வீடும் வீதியும்

வீடும் வீதியும்

தனியொரு தீவாய் இருத்தலென்பது
தன்னால் இங்கே முடியாதென்று,
அமைத்துக் கொண்டார் மனிதரெல்லாம்
சமூகமென்றும் ஊரென்றும்.
சட்டதிட்டம் போட்டுக்கொண்டார்
எத்தனை மனிதர் இருந்தாலும் என்றும் பிரச்சினை வாராதிருக்க!

'சட்டம் என்ன சொல்வது! சொன்னபடி செய்வதா?
என்னால் அது ஆகாது,என்
எண்ணம் போல செய்குவேன்!
சரி சமமாக அனுபவிப்போம்
சமூகத்தின் நன்மைகளை,
சார்ந்து நடக்க மாட்டோம்
சமூகம் போடும் சட்டத்தை!'
என்று கூறும் மனிதர்
எண்ணிலடங்கா உள்ளனர் இந்தத் திருநாட்டிலே!

வீட்டைப் பெருக்கிப் பள பள வென்று வைத்தருக்கும் நாமேதான்,
வீதியிலே குப்பைகளைப் வீசிவிட்டுப் போகிறோம்.
வீசுமந்த மனிதருக்கு சட்டம்
அறியாமலலில்லை, உடம்பு முடியாமலலில்லை!
கண்ணோட்டத்தின் கோளாறிது, வேறொன்றுமில்லை!

வயதான எங்கள் மனம் திடமாகிப் போனதே,
வழக்கமினி மாறுமோ தெரியவில்லை.....
நாங்களினி மாறவேண்டும் என்றெண்ணினால்,
நீங்கள் ரெண்டு போட வேண்டும்
எங்களையே,
இன்றிருக்கும் இளைய  தங்கங்களே!

சின்னஞ்சிறிய சிறார் நீவிர்
சமூகத்தில் பொறுப்புடனே
வீட்டைப் போல் வீதியும்,
வீதி போல ஊரையும்
சுத்தமாக வைத்து
சுகாதாரம் காத்து
நிம்மதியாய் வாழ்ந்திடுவீர்!

64

சமூகப் பொறுப்பு என்ற வார்த்தையை கேட்டவுடன் எனக்கு இரண்டு விஷயங்கள் ஞாபகம் வருகின்றன.
ஒன்று நாங்கள் பள்ளியில் படித்த ஒரு கட்டுரை, ஆங்கில கட்டுரை. இன்னொன்று தமிழில் படித்த ஒரு சிறுகதை.

பள்ளியில் ஆங்கில பாடத்தில் 'ஆன் தி ரூல் ஆப் தி ரோடு'  என்ற ஒரு கட்டுரை,
ஏ.ஜி. கார்டினர் என்பவர் எழுதியது.
மேல்நிலைப்பள்ளி படிக்கும் பொழுது ஒரு பாடமாக வந்தது.
அதில் அவர் நாம் அன்றாடம் சந்திக்கும் பல சூழ்நிலைகளும் அவை தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் எப்படி வேறு வேறாக இருக்க வேண்டும் என்பதையும் எழுதியிருந்தார். உதாரணமாக நாம் ஒரு கதைப் புத்தகம் படிப்பது என்றால் அது நமக்கு சந்தோஷம் தரும், எந்த நேரம் வேண்டுமானாலும் எடுத்தவுடன் படித்துவிடலாம், அது கடமை கிடையாது, மகிழ்விக்க செய்வது.
அதேநேரம் சில பாடப் புத்தகங்கள் அல்லது சட்ட புத்தகங்களை அப்படி படிக்க முடியாது. அது கடமை, கொஞ்சம் நாம் அதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
சந்தோஷத்திற்காக செய்வது வேறு கடமையை செய்வது வேறு.கடமையை சரிவர செய்யும் பொழுதுதான் சந்தோஷத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியும்!

தனிமனித சுதந்திரம் என்பது ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் இருந்தாலும் சமூகம் என்று வரும்பொழுது தனிமனித சுதந்திரம் என்று கூறிக்கொண்டு நாம் எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. செய்தால் அந்த சமூகத்தில் குழப்பமும்,அந்த குழப்பத்தினால் வரும் பல கோளாறுகளும் தான் மிஞ்சும். உதாரணத்திற்கு நம்மிடம் ஒரு வண்டி இருக்கிறது என்றால் அந்த வண்டியை எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம், அதில் சந்தேகமில்லை.
ஆனால் ஒரு பிஸியான ஒரு டிராபிக் சிக்னலில் அந்த வண்டியை நான் என் விருப்பப்படி ஓட்டுவேன்,தனி மனித சுதந்திரம் எனக்குண்டு என்று கூறி, சிவப்பு வெளிச்சத்திற்கு நிறுத்தாமல்  ஓட்ட ஆரம்பித்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள்.
அனைவரும் அவ்வாறே நினைத்து ஓட்டினால்?
அவர் கூறிய உதாரணம் லண்டனிலுள்ள 'பிக்கேடில்லி சர்கஸ்' என்னும் டிராபிக் சிக்னல். நாம் நம் ஊரில் ஏதோ ஒரு பிஸியான சிக்னலில் அனைவரும் வண்டிகளில் தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நிறுத்தாமல் ஓட்டினால் அனேகமாக பிறகு ஓட்டுவதற்கு நாம் யாரும் இருக்க மாட்டோம் என்று நினைக்கிறேன், இந்த கால வண்டிகளின் வேகத்தை பார்க்கும்பொழுது.

தனிமனித சுதந்திரம் நம் நாட்டில் இருந்தாலும் சமூகப் பொறுப்புடன் பார்க்கும் பொழுது அந்த சுதந்திரத்தைக் கொஞ்சம் குறைத்து மற்றவர் தனி மனித சுதந்திரத்திற்கும் இடமளிக்கும் பொழுதுதான் நம் சமூகமாக வாழ முடியும், சந்தோஷமாகவும் வாழ்வதற்கு ஏதுவாக இருக்கும்.

நான் கூறிய சிறுகதை என்னவென்றால், ஒரு ஊரில்  கோவில் திருவிழாவிற்கு ஒரு அண்டாவை வைத்து அனைவரையும் விடியற்காலையில் வந்து பால் ஊற்றுமாறு கேட்டிருந்தார்கள்.
கதாநாயகன் மனதில் 'நான் ஒருவன் நீர் ஊற்றினால் யாருக்குத் தெரியப்போகிறது எதற்காக பணம் கொடுத்து வாங்கிய பாலை  வீண் செய்ய வேண்டும்' என்று எண்ணி நீரை ஊற்றி விட்டு வந்து விட்டான். பூஜை சமயம் திறந்து பார்த்தால் அண்டா நிறைய நீர் தான் இருந்தது.
என்ன நடந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளலாம். அவனைப் போலவே அனைவரும் நினைத்திருந்தார்கள்.
ஒருவர் பொறுப்புடன் நடந்திருந்தால் கூட அண்டாவில் நீர்த்துப்போன பாலாவது கிடைத்திருக்கும். அனைவரின் திருட்டுத்தனமான எண்ணத்தினால் பூஜைக்குக் கொஞ்சம் கூட பால் கிடைக்கவில்லை.  சிரிப்பு வரும் சிறு கதை என்றாலும் சிந்தித்தால் சில உண்மைகள் புரியும்.
இதில் தனிமனித நேர்மையும் கலந்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி