கேரட் பீட்ரூட்

கேரட் பீட்ரூட்

சோறு  செய்வதெப்படியோ
அரிசியும் ஊறனும் அப்படியே,
தளதளவென்ற கேரட்டும்
கருகருவென்ற பீட்ரூட்டும்
கொஞ்சமே கொஞ்சம் முட்டைக்கோசும்,
துருவித் துருவித் தட்டில் போட்டு
தனியா எடுத்து வைப்பாய் தம்பி!

சின்னச் சின்ன சீரகம்
பூண்டுப்பல்லும் இஞ்சித் துண்டும்
பச்சைப் பசேல் மிளகாயும்,
அனைத்தும் ஒன்றாய்
அரைத்து விழுதாய்
எடுத்து வைப்பாய்
எந்தன் கண்ணே!

அடுப்பில் ஏனம் ஏற்றி
காய்ந்ததும் நெய்யை ஊற்றி
அரைத்த விழுதை உள்ளே போட்டு கரண்டி கொண்டு கலக்கிவிட்டு
இரண்டு நிமிடம் வதக்கியதும்
அரைக் கரண்டி மிளகாய்த் தூள்
அதே அளவு மஞ்சத் தூள்
அளவுக்கேத்த உப்புடன்
மூன்றும் உள்ளே தூவிவிட்டு,
துருவிய காயை உடனே கொட்டி
மெதுவென்றூறிய அரிசி
மெல்ல உள்ளே போட்டுவிட்டு,
வெந்நீர் ஊற்று இரண்டுக்கொன்று

வெந்த சோற்றைக் கொஞ்சம் கிளறி
ஏனமதிலே போட்டு வைத்தால்
சிவந்த நிறமும் புதிய சுவையும்,
நிறைந்த சோறு சூடாய்த் தின்றால்!

தொட்டுக்கொள்ளக் கண்டிப்பாய்
ஏதோ வேண்டும் என்போருக்குத்
தயாராய் இருக்கு தயிர் பச்சடி!

57
சிவந்த சாதம் உதித்த விதம்
👇🏼

🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕

‌‌‍‌பல வருடங்களுக்கு முன்பு அகலமான தட்டையான குக்கர், புதிதாக பிரஸ்டீஜ் கம்பெனியில் இருந்து வந்திருந்தது.
சாதம் வைப்பதற்கு, பொரியல் தாளிப்பதற்கு, உப்புமா செய்வதற்கு எல்லாம் அது மிகவும் சௌகரியமான ஒரு பாத்திரம்.

அதில் ஒரு கலவை சாதம் செய்து பார்க்கலாம் என்று எனக்கு ஒரு ஆசை வந்து- வீட்டில் கொஞ்சம் முட்டைகோஸ் கேரட் பீட்ரூட் எல்லாம் பழையது இருந்தது.... அதையெல்லாம் துருவி எனக்குத் தெரிந்த மசாலாவை போட்டுத் தாளித்து, அரிசி நன்றாக ஊற வைத்து, கொஞ்சம் குறைவாக தண்ணீர்  ஊற்றி, உதரி உதிரியாக சாதம் செய்திருந்தேன்.
எனக்கே ஆச்சரியம்!
லேசான சீரக மனத்துடன் காய்கறிகள் சேர்ந்த அந்த சாதம் மிகவும் நன்றாக வந்திருந்தது,
அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்.

அதிலிருந்து அடிக்கடி நான்  வீட்டிற்கு விருந்தாளி யாராவது வந்தாலும் அல்லது என் மகன்கள் கேட்டாலும் அதை செய்து கொடுப்பேன்.
ஒருமுறை என் தோழி என் வீட்டிற்கு வந்தபொழுது அவளது தாயாரும் வந்திருந்தார்கள்.
அந்த சாதம் நான் செய்து கொடுத்தேன். அவருக்கு அது மிகமிக பிடித்துவிட்டது.
அவர்கள் சில மாதங்கள் கழித்து தன் மகனுடன் இருக்க அமெரிக்கா சென்று விட்டார்கள்.
பிறகு திடீரென்று ஒருநாள் எனக்கு அமெரிக்காவில் இருந்து ஃபோன் வந்தது இந்த பீட்ரூட் சாதம் எப்படி செய்வது கொஞ்சம் சொல் என்று கேட்டு... நான் அவர்களுக்கு விளக்கமாக சொல்லி, அமெரிக்காவில் கிடைக்கும் அந்த பாஸ்மதி அரிசியை வைத்து அவர்கள் பேரனக்கு அதை செய்து கொடுத்தார்கள்.
அவனும் மிகவும் விரும்பி சாப்பிட்டதாகக் கூறினார்கள்.
சிறு குழந்தைகள் அதை மிகவும் விரும்புவதற்கு அதன் நிறமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எனது சொந்தத் தயாரிப்பான இந்தக் கலவை சாதம், செய்து கொடுத்தவர்கள் எல்லாருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.
இதில் எனக்கு ஒரு சின்ன திருப்தி.

Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி