யாருக்கு சொந்தம்

யாருக்கு சொந்தம்?

அன்னை என்று ஆன பின்பு
அன்புடன் பேணிய அருமை மகன்,
அவனும் வளர்ந்து ஆளாகி
ஆனான் அழகிய ஆண்மகனாய்,
அன்னையைப் பார்த்தான் அருமையாக...

வருடங்கள் பல போனதும்
வயது வந்தவன் ஆனதும்
வாழ்வை அவனுடன் நடத்தவே
வந்தாள் மனைவி என்பவளே.

அழகும் குணமும் நிறைந்தவள்
அன்பைப் பொழிந்தாள் கணவனிடம்
அவ்வப்போது சண்டை வரும் அன்றே முடியும் பேச்சின் மூலம்.

தாயின் மனதில் சஞ்சலம்
தனயன் தன்னை தனியே விட்டு
தன்னைக் கொண்டவளுடனே போய் விடுவானோ?

கொண்டவளுக்கும் சந்தேகம் கணவனுக்குத் தாய் முதலா தான் முதலாவென்று
கேட்டுக் கொள்வாள் கணவனிடம்
கேள்வியிதை தினமொரு முறை.

அழகுப் பையன் மத்தளமாய்
ஆனான் திருமணம் ஆன பின்னே
அவன் தாயும் தாரமும் மறந்தனரே அவன் தனியொரு மனிதன் என்பதையே!

தாயின் மூலம் தான் வந்தான் தாயிடம் இருந்து இல்லையம்மா
தான் வந்து பிறந்தது இவ்வுலகில் தன் வாழ்வைத் தானே வாழ்வதற்கு...

வாழ்வில் முதலடி கொடுத்தவள் தாய்
வாழ்க்கை த்துணையாய் வந்தவள் தாரம்
முறையில் இருவரும் வேறென்றாலும்
அன்பில் இருவரும் சமமம்மா!

வாழ்வை வளமாய் ஆக்கிடவே
வரவேண்டும் சொந்தம் என்போரே!
அடிமை என்று யாரும் இல்லை
யாரும் யாருக்கும் சொந்தமில்லை
அனைவரும் தனித்தனி மனிதர்களே,
வாழ்க்கையெனும் பயணத்திலே
சேர்ந்து வரும் பயணிகளே!

56
இப்பாடலுக்கு அவரவர் வீட்டிலேயே ஆயிரம் உதாரணம் இருக்கும், என் வீடும் சேர்த்து.
👇🏼

ஏதோ ஒரு ஆங்கில நாவலில் ஒரு முறை படித்த வாக்கியம் அடிக்கடி என் நினைவுக்கு வரும்.
அதிலே கதாநாயகனின் தாய் அவன் திருமணத்திற்கு பிறகு அவன் மனைவிக்கு அவனை விட்டுக் கொடுப்பதை பற்றிக் கூறியது 'தன்னிடமிருந்து தன் மகன் வரவில்லை, தன்மூலம் இவ்வுலகிற்கு தன் வாழ்வை வாழ வந்து இருக்கிறான்' என்று.
அவன் உலகிற்கு வருவதற்குத் தான் ஒரு கருவி மட்டும் என்று கூறியதாக அந்தக் கதாசிரியர் எழுதி இருந்தார்.
இது என் மனதில் நன்றாகப் பதிந்துவிட்டது. இருந்தாலும் நான் இதை மனதார உணர்ந்து ஏற்றுக் கொள்வதற்கு முயற்சி எடுக்கவேண்டும்.
தானே மனம் மாறாது, மனம் மாறுவதற்கு நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும்.மனிதன் மற்றும் இன்னபிற விலங்கினங்கள் என்று அனைவருமே தங்கள் வாழ்க்கையை வாழ வந்தவர்கள், யாருக்கும் அடிமைகளல்ல.

என்னுடன் படித்த தோழி ஒருவரின் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு சென்ற பொழுது (அவர்கள் கிறிஸ்துவர்கள்) அதை நடத்தி வைத்த பாதிரியார் கூறினார்..... திருமணம் செய்துகொள்ளும் இருவரும் ஒருவரையொருவர் மேம்படுத்த வேண்டும்.
ஒருவருக்கொருவர் துணையாக இருந்து ஒருவர் மற்றொருவரை எல்லாவிதங்களிலும் ஒரு நல்ல உயர்ந்த நிலைமைக்கு அழைத்துச் செல்வதே திருமணத்தின் நோக்கம் என்று கூறினார்.  அவர் பொருளாதாரத்தைக் கூறவில்லை. மனதின் வளத்தைக் கூறினார்.
இதுவும் என் மனதில் பதிந்து விட்டது.
பதிந்து என்ன பயன்?! உணர்வதற்கு பல வருடங்கள் ஆகிவிடுகின்றன. சிறிய வயதில் உணர்பவர்களின் வாழ்க்கை அமைதியாகவும் வளமாகவும் இருக்கும் என்பது என் கணிப்பு!












Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி