மாறும் கோணங்கள்

மாறும் கோணங்கள்

பத்து வயதில் என்னெண்ணம்
பதினைந்து வயதில் மாறிவிடும்,
பதினைந்து வயதுக் கண்ணோட்டம்
இருபத்தைந்தில் வேறாகும்,
முப்பது வயதுப் பார்வையெல்லாம்
நாற்பதிலே நகைப்பு வரும்....

நாற்பது வயதைத் தாண்டியவுடன்
நோக்கும் கோணம் எல்லாம் மாறும்,
அதுவரை இருந்த கருத்தெல்லாம்
குழந்தைத்தனமென எண்ணம் வரும்
இன்னும் மேலே போகப்போக ஐம்பது அறுபது வயதினிலே வருடம் ஒன்றாய் எண்ணம் மாறும்.

ஒருவர் மனதில் இத்தனை என்றால்
மற்ற மனிதர் எல்லாம் சேர்ந்தால்
எண்ணில் அடங்கா கோணங்கள் இருக்கும்... 

நாம் இருபது வயதில் நினைப்பது எல்லாம்
ஐம்பது வயதில் மனதில் இல்லை,
ஐம்பது வயது நமக்காகும் போது
நம்முடன் இருக்கும்
இருபது வயதின் எண்ணம் என்பது
இவ்வாறேதான் இருக்கும் என
அமைதி அடைந்தால்  நலமது நமக்கே!

கேளிதை மனமே ஒருகணமே
ஒருவர் போன்றே எல்லாரும்
எண்ணம் இங்கே கொண்டு விட்டால்
எங்கே சுவை வாழ்க்கையிலே?

54
இப்பாடலைப் பற்றிய புலனாய்வு👇🏼

கல்லூரி படித்த காலத்தில், நல்ல கணவர் வேண்டுமென்றால் செவ்வாய்க்கிழமையன்று காலை விரதமிருந்து கோவிலில் எலுமிச்சம்பழ தீபம் வைக்க வேண்டுமென்று கேள்விப்பட்டு, சில மாதங்கள் வரை விடாமல் செவ்வாய்க்கிழமை அன்று காலை உணவு உண்ணாமல் குளித்துவிட்டு, எலுமிச்சம் பழத்தைப் பாதியாக வெட்டி ஒரு பாகத்தைப் பிழிந்து எடுத்துவிட்டு, அதைக் குப்புற திருப்பினால் ஒரு அழகிய விளக்கு போல் குழிவாக வரும், அதனுள் நல்லெண்ணெய் விட்டுத் திரி போட்டுத் தீபம் ஏற்றி வைத்து கடவுள் படத்துக்கு முன் வைத்து கும்பிடுவேன், நல்ல கணவர் வரவேண்டுமென்று. அப்படி வந்தவர்தானோ என்னவோ இந்த  செல்வக்குமார் என்கிற நல்லவர்!

சில வருடங்கள் கழித்து அதை நினைத்து பார்த்தபொழுது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது நாமா இப்படி எல்லாம் செய்தோம்(!) என்று..… ஏனென்றால் அது போன்ற ஒரு சடங்கில் நம்பிக்கை போய்விட்டது.

இருந்தும் கடவுள் நம்பிக்கை என்பது வெகு நாட்கள் வரை இருந்தது. என் கணவரும் நானும் அடிக்கடி வியாழன் அல்லது சனி அன்று ஒரே ஊரில் நாங்கள் இருக்கும் பட்சத்தில் ஆஞ்சநேயர் கோவில் எங்கிருந்தாலும் போவோம். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அவருக்கு மிக மிக விருப்பமான ஒரு கோவில். அவர் சில மாதங்கள் தன் பெரியப்பா வீட்டில் தங்கி சென்னையில் படித்துக் கொண்டிருந்த பொழுது அடிக்கடி அங்கே போனதாகவும் அந்த ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும் கூறுவார். நானும் அங்கே அவருடன் செல்வேன், சென்றால் எனக்குள் ஏதோ மிகமிக ஒரு நல்ல உணர்வு வருவது போல் ஒரு பிரமை உண்டானது. எனக்கு எதுவும் சிரமங்கள் அல்லது குழப்பங்கள் வரும் பொழுது நான் உடனே ஆஞ்சநேயரை வேண்டிக் கொள்வேன், உடனே அந்த குழப்பம் எல்லாம் தீர்ந்து சிரமம் எல்லாம் விலகி விடுவது போலத் தோன்றும்.

இப்பொழுது சில வருடங்களாக எனக்கு கடவுள் நம்பிக்கையும் குறைந்து போய் விட்டது, அதாவது ஆஞ்சநேயர் என்று உருவகப் படுத்துவதில்லை, இருந்தாலும் எனக்கு சிரமம் வரும் பொழுது  'பிரபஞ்சமே' தயவுசெய்து இந்த சிரமத்தை விலக்கி விடு என்று என்று மனதுக்குள் நான் சிலநேரம் வேண்டுகிறேன்.
ஏதோ ஒரு விசை அல்லது சக்தியின்படி இந்த பூமியும் மற்ற கிரகங்களும் சுழன்று கொண்டிருக்கின்றன என்று இப்பொழுது தோன்றுகிறது.
இந்த எண்ணம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை.
என் அனுமானத்தின் படி கிட்டத்தட்ட ஒரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை என்னுடைய மனதின் நம்பிக்கைகளும் என்னுடைய பார்வைக் கோணங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.... அனேகமாக அனைவருக்கும் இது இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி