புதையலெடுத்த பூமி

புதையலெடுத்த பூமி

பூமிக்குள்ளே புதைந்திருக்கும் தங்கம் வைரம் எல்லாம்
காதில் கழுத்தில் மின்னலாம்
பணமாய்க் கூட மாறலாம்....
வயிற்றுக்குள்ளே செல்லுமோ?
உயிருக்குணவாகுமோ?
எண்ணைக் கிணற்றின் கதையதுவும்
தங்கச் சுரங்கம் போன்றே!
எண்ணெயதனை எடுக்க எடுக்கப் பெருக்கிக்கொடுக்கும் பணத்தை,
பக்க விளவைப் பார்த்தால்
பணத்தின் பயன் ஒன்றுமில்லை!

விவசாய பூமியிலே
விளைச்சலுக்குப் பின்னே
இயற்கை பாக்கி உண்டு,
இன்னும் அதைச் சோலையாக்க  வாய்ப்பு மிச்சம் உண்டு,
உலோகச் சுரங்க பூமியும்
எண்ணெய் எடுத்த நிலமும்
பாதிப் பாலை ஆகிடும்!
சோலை வாழ்க்கை சுகமா,
பாலை வாழ்க்கை பலமா?

எண்ணெய்க் கிணறு வெடித்ததால்,
தெறித்து வந்து எண்ணெய்
சிறகின் மேலே படிந்ததால்,
பறக்க முடியா பறவை இனம்
மடிந்த கணக்கு பல்லாயிரம்,
கணக்கிலடங்கா இறந்த கணக்கு கடலிலுமே நடந்த நாள்
2010 இல் வந்ததொரு கரியநாள்!

எண்ணெய் தங்கம் வைரம் என்று எதை எடுத்த போதிலும், உயிருக்கேதும்  சேதமின்றி
பூமித்தாயும் கெடா வன்னம்,
பார்த்தெடுத்தல் நலமே.
அதிலுமோர் அளவு வைத்தல்
அதனினும் பெரும் புண்ணியமே!

60
ஏன் வந்தன எண்ணெய் பற்றிய எண்ணங்கள்?  👇🏼

சில வருடங்களுக்கு முன் 'ஹிந்து'
ஆங்கில  நாளிதழில் ஒரு கட்டுரை படங்களுடன் வந்தது.
ஒரு அழகிய கொக்கு போன்ற பறவை ஒரு தீவில் நின்றுகொண்டிருக்கும் படம் அது.  பார்க்க மிகவும் அழகாக இருந்தது.
ஆனால் அதன் கீழே இருந்த வரிகளைப் படித்ததும் ரத்தம் உறைந்தது.

கடலுக்குள் இருந்து எண்ணெய்க் கிணறு ஒன்று வெடித்து சிதறி, எண்ணெய் கடலிலும் நிலத்திலும் பரவி தீவுகளிலிருந்த பறவைகளின் மேலும் படிந்து,
நான் பார்த்து ரசித்த அந்த படம் சிறகுகளை அசைக்க முடியாமல் மணிக்கணக்காக நின்று கொண்டிருந்த ஒரு பறவை. காரணம் சிறகுகளின் மீது எண்ணை படிந்திருந்தது.

பறவை சிறகுகளின் அமைப்பு எப்படி என்றால் அதில் ஒரு சிறு மாறுதல் ஆனாலும்,  அல்லது ஒரு சிறகு உடைந்தாலும், அதன் மேல் ஏதும் பட்டாலும், அவைகளைப் பயன்படுத்த முடியாது. கிட்டத்தட்ட நம்மை கைகளையும் கால்களையும் கட்டி வைத்தது போல் தான்.
அசைக்க முடியாமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது அந்தப் பறவை என்று எழுதி இருந்தார்கள்.
எனக்கு இன்றும், இத்தனை வருடங்கள் கழித்தும், அந்த உருவம் அப்படியே மனதில் நிற்கிறது.
அன்று வெகு நாட்கள் சரியாகத் தூங்க முடியவில்லை.... அந்தப் பறவையை நினைத்து.

அந்தத் தீவில் இருந்த யாரோ  நல்லவர்கள் சில பறவைகளை முடிந்தமட்டும் கழுவி சுத்தம் பண்ணி திருப்பி அனுப்பியதாகக் கேள்விப்பட்டேன் ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு யார்தான் என்ன செய்ய முடியும்?

எண்ணை 'ரிக்' களில் வேலை செய்பவர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.
நம்முடைய ஒரு வினாடிக் கவனக்குறைவு எத்தனை ஆயிரம் வாயில்லா ஜீவன்களைப் பழிவாங்குகிறது?
ஆறு அறிவு என்று பெருமையடித்துக் கொள்கிறோம். ஆறு அறிவின் விளைவுதான் இது  என்று எனக்குப் பல முறை தோன்றும்.
இயற்கை நம்மையும் ஐந்தறிவுடன் படைத்திருந்தால், நாமும் இயற்கை விதிகளின் படி நடந்து கொண்டிருப்போம்.
உலகம் இன்னும் அழகாகவே இருந்திருக்கும்.

இத்தனை வருடங்கள் கழித்து எண்ணெய்க் கிணறுகளையும் அந்த பறவையையும் எனக்கு ஞாபகப் படுத்தியது சில நாட்களுக்கு முன்பு நான் டிவியில் பார்த்த ஒரு தமிழ் படம்.
அதில் கதாநாயகன் இயற்கை விவசாயம் செய்து நாட்டிற்கும் ஒற்றராக வேலை செய்கிறார். வில்லன் தஞ்சாவூர் கழிமுகம் ('டெல்டா')  பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களில் எண்ணெய்க் கிணறு தோண்ட பார்க்கிறார். இதைப் பார்த்த உடன் எனக்கு எண்ணெய்க் கிணறு வெடித்த  நிகழ்ச்சி ஞாபகம் வந்தது.

சினிமாவில் நடிக்கும் கதாநாயகர்கள் வசனம் பேசுவதோடு இருக்கிறார்களா, இல்லை ஏதும் செய்கிறார்களா.... எனக்குத் தெரியாது!
நானும் இப்படி எழுதுவதுடன் நிற்காமல் ஏதும் செய்தால் நன்றாக இருக்கும்.
நல்லது நடக்க வேண்டும் என்ற ஆசை, விருப்பம் மனதில் இருக்கிறது.





Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி