நோய் முதல் நாடி

நோய் முதல் நாடி

நோயில் தவிக்கும் நோயாளி
தானே கூறும் நோயின் கதையை,
தீரக் கேட்கும் தன்மை தேவை
திண்ணியதொரு மருத்துவராகி
நோயின் தன்மை விளங்கிக் கொள்ள!
அவர் சொல்லும் கதையைக் கேட்க கேட்க
நோயின் கூறு எதுவென்று
தன்னால் விளங்கும் நமதறிவுக்கு!

மூலக்கூறு எதுவென்று நமக்குக் கொஞ்சம் விளங்கிய பின்னே,
பரிட்சை செய்து பார்க்க வேண்டும் நோயாளியவரின் உடம்பு தன்னை,
அதற்குப் பிறகு தேவையென்றால்
ஆய்வுக்கனுப்பலாம் இரத்தத்தை,
அதன் முடிவில் விளங்கும் நோயின் கதை.
அதன் பின்னாலே சிந்தனை செய்தால்
நோயின் தன்மை என்னவென்று விளங்கிடும் தெளிவாய் நமதறிவுக்கு!

முடித்து வைக்க நோயின் கதையை
மருந்துகள் எதுவும் தேவையா,
விளக்கம் மட்டும் போதுமா?
சிந்தித்தாலே சில மணித்துளிகள்  விளங்கிடும் தானே  நமதறிவுக்கு!

விளங்கிய பின்னே அவரிடமே எடுத்துக் கூற எடுக்க வேண்டும்
நிதானமாக சில மணித்துளிகள்...
அவ்விதம் விளக்கிக் கூறாவிட்டால்  விடயம் விளங்காதவரறிவுக்கு!

இருவர் அறிவும் தெளிந்த பின்னே கேட்டு வாங்கலாம் கட்டணத்தை மருத்துவர் அந்த நோயாளியிடமே!
செய்யும் தொழிலாம் மருத்துவத்தை,
அவசரம் ஏதும்  இல்லாமல் செப்புடன் செய்து முடிக்கும் போது
தவமாய் மாறிடும் அத்தொழிலே!


58
நல்ல அனுகுமுறை(என் கருத்தில்) 👇🏼

வில்லியம் ஆஸ்லர் என்ற கனடாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
அவர் தம் மாணவர்களுக்கு முதலில் சொல்வது 'நோயாளி சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டே இரு.... அவர் தனக்கு என்ன நோய் என்பதை அவரே கூறி விடுவார்' என்பதே. முதல் அறிவுரையாக அதைக் கொடுப்பார்.
மருத்துவப்படிப்பில் இதை 'ஹிஸ்டரி டேக்கிங்' என்று கூறுவார்கள்.

நாங்கள் மருத்துவம் படிக்கும் பொழுதும் எங்கள் பேராசிரியர்கள் இதை வலியுறுத்தி உள்ளார்கள். நோயாளியிடம் அவருக்கு வந்த நோயைப் பற்றி முதலில் விரிவாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த ஹிஸ்டரி டேக்கிங் என்பதே பல தளங்களைக் கொண்டது. நோயின் ஆரம்பம், அது எப்படி வளர்ந்தது, இப்பொழுது என்ன பிரச்சினைகள் இருக்கின்றன, இந்த நோய் வருவதற்கு முன்னால் இதே போல் வந்துள்ளதா, மற்றும் தொடர்பாக வேறு பல நோய்கள், இதற்கு என்ன வைத்தியம் செய்து இருக்கிறார்கள்,
இன்னும் பல பல.... இதற்குக் குறைந்தது பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எடுத்தால்தான் நமக்கு முழு விவரங்களும் கிடைக்கும். பல நேரங்களில் நோயாளிகள் சரியாகக் கூற மாட்டார்கள்.
ஏனென்றால் எதைச் சொல்ல வேண்டும் எதை விட வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது, எதையும் விட்டுவிடாமல் கூறுவது சாலச்சிறந்தது. அதிலிருந்து  தனக்கு வேண்டியவைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது மருத்துவருடைய கடமை, திறமையும் கூட.
என்னைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய பிரம்ம வித்தை கிடையாது நோயாளியைப் பேச விட்டாலே போதும், நாம் அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் தானாகவே முக்கால்வாசி நேரம் நோய் என்னவென்று விளங்கிவிடும். பெரிய முயற்சி எதுவும் தேவையில்லை.

இவ்வாறு நோயின் சரித்திரத்தைச் சரியாக கேட்டுக் கொள்ளாததால் பலமுறை நோய் என்னவென்று கண்டுபிடிப்பது தவறாகி விடுகிறது.
நோயைக் கண்டுபிடிப்பதே தவறாகி விட்டால் வைத்தியம்  எப்படி சரியாக இருக்க முடியும்? முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போலத்தான் ஆகிவிடும்.

எங்கள் 'மெடிசன்' பேராசிரியர் டிகே கணேசன் என்பவர் இருந்தார்....அவரைப்போல் டயாக்நோஸ் செய்பவரை இன்றுவரை நான்  பார்த்ததில்லை.
நோயாளி பேசப்பேச என்ன நோய் என்று அவருக்கு விளங்கிவிடும்.
ஒரு  'ஹிஸ்டரி'யிலேயே நாம் டயாக்நோஸிஸ் 85 சதவிகிதம் கண்டுபிடித்துவிட வேண்டும் என்றும் மீதி 15 சதவீதம் தான் தொட்டுப்பார்த்து பரீட்சை செய்வது, மற்றும் ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே போன்றவையெல்லாம் என்றும் அவர் அடிக்கடி கூறுவார்.
இன்றைய மருத்துவத் துறையில் கிட்டத்தட்ட எடுத்தவுடனேயே ஸ்கேனுக்கு அனுப்பிவிட்டுப் பிறகுதான் டாக்டரையே பார்க்கிறார்கள்.
இது தலை கீழ் விவகாரம் மட்டுமல்ல நோய் கண்டுபிடிப்பையே மாற்றக்கூடிய வழிமுறையாகவும் உரு மாற வாய்ப்பிருக்கிறது.

மருத்துவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்... முறைப்படி செய்யும் வைத்தியத்திற்கும் முறை இல்லாமல் தலைகீழாக செய்வதற்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றது.
இன்றைய இளம் மருத்துவர் இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் மிகச் சிறந்த மருத்துவராக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

என்னுடைய கருத்தின்படி எல்லா விதமான மருத்துவ முறைகளிலும் ஆங்கில மருத்துவம் தான் ஆகச்சிறந்த மருத்துவம்.
அதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
நாங்கள் படித்த 'டெக்ஸ்ட்' புத்தகங்களை எழுதிய மருத்துவ- எழுத்தாளர்கள் அவ்வளவு  நேர்மையான, ஆழமான அறிவு கொண்டவர்கள்.ஏறக்குறைய அனைத்து புத்தகங்களும் 19ஆம் நூற்றாண்டில் எழுதியவைதான்.  அவ்வப்பொழுது அவை 'எடிட்' செய்யப்படுகின்றன.
இருந்தும் அவைகளின் அடிப்படையில் எப்பொழுதுமே ஒரு நேர்மை இருக்கும்.
ஏனென்றால் அந்தக் காலத்தில் அதை எழுதியவர்கள் அனைவரும் முதலிடம் கொடுத்தது நோயாளிக்கு!
யாருமே மருத்துவத்தை ஒரு வியாபாரமாகப் பார்க்கவில்லை அந்த நூற்றாண்டில்.
இன்று நாம் அந்தக் கொள்கையிலிருந்து கொஞ்சம் விலகி விட்டோம் என்று எனக்குப் பலமுறை சந்தேகம் வருகிறது. நம்மில் பலர் விலகித்தான் இருக்கிறோம்......ஆமாம்!

ஆங்கில மருத்துவத்தை நாம் படித்த முறைகளின்படி 'பிராக்டீஸ்' செய்தால்  அதைப் போன்ற ஒரு அருமையான மருத்துவம் இருக்க முடியாது.
கொஞ்சம் பொறுமையாக நேரம் செலவழித்தால் போதும், மிகவும் சுவாரசியமாகவும் நம் பிராக்டிஸ் மாற வாய்ப்பிருக்கிறது.
பணம் எடுத்துப், பிறகு கொடுக்கும், எந்திரமாக மட்டும் நாம் ஆகாமல்......
இறுதி நாட்களில் திரும்பிப் பார்க்கையில், நமக்கு மிகவும் மனத்திருப்தியும் நிறைவும், அளிக்கக்கூடியது இந்த மருத்துவத் தொழில்.
வாழ்வில் திருப்தியும் நிறைவும் வாய்ப்பது எளிதல்ல. கிடைத்த வாய்ப்பை நழுவவிடலாமா?

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி