விழிப்புணர்வு

விழிப்புணர்வு

சுற்றிலும் நடப்பது என்னென்ன
நடப்பதின் அர்த்தம் என்ன
அதனைத் தொடரும் விளைவுகள் என்ன
விளைவால் நமக்காவது என்ன
என்பதையெல்லாம் உணரும் அறிவும்,

நினைவின் உள்ளே நடப்பது என்ன
நடக்கும் எண்ணங்கள் என்னென்ன
ஏன் அவை வந்தன?
வந்ததினால் வரும் செயல்கள் என்ன,
என்பதை எல்லாம் தெளிவாய் உணர்ந்து
உள்ளும் புறமும் அறியும் மதியே
விழிப்புணர்வென்பது அதுதானோ?

ஆமாமென்றால் எனக்கது குறைவு!
இத்தனை வயது ஆனபின்னே
இனிமேல் வருமா அறியேன் நானே
இருப்பதைக்கொண்டு நடப்பதைத் தவிர
வேறொன்றறியேன் பராபரமே!



👇🏼எனக்கிது குறைவு

மேலே கூறிய விழிப்புணர்வு எனக்கு மிகவும் குறைவு.
என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சுற்றியிருக்கும் பொருட்கள், காதில் விழும் செய்திகள், இவைகளை நான் ஓரளவுதான் கவனிப்பேன்.
மிகவும் கூர்மையாக அனைத்தையும் உள்வாங்கும் அளவிற்கு எனக்கு கவனிக்கும் தன்மை கிடையாது.
இதை என்னில் இருக்கும் ஒரு குறையாகவே நான் கருதுகிறேன். எந்த ஒரு மனிதராக இருந்தாலும் விழிப்புணர்வு என்பது அத்தியாவசியமான ஒன்று.
நாம் என்ன தொழில் செய்கிறோம், பணம் சம்பாதிக்கிறோமா இல்லையா, சாதனை செய்கிறோமா இல்லையா, என்பதெல்லாம் வேறு.... ஆனால் அடிப்படையாக ஒரு மனிதனுடைய வாழ்வில் இந்த விழிப்புணர்வு நன்றாக இருந்தால் நாம் நம்மை நாமே உணர்வதற்கும், உணர்ந்து, தேவை என்றால் மாறுவதற்கு அல்லது தேவை என்றால் சற்று ஜாக்கிரதையாக இருப்பதற்கு என்று எல்லா வகையிலும் வாழ்க்கை இன்னும் கொஞ்சம் வளமாக இருக்க இந்த விழிப்புணர்வு அவசியம் என்பது என் கருத்து.
ஆனால் இந்த விழிப்புணர்வு என்னில் மிகவும் குறைவாக இருப்பதாலோ என்னவோ பல சமயங்களில் இக்கட்டுகள் மற்றும் சிக்கல்களிலிருந்து என்னை வேறு ஏதோ ஒரு சக்திதான் விலக்கிவிடுவதாக நான் உணர்கிறேன்.... ஒருவேளை இதைத்தான் ஆங்கிலத்தில் Guardian Angel  என்று கூறுகிறார்களா என்னவோ தெரியவில்லை!









Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி