விவசாயம் வெள்ளாமை

விவசாயம்
வெள்ளாமை

ஆதியான காலத்தில்
அன்றைய மனிதன்  செய்ததென்ன?
தானே விளைந்த காய்களை
கனியப் பழுத்த பழங்களை
பரித்துத் தின்றான்
உயிர் வாழ்ந்தான்.
அதற்கும் மேல் என்ன செய்தான்?
அங்கே கண்ட விலங்குகளை
வேட்டையாடி விருந்துண்டான்...

பின்னே செய்தான் விவசாயம்
அன்றே பிரிந்தான் இயற்கையினின்று ,
அதற்கு மேலே மருந்துமிட்டு
அள்ளியெடுத்தான் வெள்ளாமை,
மருந்தால் சிதைந்த
அன்னைபூமி, தேறுவாளா
தெரியவில்லை...

அள்ளியெடுத்த வெள்ளாமை
அளவில்லாமல் சமைத்தெடுத்து,
மிஞ்சிப்போன உணவெல்லாம்
சிந்திக்காமல் வீசியெரியும்
பொறுப்பில்லாத பழக்கத்தை
நாமெல்லோரும் குறைப்பது,
பாடுபடும் விவசாயிக்கும்
பலன் கொடுக்கும் பூமித்தாய்க்கும்
நாம் கொடுக்கும் நன்றியுரை!
ஆடம்பரமாய்த் திருமணம் முடிக்கும் இருமனமிதை மனதில் வைத்துத் திருமணம் செய்தால்
நன்மைபலவும் உண்டாகும்!


இயற்கையை விட்டுத் தூர....
👇🏼

இன்று அனைவரும் மருந்தில்லா விவசாயம் என்று பேசுகிறோம், இயற்கை முறை என்று பேசுகிறோம், 'perma culture' என்றும் பலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்,perma cultureஐத் தன்னிறைவு விவசாயம் என்ற நான் அர்த்தம் கொண்டிருக்கிறேன்.
அதாவது நம் தலையீடு எதுவும் இல்லாமல் பூமியில் தானே புதுப்பித்துக் கொள்ளும் செடிகொடிகளும் மரங்களும் பயிர்களும், சில வருடங்களில் நம் தலையீடு இல்லாமலேயே ஒரு நல்ல காடு போன்ற சூழல் உருவாகி நமக்கு உணவு அளிக்கும் வகையில் அது இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

இப்படிப் பல விதமான பயிர் வகைகள் செய்து நாம் உணவு உண்டு வருகிறோம். ஆழமாகப் பார்க்கப் போனால் எந்த வகை விவசாயமாக இருந்தாலும், நம் தலையீட்டினால் செய்யக் கூடிய எந்த விவசாயத் தொழிலும் இயற்கைக்கு மாறானது தான். இயற்கை என்பது தானாகவே பூமியில் உருவாகி நாம் அதிலிருந்து நமக்குக் கிடைத்தவற்றை உண்டு வாழ்வது தான்.
எப்பொழுது விவசாயத்தை ஆரம்பித்தோமோ, அன்றே இயற்கைக்கு மாறாகத்தான் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நாம் அந்த ஆரம்ப நாட்களில் இருந்து வெகுதூரம் மாறி வந்துவிட்டதால் விவசாயமும் இயற்கைக்கு மாறானது என்பதை ஏற்றுக் கொள்ளவே நமக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கும்.
மேலும் இனி விவசாயம் இல்லாமல் இவ்வளவு பெரிய ஜனத்தொகை உயிர் வாழ முடியாது.
ஆனாலும் விவசாயத்தில் இருந்து வரும் உணவுப் பொருட்களை நாம் மதிப்புடன் நடத்துவதில்லை. எந்தவிதமான தயக்கமும் இன்றி நிறைய வீண் செய்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் அந்த உணவுப் பொருள் எப்படி வருகிறது என்பதே நகரில் உள்ள யாருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்குத் தெரிவதில்லை.

இதற்கு ஒரு சிறிய உதாரணம் நான் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பொழுது, ( நான் கூறுவது ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பாக) சில நாட்கள் விடுதியில் தங்கி இருந்தேன்.
கூட படிக்கும் தோழி ஒருவர் மிகவும் விரும்பி நெய் சாப்பிடுவார். ஆனால் வெண்ணெயை உருக்கினால் நெய் என்பது அவருக்குத் தெரியவில்லை, நான் ஒரு நாள் பேச்சுவாக்கில் இது என்ன பெரிய வித்தை வெண்ணெயை உருக்கினால் நெய் கிடைக்கிறது என்று கூறியவுடன் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்து 'அப்படியா!' என்று கேட்டார், அவர் கேட்டது எனக்கு அதைவிட ஆச்சரியம் கொடுத்தது..... வெண்ணெயிலிருந்து நெய் வருவது கூடத் தெரியாமல் ஒருவர் இருக்க முடியுமா என்று.

ஆனால் இன்று யோசித்துப் பார்த்தால் நிறைய பேர் அப்படி இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது.
பால் என்றால் பால் பொட்டலம், காய்கறி என்றால் காய் கடை, மளிகை சாமான் என்றால் ஸ்டோர், என்ற அளவில் நாம் வந்துவிட்டோம்.
குழந்தைகளும் கடைதான் உணவுப் பொருட்கள் உண்டாகும் இடம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு எப்பொருள் எங்கிருந்து வருகிறது என்ற அறிவு கொடுப்பது நல்லது என்பது என் எண்ணம்.

கடைக்குப் போகிறோம் வாங்குகிறோம், நம்மிடம் பணம் இருந்தால் பிடிக்காததை வீசி விட்டு வேறு வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருக்கிறது நம் அனைவரிடமும்.

அந்தப் பயிர் வருவதற்குள்  விவசாயி எவ்வளவு பாடுபடுகிறார், பூமியில் இருந்து பூச்சி புழு எல்லாம் உண்ட பிறகு  (இயற்கை விவசாயத்தில்) மீதம் இருக்கும் உணவுப் பொருள் தப்பித்து எப்படி நம் கைகளுக்கு வருகிறது ..... இதை நேரில் பார்த்து அறிந்தவர்கள் அதை வீணடிக்கத் தயங்குவார்கள்.
  

Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி