ஒட்டுவதும் ஒட்டாததும்

ஒட்டுவதும்
ஒட்டாததும்

'டெப்ஃலான்' பூச்சு போட்ட
கல்லில்,
தோசை மாவை ஊத்திக்
கொஞ்சம் கூட ஒட்டாமல்,
திருப்பிப்போடா தோசையாக,
எண்ணை எதுவுமில்லாமல்
சுட்டெடுக்க சுளுவாக,
எடுத்துத் தட்டில் வைத்தால்
வெள்ளை வெளேர் தோசை பார்க்க மிகவும் அழகாக,
ருசிக்க மட்டும் சுமாராக
ஏதோ ஒன்னு தோசையின்னு!

சமைக்கும் பொருள் எதுவுமே ஒட்டாதிருக்கும் ஏனம்,அது
ஒட்டாதிருக்க வேண்டியே
கலக்கப்படும் ரசாயனம்....
கண்டிப்பாக அதுவும் நன்மையில்லை உடம்புக்கே!

சமைக்கும் பொருளில் எல்லாம், ஒட்டிக் கொண்டு வரும் இரும்புக்கல்லாம் தோசைக்கல்,
அதிலே சமையல் செய்தால்
ஒட்டிக் கொண்டு வரும்
இரும்புப் பொருளாம் ஓர் சத்து  நன்மையாகும் நம் உடம்பில்!
நல்ருசியும் வரும் நம் நாவில்!

இரும்புக் கல்ல அடுப்பில் வெச்சு
இருகரண்டி மாவை ஊத்தித்
தாராளமாய்க் கடலை எண்ணெய் தெளிச்சு விட்டு திருப்பிப் போட்டு மொறுமொறுன்னு சுட்டெடுத்தா அதுக்குப் பேர்தான் தோசை!
காஞ்ச மிளகாய் போட்டரைச்ச தேங்காய் சட்னி
தொட்டுக்கிட்டா
அதுக்குப் பேரு சொர்க்கம்!


 👇🏼

சமீபத்தில் முகநூலில் இந்த 'நான்ஸ்டிக் குக்வேரை'ப்பற்றி ஒரு ஃபார்வர்ட் அனுப்பியிருந்தார் என்னுடைய டாக்டர் தோழி ஒருவர்.. அதைப் படித்ததும்
அந்தக்காலத்தில் திருமணப்பரிசாக வந்த  ஒரு 'நான்ஸ்டிக்' தோசைக் கல் ஞாபகம் வந்தது.,  சற்று குழிவான
கல் அது.  பொரியலும் அதில் செய்யலாம், உப்புமா செய்யலாம்...... அதிக பழக்கம் இல்லாததால் நான் அதில் எண்ணெய் ஊற்றி தான் தோசை எல்லாம் செய்து கொண்டிருந்தேன்.
மரக்கரண்டியே எப்பொழுதும் உபயோகிப்பேன் என்று சொல்ல முடியாது.... நம் சாதாரண சட்டுவத்தை உபயோகித்து, அதில் சில கீறல்கள் விழுந்து விட்டன.
இருந்தாலும் நான் உபயோகித்துக் கொண்டு தான் இருந்தேன்.

பிறகு ஏதோ ஒரு ஆங்கில வார இதழில் இந்த நான்ஸ்டிக் குக்வேர் பற்றி போட்டிருந்தார்கள்.
டெஃப்லானை ஒட்டுவதற்கு உபயோகப்படுத்தும் பசையில் புற்றுநோய் விளைவிக்கக் கூடிய சில ரசாயனங்கள் கலந்து இருக்கின்றன என்று, நான் படித்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலிருக்கும்.
அதிலிருந்து 'நான்ஸ்டிக்' குக்வேர் வாங்குவதும் இல்லை அதைப் பயன்படுத்துவதும் இல்லை, அந்த கூற்றில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. ஆனால் பயன்படுத்தி சோதித்துப் பார்க்கத் துணிவில்லை.

மரக்கரண்டி மட்டும்தான் உபயோகப்படுத்தவேண்டும், கீறல் விழக் கூடாது என்று அதனுடன் மரக்கரண்டி கொடுக்கிறார்கள்...
கீறல் விழுந்தால் அந்த ரசாயனம் உணவுப் பொருளுடன் கலந்து விடும் என்ற எச்சரிக்கை வேறு! அது எதற்கு அவ்வளவு சிரமப்பட்டு மரக்கரண்டி உபயோகித்து பயந்து கொண்டே சமைக்க வேண்டும்? சாதாரணமாக இயல்பாக சமையல் செய்வது எவ்வளவு சுலபமாக இருக்கும்!
இரும்புக் கல்லில் ஒட்டாமல் வரவேண்டும் என்றால் சிறிது எண்ணை தடவினால் அல்லது கல்லின்மேல் வெங்காயம் தேய்த்து ஊற்றினால் தோசை ஒட்டாமல் நன்றாக வரும்.
'நான்ஸ்டிக்கில்' சுடும் தோசையை விட இரும்புக்கல்லில் சுடும் தோசை ருசி அதிகமாகவும் இருக்கும்.
தோசை என்றாலே அதை ஊற்றியவுடன் வரும் 'ஸ்ஸ்ஸ்' என்ற சத்தமும் அதிலிருந்து கிளம்பும் கடலெண்ணெய் மனமும்தான் ஞாபகம் வருகின்றன. உளுந்து, வெந்தயம், கடலை எண்ணெய், இவை மூன்றின் மணமும் கலந்து,
'ஸ்' சத்தத்துடன் வருவதுதான் என்னைப் பொறுத்தவரை தோசை! இவையெல்லாம் இல்லாவிட்டால் அது தோசையா என்ற சந்தேகம் தான் வருகிறது!

காலம் செல்லச் செல்ல விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் நாம் கண்டுபிடிக்கும் புதிய புதிய சாதனங்கள் நம் வாழ்க்கையை  மேலும் சிக்கலாகத் தான் மாற்றுகின்றன என்று  தோன்றுகிறது.
வாழ்க்கை ஒரு இயல்பாக, சாதாரணமாக, சந்தோஷமாக ஏன் இருக்கக் கூடாது?
புதிதாக வரும் எந்தப் பொருளைப் பற்றியும் கொஞ்ச நாட்களிலேயே பின்னாடியே ஏதோ ஒரு செய்தி வரும், அதில் அந்தக் கெடுதல், இந்தக் கெடுதல் என்று......
அவ்வளவு சிரமப்பட்டு அவைகளை  வாங்குவானேன்?
இவை எனக்குள் எழும் சிந்தனைகள்.......





Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி