'சூ'

'சூ'

'சூ' என்னும் சிறைக்குச்
சென்றோம் நாமும் பொழுதைப் போக்க,
கூண்டெனும் அறையிலே
விலங்குகள் கண்டோம்
பரிதவிக்க....

காட்டுக்குள்ளே திரிந்து
பிடித்த உணவை உண்டு
வாழ்ந்த வாழ்க்கை சென்று,
கூண்டுக்குள்ளே கைநீட்டி மனிதன் கொடுக்கும் உணவு
தீர வேண்டும் தின்று!
பறந்து போக வழியில்லை
திரிந்து நடக்க இடமில்லை!

எதற்கென்று கேட்டால் அறிவுக்கென்று பகர்கிறார்,
விலங்கினம் அழியாது காக்கவென்று சொல்லுகிறார்!

அங்கே வருவது அறிவல்ல,
விலங்கினம் காப்பதும் மெய்யல்ல!
அடைத்து வைத்த விலங்கினைப்
கண்டுகளிக்கும் குரூரம்,
அதுவே வளருது அவ்விடம!
அழியும் விலங்கும்
இருக்கும் விலங்கும்
இயற்கை செய்யும் விந்தை!
தலையிடாமல் மனிதன் இருந்தால்
அதுவே போதும் குழந்தை....
செல்லாதே நீ சூவருகே!

நீயிருக்கும் இடத்தில்
உன்னைச் சுற்றும் உலகம்
உற்று நோக்கு அதையே
நிறைந்து வரும் அறிவு
அறிந்து கொள்வாய் குழந்தாய்!


👇🏼சூ என்னும் ஏமாற்று

இயற்கை படைத்த விலங்கினங்களில் மிகக் கொடூர விலங்கினமான மனிதன் என்னும் நாம் உருவாக்கிய ஒரு குரூரமான 'கான்செப்ட்' தான் zoo என்பது.

விலங்குகள் பறவைகள் அனைத்தையும் சிறிய இடத்திற்குள் அடைத்து வைத்து நாம் சென்று பொழுதைப் போக்குவதற்கும், கண்டுகளிக்கும் குழந்தைகளுக்கு கையை நீட்டி அதோ பார் குரங்கு, அங்கே  பார் யானை என்று காண்பிக்கிறோம்.

நின்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தால், நம்மை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்து குரங்குகளும் யானைகளும் வரிசையாக சென்று 'அதோ பாரு மனிதன்' என்றால் எப்படி இருக்கும்?

விலங்குகளுக்கு ஐந்தறிவு என்றும் நமக்கு ஆறரிவு என்றும் நினைத்து அவைகளுக்கு  உணர்வில்லை என்று எண்ணுகிறோம், நமது மமதையினால்.

அறிவு அனைவருக்கும் ஒன்றாக இருப்பதாகவே நான் கருதுகிறேன் நமக்கு கொஞ்சம் கையும் காலும் திறமையும் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம்.
அறிவு என்பது நம்மைவிட அவர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லை என்பது என் கருத்து. நாம் படும் துன்பம் அவர்களும் படுவார்கள், இதை உணர்ந்து கொள்ளாத நாம்தான் அறிவிலிகள் என்று எனக்கு தோன்றுகிறது.

அறிவை வளர்ப்பதற்கு விலங்குகளை அடைத்துவைத்து உற்று நோக்குவதால் என்ன பயன்? என்ன அறிவு கிடைக்கும் அங்கே? அப்படியே கிடைத்தாலும் அது அநியாயம் தானே? ஒரு அநியாயத்தின் மூலம் வருவது எத்தகைய அறிவாக இருக்க முடியும்?
விலங்கினம் அழியாமல் காப்பது என்பதும் ஒரு மாயைதான்.
அப்படியே ஒன்றோ இரண்டோ காக்கப்பட்டாலும், அது நிரந்தரமில்லை,இருந்தாலும் படும் கொடுமைக்கு அது நிகரில்லை.

நம்மைச் சுற்றி வீட்டின் அருகேயே இருக்கும் இயற்கையை உற்று நோக்கிப் பழகாத நாம் பணம் கொடுத்துப் பயணம் செய்து  zooவிற்கு செல்கிறோம்.   இயற்கைக்கு மாறான இந்த ஏற்பாடு நமக்கும் நம் பரிணாம வளர்ச்சிக்கும் நல்லதல்ல, நம்மை சுற்றியிருக்கும் விலங்கினங்களுக்கும் நல்லதல்ல, சுற்றுச் சூழலுக்கும் நல்லதல்ல.
இந்த அமைப்பே விரைவில் ஒழிந்து விட வேண்டும் என்பது என் பிரார்த்தனை.



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி