எண்ணினால் எய்தலாம்

எண்ணினால் எய்தலாம்

எண்ணத்தின் வலிமை எப்படிப்பட்டது
என்பதை என்றோ கேள்விப்பட்டேன்,
இருந்தும் மனதில் ஐயம் கொண்டு,
இருந்தேன் நானும் ஒரு பொழுதில்.

ஆனாலுமே அவ்வப்போது, வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை,  அவை நடந்த காரணம் என்னவென்று
எண்ணிப்பார்த்தால் சிலநேரம்...
எண்ணம்தான் அந்தக் காரணமோ?
என்னும் சிறிய ஐயம் ஒன்று வருகிறதின்று என் மனதில்.

ஒரே குறியாய் ஒன்றை நினைத்து,
நினைத்துக் கொண்டே நாமிருந்தால்,
உலகில் எங்கும் விரவி இருக்கும் அதிசய சக்தி அதே சக்தி,
அந்த ஆசையை நமக்கெனவே நடத்திக்காட்டும் என்பதையே  நண்பர் பகர்ந்தார் ஒரு நாளில்.
புத்தகம் ஒன்றில் பல நாள் முன்பு
படித்தும் இருந்தேன்,
இந்தக் கூற்றை இதே கூற்றை!

எண்ணும் அந்த ஒரே எண்ணம் என்றும் வேண்டும் நம் மனதில்,  அடிப்படை எதுவும் இல்லையென்றாலும் 
நடக்கும் என்ற உறுதியுடன்! பற்றுறுதி என்பது இதன் பெயராம்
'ஃபெய்த்' என்பார் இதை ஆங்கிலத்தில்!

63
எண்ணம் பற்றிய நினைவு 👇🏼

சில நேரங்களில் நாம் ஒன்றை மிக விருப்பப்பட்டு நினைத்துக்கொண்டே இருந்தால், திடீரென்று எதிர்பாராத ஒரு நாளில் அது நடந்து விடுவதை அநேகமாக நாம் அனைவருமே கவனித்திருப்போம்.
இது தற்செயலாக நடந்ததா இல்லை நாம் எண்ணங்களின் உந்துதலால் நடந்ததா என்று என்னால் இன்னும் உறுதியாக கூறமுடியவில்லை.
அடிமனதில் எண்ணங்களுக்கும் ஒரு வலிமை இருக்குமோ என்ற ஒரு சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இதன் தொடர்பாக  ஒரு சுவையான விஷயம் எனக்கு ஞாபகம் வருகின்றது.

நான் தமிழ் வார இதழ்களை முன்பெல்லாம் மிக விரும்பிப் படிப்பதுண்டு.
அந்தக் காலத்தில் ஒரு வார இதழில் (குமுதம் என்று நினைக்கிறேன்) ஒரு முறை நடிகர் விகே ராமசாமி அவர்கள் அளித்த ஒரு பேட்டி ஒன்றில்  சில அறிவுரைகள் கூறினார். பொதுவாக நாம் யாரை பற்றியும் கெடுதலாக நினைக்கவோ அல்லது சாபம் கொடுக்கவோ கூடாது...ஏன்  என்றால் வானுலக தேவர்கள் அடிக்கடி மேலே இருந்துகொண்டு 'ததாஸ்து' என்று அவ்வப்போது சொல்லிக்கொண்டு இருப்பார்கள், ததாஸ்து என்றால்  'நடக்கட்டும்' என்று பொருளாம்... நாம் யாருக்காவது கெடுதல் கூறினால் அந்த நேரம் தேவர்கள் ததாஸ்து என்று சொல்லிவிட்டால், அது  நடந்து விடும் என்பார். அவருக்கு இதில் நம்பிக்கை இருந்திருக்கிறது. எனக்கு தேவர்கள் இருப்பதாக நம்பிக்கை இல்லை.
ஆனால் அந்த ததாஸ்து என்பதுதான் ஒருவேளை 'நமக்குத் தேவையானவற்றைப் பற்றி நாம் நினைக்கும் பொழுது கூட வேலை செய்கிறதோ?' என்று வேடிக்கையாக நினைத்துக்கொள்வேன்.  ஆங்கிலத்தில் இதைத்தான் 'கார்டியன் ஏஞ்சல்' என்று கூறுகிறார்களோ?

எதுவாய் இருந்தபோதிலும் எண்ணங்களுக்கு ஒரு வலிமை இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.....




Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி