நீச்சலும் கையெழுத்தும்

நீச்சலும் கையெழுத்தும்


நீருக்குள்ளே மீனைப்போல, கையைக் காலை வீசி போட்டு
நீரின் தூரம் எதுவென்றாலும் அம்பைப் போல முன்னே செல்வது கண்டிப்பாக பெரிய சுகமே!

நீச்சல் எனக்குத் தெரியாதென்பது
நிச்சயமாக மனக்குறையே
வருடம் இத்தனை சென்ற பின்னே
வருமா பழக்கம் அறியேன் நானே?

குழந்தைப் பருவ ஞாபகம் ஒன்றில்,
குட்டிச் சிறுவன் அத்தையின் மகன்
கிணற்றுச் சுவரின் மேலிருந்து
நீருக்குள்ளே அம்பாய்ப் பாய்ந்து
மேலும் கீழும் நீச்சலடித்து
நகைத்துக்கொண்டே பார்ப்பான்,
மேலே நின்று அவனை
ஏங்கிப் பார்க்கும் என்னை!

என்னையொத்த சிறுமிகளான அத்தை மகளும் மாமன் மகளும்
அங்குமிங்கும் தண்ணீருக்குள்
இஷ்டம் போல ஆடுவதை
கிணற்றுப் படியின் மேலமர்ந்து பார்ப்பது மட்டும் என் வேலை..

வருடம் சிலவும் சென்ற பின்னே விடுமுறைக்குக் கிராமத்துக்கு விரும்பி வரா என் தம்பி,
எவ்வாறென்று நானறியேன்
அந்தக் கிணற்றில் அதே கிணற்றில்
நீச்சல் அடிக்கக் கற்றுக் கொண்டான்!
அவனின் விடாமுயற்சியா?
ஆண்பிள்ளை என்ற கவனிப்பா?
சரிவர எனக்குத் தெரியவில்லை!


நிறைந்த வாழ்வில் சிற்சில குறைகள்👇🏼

நான் மகிழ்ச்சியடைய வேண்டிய எத்தனையோ விஷயங்களை வாழ்க்கையில் இருக்க, குறைகள் கூறுவது என்பது மிகப்பெரிய குற்றமே.
இருந்தும் என் அடி மனதில் என்றும் இருக்கும் மூன்று குறைகள்....
ஒன்று என் கையெழுத்து கண்ணால் பார்க்கவே முடியாது.. கோழி கிறுக்கல் என்று ஏன் கூறினார்கள் என்று என் கையெழுத்தைப் பார்த்தால் அனைவருக்கும் தெரிந்துவிடும். இரண்டாவது   நீச்சலடிக்க முடியவில்லை என்பது எனக்கு என்றும் ஒரு பெரிய ஏக்கம். மூன்றாவது ஒல்லியான உடல்வாகு எனக்கில்லை என்பது.

இப்போது எல்லாம் கைபேசி மூலமே எழுதி விடுவதால் கையெழுத்துக் குறையை அவ்வளவு அதிகமாக உணருவது இல்லை.

ஆனால் மற்ற இரண்டு குறைபாடு களும் மனதின் ஒரு மூலையில் இருந்த வண்ணமேதான்....

நான் பெங்களூரில் இருந்த பொழுது ஒரு முறை நீச்சல் பழகலாம் என்று வகுப்பில் சேர்ந்து தினமும் மாலை ஒரு இருபது நாட்கள் போல சென்று மிதக்கும் அளவு கற்றுக் கொண்டேன்.
அதன் பிறகு தலையை தூக்கி நீந்தும் வித்தை எனக்குக் கைகூடவில்லை.
விடாப்பிடியாக இன்னும் பத்து வருடங்கள் கழித்து நான் திருப்பூரிலும் என் உறவினரின் பள்ளியில் இருந்த  நீச்சல் குளத்திற்கு சென்று அங்கு முயற்சி செய்தேன்... இன்றுவரை என ஆசை நிறைவேறவில்லை. இப்பொழுதெல்லாம் கழுத்து வலி, பிடிப்பு எல்லாம் இருப்பதினால் இனிமேல் எப்படி என்று தெரியவில்லை.

ஒல்லியான உடல்வாகைப்பற்றிய மனக்குறை..... அதையும் கொஞ்சம் கொஞ்சமாக நான்  குறைக்க பார்க்கிறேன்.
உடம்பை அல்ல.... மனக்குறையை.
எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்னும் ஒரு 'அக்செப்டென்ஸ்' மனநிலையை வளர்த்துக் கொள்ள இப்பொழுது நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
ஆரோக்கியமும் ஆனந்தமும் இருந்தால் போதும்
ஒலி என்றாலும் சரி குண்டு என்றாலும் சரி , என்பது போன்ற ஒரு மனோபாவத்துக்கு வந்து இருக்கிறேன்.😉🤗






  

Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி