நீதி மறந்த இனம்

நீதி மறந்த இனம்

ஆயுள் முழுவதும் நமக்கென உழைத்து,
அம்மாவென்றழைக்கும் பசுவும் காளையும்
உழைக்கும் காலம் முடிந்தவுடன்
ஒய்வுக் காலம் இல்லாமல்
அடிமாடென அனுப்பி வைக்கும்
நாமெல்லோரும் மனிதர்தானா?

வளர்க்கும் நமக்கே உணவென மாறி உயிரைக்கொடுக்கும்
கோழியும் குஞ்சும் கூட்டில் அடைந்து,
நடக்க விடாமல் வளரவைக்கும்
மனிதர் நாம் மனிதர்தானா?

'சூ'வென்றழைத்து விலங்குகள் அனைத்தும்
சின்னஞ்சிறியக் கூண்டினுள்ளே
ஆயுளுக்கும் அடைந்து வைத்து
அவற்றைப் பார்த்துப் பொழுதைப் போக்கும் கொடூர ஜந்து
நமக்குப் பெயர் மனிதர் தானா?

செல்லப்பிரானி என்ற பெயரில்
காசு கொடுத்து வாங்கி வந்து
குப்பி போன்ற தொட்டிக்குள் மீனைப் போட்டுத் தீனி போடும்
மனிதர் நமக்குத் தண்டனை என்ன?

பறந்து செல்லும் பச்சைக்கிளியின்
இறக்கை இரண்டை வெட்டிவிட்டு இரும்புக் கூண்டில் உள்ளே வைத்து
'நாளை நன்றாய்  நான்   இருப்பேனா?
நீயே சொல்லு செல்லக்கிளியே?'
மனிதாபிமானம் இதுதானா?

காட்டில் எங்கும் அலைந்து
இலையைத் தின்று விதையைப் போட்டு
காடு வளர்க்கும் கம்பீர யானை,
யானையைப் பிடித்து இழுத்து வந்து
சங்கிலியில் பிணைத்து வைத்து,
கரத்தைக்கூப்பி ஆசி கேட்கும்
அறிவிலிதான்  மனிதனா?

குற்றம் ஏதும் புரியாமல்
சுற்றம் சொந்தம் சமூகம்,
குடும்பம் விட்டுப் பிரிந்து வந்து
கைதியான யானை,
விரும்பி நல்ல ஆசி தருமா,
வளைத்து மிதித்துத் துவைக்க வருமா?

மனிதர் நம்மில் ஒளிந்திருக்கும் மிருகக் கூட்டம் வெளியே போனால்
பூமிதன்னில் வாழ வந்த மிருகத்துக்கு விடுதலை நாளாம்!



என்று கிடைக்கும் நீதி 👇🏼

நான் பள்ளி படிக்கும் காலத்தில் விடுமுறைக்கு கிராமத்திற்கு செல்வது வழக்கம்
அங்கு விளையாட்டுத் துணையாக ஆண்கள் பெண்கள் என என் வயதில் பல 'கஸின்கள்' இருந்தார்கள்.
எனக்குப் பையன்களுடன் சுற்றுவது மிகவும் பிடிக்கும் அவர்களுடைய விளையாட்டை கொஞ்சம் ஏக்கத்துடன் பார்ப்பேன் மரம் ஏறுவது, பம்பரம் விடுவது
போன்ற 'ஆக்டிவிட்டீஸ்' தான் எனக்கு மிகவும் விருப்பமாக இருக்கும்.
கோவையில் இருக்கும் போதும் பக்கத்து வீட்டில் இரண்டு நண்பர்கள் இருப்பார்கள் அவர்களுடன் தான் அதிகம் விளையாடுவேன். கில்லித் தாண்டு போன்ற விளையாட்டு எல்லாம் அவர்களிடம் கற்றது தான்.மிகவும் பிடித்த விளையாட்டு கில்லித்தான்டு!
அங்குதான் தோழர்கள் கிரிக்கெட் விளையாடும் பொழுது பந்து வீச எப்பொழுதாவது அதிசயமாக விடுவார்கள். எனக்கு அவர்கள் செய்யும் 'பேட்டிங்' தான் பிடிக்கும், சான்சே கிடைக்காது.

கிட்டிப்புள் என்று கூறப்படும் ஒரு பொருள், கவட்டை வடிவான மரத்துடன் ரப்பர் வார் சேர்த்து  அதில் ஒரு கல்லை வைத்து மரத்தில் உள்ள பறவைகளை அடிப்பது, குறிபார்த்து அடிக்க வேண்டும். அது ஒரு பெரிய வீரம் என்ற நினைப்பு இருந்தது. எனக்கும் ஒன்று அதேபோன்று வேண்டும் என்று கேட்டு ஒரு சிநேகிதன் எனக்கு செய்தும் கொடுத்தான் என்று ஞாபகம்.  மரத்தைச் சுற்றி சுற்றி வந்து கொஞ்ச நாட்கள் அடித்துப் பார்த்தேன் ஒரு பறவை கூட அடிக்க முடியவில்லை என்று மிக வருத்தமாக இருந்தது.
இன்று நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்னால் ஒரு பறவை கூட அடிக்கவில்லை என்று....
இதை ஒரு விளையாட்டாக வைத்திருப்பதே குற்றமென்று என்று தோன்றுகிறது இப்பொழுது.
அதுபாட்டுக்கு பறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பறவைகளை கல்லைக் கொண்டு அடிக்கலாம் என்ற உரிமை நமக்கு எப்படி வந்தது, யார் கொடுத்தார்கள்?
மனித உரிமை சங்கம் போல் விலங்குகள் உரிமையும் இருக்கின்றது, அது ஞாபகத்துக்கு வரவே வராதா?
மனிதர் ஸ்ட்ரைக் பண்ணுவார்கள் கோர்ட்டுக்கு செல்வார்கள் விலங்குகள் எங்கே செல்லும்?

ஒரு சந்தேகம் catapult மருவி கிட்டிப்புள் ஆனதா கிட்டிப்புள் மருவி catapult ஆனதா?
தூய தமிழில் கவண்- இப்பொழுதுதான் பார்த்தேன் ஆன்லைனில்!






Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி