முகஸ்துதி

முகஸ்துதி

'உன்னைப் போல யாருமில்லை
உன் செயலைப் போல ஏதுமில்லை!
நீ செய்வது எல்லாம் அருமை
நீ இங்கிருப்பதுமே ஒரு பெருமை!
அறிவென்றாலும் நீயே
அன்பென்றாலும் நீயே!
மற்ற மனிதன் முட்டாளே,
மூளைமழுங்கிய அறிவிலியே!

இப்படி யாரும் சொன்னாலும்
இதுபோல் எதுவும் பகன்றாலும்
இதுவே முகஸ்துதி என்பதை
அறிந்து கொள்வாய் நெஞ்சே....
உண்மை என்பது இதிலில்லை
நன்மை என்பது அறவே இல்லை
இதையும் நீயே அறிவாய்,
அறிந்து தெளிவாய் நன்னெஞ்சே!

உன்னைப்பற்றி நீயே
உணர்ந்து கொள்வது நலமே
பிறரின் கூற்று எதுவாயினும்
சிந்தனை செய்த பிறகே
ஏற்றுக் கொள்வாய் மனமே!
சுயமாய் சிந்தனை செய்ததனால் வாழ்வில் வளத்தினைப் பெறுவாயே!
வளமென்றால் அது பணம் அல்ல
மனத்தின் வளமதைக் கூறுகிறேன்!

முகஸ்துதி  இதுவே என்றென
மனமுணரா வண்ணம் பேசிடும் மகிமை உண்டு சிலருக்கு
மனமே  இதை நீ மறவாதே
மெய்கள் எதுவென உணர்ந்து மகிழ்ச்சி காண்பாய் வாழ்வினிலே!

முகஸ்துதியும் நானும் 👇🏼

நான் பள்ளி படிக்கும் காலத்தில் என் தந்தையார் கூறுவார் எங்கள் ஊர் ஆட்களைப் பற்றி....
'என்ன கவுண்டரே* ன்னாப் போதும் கலப்பைய தொப்புனு போட்டுருவான்' என்று.
அதாவது முகஸ்துதிக்கு அவ்வளவு மயங்கக் கூடியவர்கள் இவர்கள் என்று.
தங்கள் வேலையைக் கூட விட்டுவிட்டு ஓடி வந்துவிடுவார்கள் யாராவது அவர் முகத்துக்கு நேரே அவர்களைப்பற்றி பெருமையாக கூறினால், என்பது அதன் அர்த்தம்.

தந்தை இதை சொன்ன பொழுது தான் எனக்கு முகஸ்துதி என்பதன் அர்த்தம் கொஞ்சம் பட்டும் படாமலும் விளங்கியது.
ஆனால் அதை உளமார நான் உணரவில்லை என்றே நினைக்கிறேன்.
ஏனென்றால் எல்லாரையும் போல நானும் பலமுறை சாயம் பூசிய முகஸ்துதிக்கு மயங்கி பல விதங்களில் நஷ்டப்பட்டு இருக்கிறேன்.
வேடிக்கை என்னவென்றால் நாம் நஷ்ட படுகிறோம் என்று நாம் உணர்வதற்கே பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகிவிடும்.

இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்று எனக்குப் படுகிறது என்றால் நம்மை நாம் சரியாக எடை போடவில்லை..... நம்மைப்பற்றி ஒரு நடுநிலைமையோடு நாம்  சிந்தித்துப் பார்க்காமல் பூனை கண்ணை மூடிக் கொண்ட கதையாக நினைத்துக் கொண்டிருப்பதுதான். இதுபோன்ற இயல்பு உள்ளவர்களுக்கு மற்றவர் வந்து ஏதும் கூறினாலும் தன்னைப் பெருமையாக கூறுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு
தானோர் இளிச்சவாயர் ஆகிறோம் என்று கூட உணராமல் காரியம் செய்வார்கள்.... நான் செய்திருக்கிறேன் பலமுறை.
இதில் ஒன்றும் பெரிய தவறில்லை.. ஆனால் என்ன.... பின்னாளில் நினைத்துப் பார்க்கும் பொழுது நமக்கே நம்மைப் பற்றிய ஒரு நல்ல உணர்வு வராது அது ஒன்றுதான் இதில் பிரச்சினை.

சில நேரங்களில் பொருள் நஷ்டமும் ஆகக்கூடும் நம் அறியாமையினால்.... சரி அதை தலைவிதி என்று நினைத்துக் கொண்டு போக வேண்டியதுதான்!

மற்றவர்களுக்கு எல்லாம் சுலபமாக அறிவுரை கூறினாலும் இந்த முகஸ்துதியை சரியாக அடையாளம் கண்டு கொள்வது என்பது கொஞ்சம் கடினமான காரியம் என்றுதான் தோன்றுகிறது. வெளிப்படையாக முகஸ்துதி செய்பவர்களை சுலபமாகக் கண்டு கொள்ளலாம்.
ஆனால் முகஸ்துதி என்ற கலையை கற்றுத் தேர்ந்த வித்தகர்களின் பேச்சை அடையாளம் காண்பது என்பது கொஞ்சம் கடினம் தான்!


*இந்த குணநலன் இவர்களிடம் அதிகம் இருப்பதாக கருத்துக் கூறியதால் இந்த சமூகத்தின் பெயரை குறிப்பிட்டிருக்கிறேன்.




Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி