் என்று பெயராகும்!
வைரஸ் தாக்கிய பாக்டீரியா
விரைவில் சாகும்  சிறுவுடல் வெடித்து,
வெடிக்காவிட்டால் உணவாகும் வைரஸ் என்ற கிருமிக்கு.
கிருமித் தாக்கம் தாங்காமல் இறந்து போகும் பாக்டீரியா. 
அதனுள்ளே இருந்த வைரஸ்
அடுத்த கிருமியின் உடலுள் போகும்!

வைரஸ் தாக்கும் பல உயிரில்  
மனித உயிரும் ஒன்றாகும், 
வைரஸ் தாக்கம் காரணமாக மனிதனும் இறந்து போகக்கூடும்.
இந்தக் கிருமிக்கான மருந்து    இன்னும் தெளிவாய்த் தெரியவில்லை.
எனினும் மனிதன் மூளையினாலே
பிழைத்தெழுகின்றான் பலநேரம்,
மருத்துவ அறிவின் முன்னேற்றத்தால்!

இந்த சுழற்சி வட்டத்தில் பூமியைத் தாக்கும்  கிருமியுமுண்டு, 
பிழைத்தெழுமா பூமியிது? 
மடிந்து விழுமா கிருமியினாலே?
பூமியைத் தாக்கும் கிருமியது
மிக வீரியமான பெரிய கிருமி,
அழிக்க முடியா அந்த கிருமி
மனிதன் என்ற மாபெரும் வைரஸ்!

62
வைரஸின் இயல்பு 👇🏼

மருத்துவப் படிப்பில் மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுது மைக்ரோபயாலஜி என்று கூறப்படும் நுண்ணுயிர்கள் பற்றிய ஒரு பாடம் இருக்கிறது. ஒரு வருடம் படிக்கவேண்டும். கொஞ்சம் ஆழ்ந்து படித்தால் மிகவும் சுவாரசியமாக இருக்கக்கூடிய ஒரு சப்ஜெக்ட் அது.

பாக்டீரியா என்பதைப் பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருந்த எனக்கு அதைவிடச் சிறிய நுண்ணுயிர்களும் மற்றும் அதைவிடப் பெரிய நுண்ணுயிர்களும் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. இதுபோன்ற நுண்ணுயிர்களில் ஒரு செல் வகை என்றும் பல செல் வகைகள் என்றும் நிறைய இருக்கின்றன.
காற்றிலும் நீரிலும் எல்லா நேரமும் பரவி இருப்பவை இந்தப் பலவிதமான நுண்ணுயிர் வகைகள்.
சாதாரணமாக நீரில் வாழும் அமீபா என்பது ஒரு செல் வகை, அது நகர்ந்து கொண்டே அதனுடைய உணவுப் பொருள் போல் ஏதும் வந்தால் அந்த பொருளின் மேல் படர்ந்து அதை தனக்குள் எடுத்துக் கொள்ளும்.
புரோட்டோபிளாசம் என்று கூறப்படும் அதனுடைய உடம்பின் நீருக்குள் அந்த உணவுப் பொருள் ஜீரணமாகிக் கரைந்துவிடும். 
பிறகு அது மீண்டும் நகர்ந்துகொண்டிருக்கும்,.
இது அமீபா வாழும் முறை.

அமீபா மற்றும் பாக்டீரியா போன்ற ஒரு செல் நுண்ணுயிர்களுக்கு 'செல் வால்' இருக்கும் செல்லைச் சுற்றியிருக்கும் சுவர் என்று பொருள் கொள்ளலாம்.
அதன் வழியாக நீர் சென்றுவரும், உணவுப் பொருள் செல்லும்...வராது. 

இதன் தொடர்ச்சியாக வைரஸ் பற்றி படிக்கும் பொழுது மிக வியப்பாக இருக்கும், வைரசுக்கு உடம்பு கிடையாது 'செல் வாலும்' கிடையாது.
அது ஒரே ஒரு நியூக்ளிக் ஆசிட் மட்டும் கொண்ட  ஒரு உயிர்!
ஆனால் பாக்டீரியாவை விட வீரியமாக இருக்கக் கூடியது.... எப்படி என்றால் தனக்கு உடம்பு இல்லாததைப் பற்றி அதற்குக் கவலை இல்லை, எந்த உயிரினத்துக்குள் போகிறதோ அதனை தன்னுடைய பாதுகாப்பாகவும், அதையே தன்னுடைய உணவாகவும், தன் வசிப்பிடமாகவும் உபயோகித்துக் கொள்ளும்.
அந்த 'ஹோஸ்ட்'எனப்படும் நுண்ணுயிரை முழுவதுமாக அழித்துத் தின்று அதன் உள்ளே பல்கிப் பெருகிவிட்டு, அடுத்த ஹோஸ்டுக்குள் சென்று அதனை அழிக்கும். 
இவ்வாறு தன்னிடம் எதுவும் இல்லாவிட்டாலும் கூட இன்னொரு உயிருக்குள் புகுந்து அதை உபயோகப்படுத்தி, அழித்து, தான் பெருகி பல்கி அடுத்த உயிருக்குள் புகுந்துவிடும்.
ஒரு மிக வீரியமான கிருமி வைரஸ் என்பது.

எதேச்சையாக இதை நான் எழுதும் பொழுது ஒரு ஞாபகம் வருகிறது... சமீபத்தில் ஆங்கிலத்தில் வெளியாகி உலகப் பிரபல்யம் பெற்ற 'ஹாரிபாட்டர்' நாவல் வரிசையில் வரும் தலைமை வில்லன் 'வோல்டிமோர்ட்' என்பவனுடைய தன்மை அதுதான். இந்த வில்லனுக்கு உடல் இல்லை,
ஹாரிபாட்டர் பிறந்த பொழுது அவனுடைய தாய்  இட்ட  ஒரு சாபத்தினால்.
அவனுடைய ஆவி மட்டும் அலைந்து கொண்டிருக்கின்றது, உடம்பைத் தேடி அலையும் இந்த வில்லனுக்கு உதவுவதற்கு இவனுடைய அடிமைகள் பலர் முயற்சி செய்வார்கள். ஹாரி பாட்டரைக் கொன்று விடுவதுதான் இவனுடைய ஒரே லட்சியம்.கொன்ற பிறகு தான் ஒரு மாபெரும் தீய சக்தியாக உலகை ஆள வேண்டும் என்பதும் கூட...
உடம்பு இல்லாமல் அலையும் வில்லன் என்றாலும் நாம் நினைத்துப் பார்த்தாலே நடுக்கம் தரக்கூடிய ஒரு குரூரமான கதாபாத்திரம் அது. 

இதெல்லாம் போக, நாம் நினைத்தால்,அல்லது கேள்விப்பட்டால், இப்படி இருக்கக்கூடும் என எண்ணினால், நமக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்....அது என்னவென்றால் நாம் எல்லாருமே வைரஸ் போல தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதாவது மனிதர்கள் நாம், செல்லும் இடத்திலெல்லாம் அங்குள்ள பூமியின் வளங்களை சுரண்டி, நாம் செழித்து வளர்ந்து விட்டுப் பிறகு வளம் குறைந்தால், உடனே வேறு இடத்துக்கு செல்லும் ஒரு தன்மையோடு இருக்கின்றோம்!
ஆழமாக யோசனை செய்து பார்த்தால் இதிலுள்ள உண்மை புரியும்.
இதை நான் 'The Matrix' என்ற ஒரு ஆங்கில படத்தில் வசனமாகக் கேட்டேன், கேட்டதும் தான் இந்தக் கருத்தில் உள்ள உண்மை என் மனதில் உறைத்தது, இந்த 'லிங்கை' எனக்கு அனுப்பியவர் ஒரு டாக்டர் நண்பர்.
அவருக்கு நன்றி!  நான் இந்த வசனத்தைப் பலமுறை ரசித்து கேட்டுவிட்டேன்!
👇🏼

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி