Posts

Showing posts from October, 2019

புது எண்ணம் புது வாழ்வு

சிறுவயதில் ரேடியோவில் அடிக்கடி ஒரு பாடல் கேட்டிருக்கிறேன்  'ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே' என்று போகும். இந்தப்பாடலின் உண்மையான அர்த்தம் வயது ஆக ஆகத்தான் தெளிவாக புரிகிறது. இயல்பிலேயே மனித மனம் ஆசைக்கு அடிமை, நம் மனதில் வரும் ஆசைகளுக்கு அளவும் இல்லை... இயற்கையே நம்மை அப்படிப் படைத்து விட்டதோ என்று தோன்றும் சில நேரங்களில்...... அதே இயற்கை தான் இதை உணரும் அறிவையும் கொடுத்திருக்கிறது. என் வீட்டில் பல நேரங்களில் நான் மேலும்மேலும் ஆசைப்பட்டு வாங்கிய பொருட்களில் பெரிதாக எனக்கு திருப்தி எதுவும் கிடைத்ததில்லை... பொருட்கள் வீட்டை அடைந்தது தான் மிச்சம். கூடவே நேரம் பணம் மற்றும் என் எனர்ஜி செலவானது வீண் தான். இதில் சோகம் என்னவென்றால், இதை நான் உணரவே எனக்குப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சிலரை நான் கவனித்திருக்கிறேன் இருக்கும் பொருளை நன்றாக உபயோகித்து அதை வைத்து அழகாக வாழ்க்கை நடத்துவார்கள்.. இவர்களின் வாழ்க்கை பிறருடன் போட்டி போட்டு அதிகமாக பொருட்களை வாங்குவோரின் வாழ்க்கையை விட மிகவும் திருப்திகரமாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். இந்த மாதிரி மனிதர்களிடம் எப்ப

முயல்

மருத்துவ பத்திரிக்கைகளில் சில கட்டுரைகள் படிக்கும் பொழுது முயலின் கண்ணில் மருந்து ஊற்றிப் பார்த்தது அதில் இந்த ரிசல்ட் வந்தது என்று எழுதி இருப்பார்கள் படிக்கும் போதே கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். அதுபாட்டுக்கு காட்டுக்குள்ள சந்தோஷமா இருந்துட்டு இருந்த முயல புடிச்சிட்டு வந்து லேபில் கூண்டுக்குள் அடைத்து வைத்து , கண்ணுக்குள்ளே தோல் மேலே கண்டதெல்லாம் ஊற்றி அது புண்ணு ஆனதுக்கு அப்புறம் சாக வச்சுடுவாங்க அத வச்சி ரிசல்ட்ஸ் பப்ளிஷ் பண்ணுவாங்க... இதுல  கொஞ்சம் கூட நியாயம் இருக்குன்னு தெரியலை எனக்கு ... கிட்டத்தட்ட இதே மாதிரிதான்அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும்... ரொம்ப மோசமான வார்த்தையில் சொல்லப்போனால் இது வந்து மனுசனோட திமிரத்தான் காமிக்குது. 👇 முயல் நீளக் காதும் குட்டை வாலும் தெறிக்க ஓடும் காட்டில் முயலும் துடிக்கும் மூக்கில் வேற்று வாசனை அடித்த உடனே....! இருந்தும் வாழ்க்கை இனித்தது காட்டில். இன்றோ முயல்சிறையில் கைதி மாட்டிக்கொண்டது சோதனை சாலையில்.. தோலில் பூசினார் கண்ணில் ஊற்றினார் மருந்துகள் ஆயிரம் மனிதன் தோலும் மனிதன் கண்ணும் ஏற்குமா மருந்

Agatha Christie

Agatha Christie ஆங்கில எழுத்தின் மர்மத் தலைவி அகதா கிறிஸ்டி என்றொரு பெண்மணி. அவர் வாழ்க்கையிலும் ஒரு மர்மம், அதை  உடைக்கவில்லை அவர் இறுதிவரை! எழுதிய கதைகள் எழுபத்தைந்து, எடுத்துப் படிக்கலாம் திரும்பத்திரும்ப, மீண்டும் படிக்கலாம் அடுத்த ஆண்டும்! ஒரு முறை விளங்கிய மர்மம் மறுமுறை படிப்பது எப்படியோ? அதுதான் அகதா கிறிஸ்டி! முதல் முறை முடிச்சுகள் அவிழும் தெளிவாக..... மறுமுறை மீண்டும் முடிந்து கொண்டிருக்கும் அழகாக! அந்த முடிச்சில் இல்லை அவர் அருமை கதா பாத்திரமமைப்பதில் வந்தது அப்பெருமை. கதைகளில் வரும் ஆணும் பெண்ணும் நம் வாழ்விலும் இருப்பார் முன்னும் பின்னும்! அகதா எழுதிய புதினங்களில், துப்பறிவாளர் போய்ரோவும் மார்ப்பில் என்ற ஆத்தாவும் அவிழ்த்து விட்ட முடிச்சுகள் மனதில்மீண்டும் முடிந்து கொள்ள வருடம் ஒன்றே போதும்.. அதனாலேயே அவர் கதையை மீண்டும் மீண்டும் படிக்கலாம் திரும்பத் திரும்ப சுவைக்கலாம் ! எனக்குப் பிடித்த மார்ப்பிலும் துப்பறிவாளர் போய்ரோவும் மறக்க இயலா மாந்தர்கள் அவரவர் குணத்தின் மகிமையினாலே! அகதா கிறிஸ்டி என்ற பெயர் அன்னை தந்த பெயராகும், புனைப்பெயர்

உறவில் ஒரு விதம்

திருமணம் என்ற பந்தம் பல வருடங்களாக உலகத்தில் இருக்கின்றது, ஒருவேளை பல்லாயிரம் வருடங்களாக கூட இருக்கலாம் இதில் திருமணம் ஆகும் பொழுது வேறு  ஒருத்தர் வந்து அமர்ந்து நமக்கு சில மந்திரங்களைச் சொல்கிறார் அப்படி இருப்பேன் இப்படி இருப்பேன் என்று கூறச் சொல்கிறார்..... நானும் கண்ணை மூடிக்கொண்டு கூறினேன்... திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனபின் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் திருமணபந்தம் ஆரம்பிக்கும் பொழுதே சம்பந்தப்பட்ட பெண்ணும் மாப்பிள்ளையும் அவர்களுக்கு ஒரு ஒப்பந்தம் போல செய்து கொள்வது நலம் பொதுவான சில வரைமுறைகள் இருந்தாலும் அதில் அவர்களுக்கு தகுந்தார்போல் சில மாற்றங்களை ஏற்படுத்தி ஆரம்பம் முதல் அந்தப்பெண்ணும் மாப்பிள்ளையும் திருமண உறவில் தாங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்று அறிந்து கொள்வது மிகவும் நல்லது பல நேரங்களில் ஏற்கனவே பல வருடங்களாக இருக்கும் திருமண உறவுகளை நாம் பார்க்கிறோம்..... அம்மா அப்பா தாத்தா பாட்டி என்று........ அந்தக் கணவனும் அந்த மனைவியும் ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதே போல் தான் நமக்கும் இருக்கும் என்று நம்மை அறியாமல் அடி மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்

சமநிலைஅமைதி

சமநிலைஅமைதி மனதின் இன்ப நிலை துன்ப நிலை  கோபநிலை தாபநிலை வெளிவராத முகநிலை அதுவே சமநிலை, முகவெளிசமநிலை  அந்த முகநிலை சமநிலை உள்ளே சென்று இன்பநிலை துன்பநிலை எந்நிலையிலும் மன நிலை சமநிலை அடைந்தால் நான் அடைந்தால் வேறெந்நிலையும் நான் வேண்டேன் .... 👇🏼 பொதுவாக எனக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம், அதை உடனே காட்டியும் விடுவேன். கோபம் எரிச்சல் போன்ற உணர்வுகள் அடிக்கடி வரும், முகத்திலும் உடனே தெரியும். கோபமும் எரிச்சலும் வருவதென்பது ஒன்று, அது முகத்தில் தெரிவது என்பது இன்னொன்று. கோபம் வருவதும் அவ்வளவு நல்லதல்ல, வந்த கோபத்தை அடக்குவதும் நல்லது அல்ல... அது உள்ளுக்குள்ளேயே ஒரு அமிலம் மாதிரி வேலை செய்து கொண்டிருக்கும். கோபம் வராமல், எந்த சூழ்நிலையிலும், அந்த சூழ்நிலையை மனதிற்குள் பரிசீலனை செய்து பிறகு அதற்கு தகுந்தவாறு நம் எதிர்வினை இருத்தல் நல்லது. இது ஒரு பக்கம் இருக்க, நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்... கோபம் இருக்கும் மனதுக்குள் ஆனால் முகத்திலும் குரலிலும் அது தெரியாது,நான் அவர்களை மிகவும் பிரமிச்சு பார்ப்பேன் ! Composure என

பாப்பாத்தி

பாப்பாத்தி பாலும் தேனும் கலந்த நிறத்தில் பட்டில் செய்த குட்டி, வந்தாள் எங்கள் பாப்பாத்தி பத்து வருடம் குடும்பத்தலைவி. விழிக்கும் நேரம் உறங்கும் நேரம் அனைத்தும் அவளின் முடிவே. இரவில் மணி பத்தென்றால் அனைவரும்  உறங்க வாரும், வராவிட்டால்  "வள்வள்" படுக்காவிட்டால் "லொள் லொள்" வேற்றுக் குழந்தை வீட்டுக்கு வந்தால் கர்ஜனை வருமே உர்ரென்று, வேற்று மனிதர் வீட்டுக்கு வந்தால் வரவேற்பு உண்டு வாலை ஆட்டி! விருப்பமான சிக்கன் சோறு அளவில்லாமல் தின்னலாம், வேறு சோறு எதுவென்றாலும் "வேலை என்ன உங்களுக்கு வாயில் வந்து ஊட்டுங்கள் படுக்கை உதறிப் போடுங்கள் படுக்க வேனும் நானுமே".. பிடித்தமான வேலைக்காரர் குடும்பத்தலைவர் குமாரனவர். வயது நான்கில் பெற்றாளே குட்டிகள் ஐந்து கண் போலே! சுத்தம் செய்து சுத்தம் செய்து மணக்க மணக்க வைத்தவள், திங்கள் ஒன்று ஆனதும் விலகிப் போனாள்  தூரவே.. சென்னை பெங்களூர் கோவை என்று ரயிலில் காரில் பயணம் செய்து, உலகம் என்றால் என்னவென்று உணர்ந்துகொண்ட பாப்பா, பத்து வருடம் உடனிருந்து , பிறகு மேலே சென்றாளே😢 மனிதர் மட்டும் உலகல்ல உலகி

நீர்

நீர் சித்திரை மாதம் கத்திரி வெய்யில், முற்பகல் நேரம் புத்தகக் கடை பிடித்தவை கிடைத்தன, போட்டேன் பையில். எடுத்தேன் நடையை வீட்டை நோக்கி.. தொண்டை வறண்டது தண்ணீர் என்றது, காலை நிரப்பிய பானை நீர் தெள்ளத் தெளிந்த அருமைத் தண்ணீர் எடுத்துக்குடித்தேன் தாகம் தீர குளிர்ந்த நீர்   இறங்கிய  தொண்டை சிலிர்ப்பில் வந்தது மனதின் பொந்திகை 💦 மற்றொரு நாள் மார்கழி மாதம் மூக்கைப் பிடித்த நீர்க்கோவை, என்னை விட்டுப் போகவில்லை என்னடா இது பெருந்தொல்லை! ஏதும் வேலை இயலவில்லை தொண்டை வேதனை பேச்சும் இல்லை, படுத்தும் உறக்கம் வரவில்லை காரணம் மூக்கில் நீர் கோவை.. இந்நீர் போக எந்நீர் தேவை ? வெந்நீரே அது வெந்நீரே ! துளசி சேர்த்த வெந்நீரே ! 🍵 கமறிய தொண்டை புண்ணுடனே, இதமாய் வெண்ணீர் தொண்டையில் இறங்க, சூட்டில் வந்தது மனதின் பொந்திகை! பொந்திகை: திருப்தி நீர்கோவை :. ஐலதோஷம் 👇🏼 முன்பெல்லாம் எனக்கு அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளும். ஒரு வருடத்தில் நான்கு முறை... கூடவே தொண்டைவலி காய்ச்சல் எல்லாம் வந்துவிடும். தொண்டை வலி இருக்கும் பொழுதெல்லாம் சுடு தண்ணியை போல ஒரு தோவாமிர்தம் எதுவும்

பொன்னாடை துணி

பொன்னாடைத் துணி தமிழர்களின் அறிவுடைமை தமிழ்நாட்டின் பழம்பெருமை தம்பட்டம் அடிக்கின்றோம் இந்நாளும் எந்நாளும். தமிழகத்தில் எல்லாரும் போர்த்துகின்ற பொன்னாடை வேறெங்கும் கண்டதில்லை நான் அறிந்த வரையிலே. இந்தப் பொன்னாடை போர்த்துவதில் பெருமை என்ன வந்ததிங்கு இன்றுவரை நானறியேன். பெருமை இல்லை பயனும் இல்லை, வீட்டுக்குப் போனவுடன்  தூக்கி எறிவார் மனைவியதை! வேறென்ன செய்வது? துடைக்க அது துண்டும் இல்லை தைக்க அது துணியும் இல்லை. தூக்கி எறிய மட்டுமே ஆகுமிந்தப் பொன்னாடை, இதைப்போர்த்துகின்ற கலாச்சாரம் ஒன்றாவதொழிந்தால், தமிழ்த்திரு நாடு தன்னை பகுத்தறிவுப் பாசறை என்றழைக்கக் காரணமாய் இருக்குமே.. இல்லையெனில் இந்தப் பெயர் ஏளனமாய்த் தோணுதே! 👇🏼 MBBS முடித்து விட்டு மதுரையில் கண்ணுக்கு சிறப்பு படிப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது கண் சிகிச்சை முகாம்களுக்கு போவோம். சில நேரங்களில் அங்கு எங்களுக்கு பொன்னாடை போர்த்துவார்கள். நானும் அதைப் பெருமையாக கொண்டுவந்து மடித்து வைத்து விடுவேன்,எதற்கு அந்தப் பெருமை என்று நினைத்தால் இப்போது சிரிப்பு வருகிறது......... எதற்கும்  பயன்படவில்லை துட

ஆறு

ஆறு வெள்ளியங்கிரி மலை மழையை நன்னீராய்க் கூட்டி வந்து கோவையம்மா ஊரில் மக்கள் மனம் குளிர்ந்து, திரும்பி வந்து திருப்பூரில் பாலங்கள் பல கடந்து கரூர் மாநகரத்திலே நொய்யல் என்னும் ஊரிலே காவேரி அன்னையை கரை சேரும் நொய்யலே ! பயிர் நீர் குடிநீர் குளிநீர் பல நீராகத் தெளிந்து கண்ணாடியென ஓடிய தங்கமே, தன் இளம் ப்ராயத்தில் உன் கரையோரம் பலர் ஆடப் பார்த்திருக்கும் என் தோழி கூறுவார் ஆறென்றால் ஆறு நொய்யலே நல்லாறென்று ! பல சாயம் ரசாயனம் உன் உள்ளே கலந்ததால் தெளிந்த நீர் கருநீராகிக் கழிவு நீரோடையென இன்னும் நீ ஓடுகிறாய் பொறுமை என்னும் பெருமையான அருமை நதியே! நூறாயிரம் மக்கள் மகிழ்ந்திருந்த ஆறில் அந்நாள் ஆறென்றெண்ணி வந்த நாரைகள் இன்னாளாறில் வந்தமர்ந்து குடிநீர் கருநீராகிப் போனதைப் பார்த்து.......? அந்தோ பூமி மாறியதே அவள் செல்லக்குழந்தை மனிதனாலே ! சாய நீர்ச் சாலை வைத்திருக்கும் நல்லவரே, நொய்யல் வந்த நாரையும் ஆற்றில்  வந்த மீன்களும் கடலில் உள்ள உயிர்களும் காக்க வேண்டி நீங்களே , சாய நீரை, சாலையிலே சுத்தம் செய்தங்கேயே மரம் செடி கொடி வளர்த்து, மகிழ்ந்திருத்தல் நலம் அல

எல்லை

எல்லை             நாடும் எல்லையும்  பிரித்தவர் நாமே, தேசமும் கண்டமும் வகுத்தவர் நாமே! யார் கொடுத்த உரிமை இது? நாமே எடுத்துக் கொண்டது! சேர சோழ பாண்டியம் வடக்கில் வந்த மௌரியம் இடையில் இருந்த களப்பிரம் கிழக்கில் இந்த வங்கம் மேற்கில் அந்த ஆரியம் ஜெயித்து வந்த முகலாயம் ஏய்த்தமர்ந்த ஆங்கிலம் உருவானதொரு இந்தியா பிறகிணைந்த சிக்கிம் கடையில் வந்த காஷ்மீரம் அனைத்துமின்று பாரதம்! ஒன்றாய் இருந்த ருஷ்யா பிரிந்து போனதங்கே, தனித்தனி நாடென்ற ஐரோப்பா சேரும் பிரியும் சேரும் பிரியும் சிற்சிலசமயம் சிற்சில சமயம் ஏனைய உயிர்கள் யாவும் இருப்பதை உண்டு உறங்கி மகிழ்ந்து, காலத்திற்கேற்ப இடம்தனை மாற்றி, அலைந்து திரிவன பூமியெங்கும், எதுவும் தனக்கு சொந்தம் அல்ல அறிவன அந்தப் பேரினங்கள். மனிதன் மட்டும் பிரிக்கின்றான் சொந்தமான பூமி என்று, கல்லில் வீட்டைக் கட்டுகின்றான் நிலையாய் இருக்கும் என்றெண்ணி, மறந்துவிட்டான் அவனுமே, தானே நிலை இல்லை என்று! ஐந்தறிவென்பான் விலங்குக்கு ஆறறிவென்பான் தனக்கு யாருக்கு எதுவென்று புரியவில்லை எனக்கு ! 😁 👇🏼 எந்தவிமான கட்டுப்பாடும் தடைகளும், எ

கண்ணதாசன்

கண்ணதாசன் எளிமைத் தமிழும் ஒலியின் அழகும் எதுகையும் மோனையும் எளிதாய் புரியும் திரை இசையில் அது ஒரு காலம்.. கண்ணதாசன் என்பவர் காலம், நாயகன்  உணர்வும் நாயகி உணர்வும் நம் உணர்வாகும், ஆனந்தம் அழுகை உற்சாகம் உவகை ஏக்கமும் உறுதியும் எல்லாம் நமதே.. இயக்குனர் உணர்வும் தெள்ளெனப் புரியும் இவரது பாட்டில்... படம் வரும் முன்னே பாடல் வராக் காலம், படத்தில்  திளைத்து காட்சியின் அதிர்ச்சியில் உறையும் போது, திரையில் சட்டென்றொலிக்கும், கேட்கும் நம்மை சிலிர்க்க வைக்கும், கதையின் உணர்வை நாலே வரியில் சொல்லி முடிக்கும், கண்ணனின் தாசன் எழுதிய பாடல். கண்ணதாசன் பாட்டு காற்றில் வந்தால், பழகிய குரலில் பாடல் தெளிவில், கருத்தின் மெய்யில் கானம் என்றால் அர்த்தம் அதுவே! வயதெனக்காகி மனமது மூடியதா? இல்லை மெய்யே இதுதானா? காரணம் எதுவென்றறியேன்- தமிழ்த் திரையிசையில் இவருக்குப் பின்னால் இசையுண்டானால் இயல் இல்லையோ? ஆமாம் அம்மா ஆமாம்! இல்லைதானது இல்லையம்மா! என்கிறார்கள் என்னனையொத்தோர் என் காதில் 😁. 👇🏼 சிறு வயதில் சினிமா பார்ப்பதென்றால் எனக்கு மிகவும் பிரியம்.... இப்பொழு

வெந்தயம்

வெந்தயம் சின்னஞ் சிறிய தங்கக் கட்டிகள் வெந்தயம் என்று பெயராம் வட சட்டியில் வறுத்துப் போடு சிவந்து போகும் தங்கங்கள்! மின் அம்மியில் போட்டாலே மணக்கும் பொடியும் கிடைத்திடுமே சுடச்சுட சோற்றில் உப்பும் நெய்யும் சேர்த்துப் பிசைந்து உண்டாலே குடலும் சுத்தம் ஆகிடுமே! அடுப்பில் நெய்யைக் காய்ச்சி பட்டை கிராம்பு வெந்தயம் பாதிப் பாதி வெங்காயம் சிறிதளவே தக்காளி பச்சைமிளகாய் கறிவேப்பிலை, வதக்கிய பின்னால் அதனுடன் நீரும் அரிசியும் சேர்த்து வேகவைத்து உண்டால் மணக்கும் வெந்தய சோறாகும்! எதுவென்றாலும் பரவாயில்லை  அதனுடன் நானும் போவேனே என்று கூறும் தேங்காய் சட்னி இதனுடன் போகும் அழகுடனே! மண்ணில் வெந்தயம் விழுந்தால்  இரண்டே நாளில் கீரை வரும், பருப்பும் கீரையும் சேர்ந்த கூட்டு சோற்றுடன் கலந்து புசித்தாலே  ருசியும் சத்தும் சேர்ந்தே வரும்! வெந்தயெக் கீரை மாவுடன் பிசைந்து அனைவரும் விரும்பும் சப்பாத்தி, நெய்யும் சேர்த்து மணமணக்க தயிரைத் தொட்டு உண்டாலே மறக்கமுடியா உணவாகும் ! புளியில் செய்யும் சமையலும் எதுவாகவே இருந்தாலும், வெந்தயப் பொடியும் போடலாம் மணமும் இன்னும் கூடும்!

குழந்தை

குழந்தை சின்னச் சின்ன குழந்தைகள் துள்ளிக்குதித்து  விளையாடப் பலவிதமான பொம்மைகள் , பார்த்துப் பார்த்து படிக்க வண்ணவண்ண புத்தகம் , தள்ளிப் பார்த்து விளையாட சிறிய பொம்மை வண்டிகள் , சின்னக் குழந்தை மூளையது சுறுசுறுப்பாக இயங்க பொம்மைப் புதிரும் இங்கே உண்டு ! தூங்கும் நேரம் போக சும்மா இருத்தல் ஆகாது கேட்டுக் கொள்ளு தங்கமே ஆணையிட்டாள் அன்னையே ! அந்தக்கால குழந்தைக்கு        அதிகமில்லை பொம்மை,   இருக்கும் பொருளை கொண்டு  கற்பனை பொம்மை செய்திடுமே அண்ணன் தம்பி அக்கா தங்கை குடும்பமென்று விளையாடும் எதுவும் இல்லை என்றாலும் கற்பனை ஆட்டம்  ஆடிடுமே அதுவும் இல்லை என்றாலும் உறங்கிப் போகும் குழந்தையே ! பொம்மை வாங்கக் காசில்லை காசிருந்தாலும் பொம்மைக்கில்லை ஏதோ ஒன்று நீயே ஆடு அன்று அன்னை ஆணை ! மூளை என்றும் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டே இருத்தல் நலமா ? அவ்வப்போது சில சமயம் சும்மா இருத்தலும் நலமேயாகுமா? மனதில் மகிழ்ச்சி தங்கயிருக்க பொருட்கள் என்றும் தேவையா ? எதுவும் இல்லை என்றாலும் மகிழ்வாய் இருத்தல் ஒரு குறையா? சுயமாய் இருக்கப் பழகும் குழந்தை எதுவாயிருக்கும் இங்கென்று சிந்த

புரியும் பேச்சு

புரியும் பேச்சு தொங்கும் அட்டைப்பெட்டியிலே சிட்டுக்குருவி கட்டிய கூடு, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, ஒற்றைக் குஞ்சு எட்டி பார்த்தது! தினமும் விடியல் வேளை நில்லா ஒலியா கேட்கும் சின்னக் குஞ்சின் சத்தம்! தந்தை தாயின் அலகில் வரும் பூச்சியும் புழுவும் நிமிடம் ஒன்றாய்ச் செல்லும் சின்னக் குஞ்சின் வாயின் உள்ளே! விடியல் தொடங்கி மாலை வரை சலிப்பின்றிப் போகும் சாப்பாட்டுக்கடை! வியப்புடன் பார்க்க நாம் வந்தால் புழுவுடன் வரும் தந்தை தாயும் சட்டெனஅமர்வார் சுவர் மேலே, "அமைதி குஞ்சே அமைதி மனிதர் இங்கே வந்து விட்டார்" அபாயக் குரல் குஞ்சுக்கு; 'கீக்கி கீக்கி கிக்கீ' அந்தக்கணமே குஞ்சும் தலையை உள்ளே இழுத்து குரலை உடனே நிறுத்தும்! பேரமைதி! சரியென்று நாம் விலகிச் சென்றால், தாயும் தந்தையும் கூட்டுக்குப் போகும் அலகில் தொங்கும் புழுவுடனே! பிறந்தொரு திங்கள் ஆகா குஞ்சு புரிந்து கொண்டு பெற்றோர் பேச்சை நடந்துகொண்டது அதன்படியே! மனிதக் குழந்தை பேசப்புரிய குறைந்தது ஆகும் ஒரு வருடம். பறவைக்கறிவு ஐந்தென்பார் நமக்கது ஆறு என்கின்றார் என்ன என்ன என்ன இது!  😇

உண்ணும் உணவு

உண்ணும் உணவு வட்டத்தட்டில் இட்டிலி பக்கம் தேங்காய்ச் சட்டினி, வருமே பொடியுடன் நல்லெண்ணெய், நெய் மிதக்கும் சாம்பாரும் பார்வைக்கழகு வட்டத் தட்டில் இட்டிலி! கண்ணுக்கழகு தட்டில் இட்லி, வாசம் வந்தது மூக்கில் இன்பம், இட்டிலி பிட்டு வாயில் போட்டால் நாக்கில் சுவையுடன் கரைந்து போகும், கவனத்துடன்  செய்த உணவு பசித்த வயிற்றில் தேவாமிர்தம்! குட்டிக் குழந்தைக்கென்ன உணவு? கூழோ பாலோ புட்டியில் அடைத்து அன்புடன் கொடுத்தாள்    அன்னை அந்தக் குழந்தைக்கதுவே உணவு! பார்த்து உண்ணும் சமைத்த உணவு அழகாய் செரித்துக் உடலைச் சேரும்.... உணவைக் கட்டும் நெகிழிப்பை, பாலை கொள்ளும் நெகிழி புட்டி வீசி எறிந்தால் கடலைச் சேரும். கடலின் மீனாம் திமிங்கலம், வீட்டினும் பெரிய திமிங்கலம், தீங்கெதும் எண்ணா திமிங்கலம், வாயைத் திறந்து நீந்தினால், உள்ளே செல்லும் நீருடன் சின்னஞ்சிறு மீன் இனங்கள். திமிங்கலம் தின்னும் உணவே அந்த சின்னஞ்சிறு மீனினமாம்! கடலில் நீந்திய வாறு உணவுண்டு கவலை இல்லாமல் கழித்த காலம்! இன்று வாயைத் திறந்து நீந்திப் போனால், உள்ளே செல்வது சிறுமீன் அல்ல, நெகிழிப் பையும் குப்பை மூட்

விருட்சம்

விருட்சம் அடர்ந்த வனம் ஆயிரம் மரங்கள் விடியற்காலை பறவை ஒலிகள் துணையாய் நிற்கும் நிசப்த ஓசை உள்ளே இருப்பது வேறோர் உலகம் நமக்குபுதியது உண்மையில் பழையது. அடர்ந்தவனம் ஆயிரம் மரங்கள் உள்ளே சென்றால் புரியும் நமக்கு எத்துனை சிறியவர் நாம் தான் என்பது எதுவும் இல்லை கவலை என்று ! அடர்ந்த வனம் ஆயிரம் மரங்கள் உயிரைக் கொடுக்கும் பிராண வாயு நிறைந்து இருக்கும் என்றும் அங்கே பூமியைக் காக்கும் பல்லுயிர் பெருக்கம் அங்கே இருக்கும் வனத்தின் உள்ளே. அடர்ந்த வனம் ஆயிரம் மரங்கள் தியானம் செய்யத் தகுந்த இடம் ஞானம் பிறக்க உகந்த இடம் வாழ்வின் குறியே ஞானம் அல்லவா ஞானம் வந்தபின் வேறென்ன வேண்டும் சிறிய நகரம் நெருக்கும்வீடுகள் மனிதக் கூட்டம் வியர்வை நாற்றம் ஓட்டம் ஓட்டம் எங்கோ ஓட்டம் ஏன் என்றறியா வேக ஓட்டம் எதற்கோ அவசரம் புரியா மனம் காசு பணம் அடிக்கும் இதயம் சிறிய நகரம் நெருக்கும் வீடுகள் சுகந்த மணம் வீசும் காற்று நெஞ்சம்நிறைய உள்ளம் உவக்க அமைதியாகச் அமரச் சொல்லும் அடர்ந்த வனம் ஆயிரம் மரங்கள். ஆயிரம் மரங்களை அறுத்து விற்று நடுவில் சிமெண்டில் கட்டிடம் போட்டு அலங்கார மர

வெள்ளை உப்புமா

வெள்ளை உப்புமா 'அம்மா வெள்ளை உப்புமா எனக்கு வேண்டும், எப்பம்மா'? விடிந்ததும் செய்றேன் தங்கமே! கெட்டிச் சட்டி, கடலெண்ணெய் ஊற்றிக், காயக் கடுகும் பருப்பும் போட்டுப் பொரியப், பச்சை மிளகாய், உடனே சேரும் வெங்காயம், மணக்கக் கலக்கும் கருவேப்பிலை, கூடச் செல்லும் இஞ்சித் துண்டு வதக்கித் தண்ணீர் - நாலுக்கொன்று அருகில் ரவையை வறுத்து கொதிக்கும் நீரில் போட்டு அளவாய் உப்பு சேர்த்து கிளறிக் கிளறி மூடும் முன் மீண்டும் ஒரு முறை கடலெண்ணெய் பதமாய் வெந்ததும் அடுப்பை அனைத்து பத்து நிமிடம் புழுங்கவிட்டு எடுக்க வேண்டும் உணவுத் தட்டு பஞ்சின் மென்மை உப்புமா பக்கம் சேரும் சர்க்கரை வாயில் போட்டால் அம்மம்மா ஏழை வீட்டின் சொர்க்கம் அம்மா! பிகு: பணமுள்ள கனவான்கள் போடுங்கள் பட்டானி சத்துள்ள உணவாகும் நெய் கொஞ்சம் சேர்த்தாலே! 👇🏼 செக்கில் அரைத்த கடலை எண்ணெய் வாங்கிவரச் சென்றேன் அம்மாவுடன். எண்ணையின் மணம் மூக்கில் ஏறியதும் முதலில் நினைவில் வந்தது வெள்ளை உப்புமா. அம்மா செய்யும் பதமான வெள்ளை உப்புமா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. உப்புமா என்றாலே பல பேர் முகம் சுளிப

கைபேசி

கைபேசி நவீன கருவிக் கைபேசி நம் கையை விட்டுப் பிரியாது சமத்துக் கருவி என்று பெயர் சகலமும் சொல்லும் கைபேசி! அனைவர்கவனம் எப்பொழுதும் அதன்மேலேயே குவிந்திருக்கும்! யந்திரமாக மாற்றிடுமோ நமை - யந்திரமாக மாற்றிடுமோ சமத்துக் கருவி கைபேசி? பயமிப்போது அனைவருக்கும்! பழைய தொலைபேசி சமத்தில்லை எடுத்தால் பேசும் வைத்தால் அமைதி ஒன்றுமறியாக் குழந்தை அது. இந்தச் சமத்துக்குழந்தையோ பேசினால் போதும் தட்டச்சடிக்கும் வலை- துணைகொண்டு. எழுதவராத கைகளுக்கு சமத்துக் கருவி துணை இருக்கும் அடித்துக் கொடுக்கும் அடுக்கு மொழிகளை... நன்றிகள் உண்டு உனக்கேதான் மைந்தன் கொடுத்த கைபேசி oneplus 6t சமத்துக் குழந்தாய் ! உன் துணையில்லை என்றாலே எழுத்துலகெனக்கு எட்டாக்கனியே! ஒருவேளை நவீன மெல்லாம் தீங்கில்லையோ? பழையனவெல்லாம் பெருமையில்லையோ? 👇🏼 நான் எனது மருத்துவத் தொழிலை நிறுத்திவிட்டு மீதமிருக்கும் ஆயுளை  விலங்குகளின் உரிமை பற்றிஒரு விழிப்புணர்வை சிறு குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் மனதில் பதியும் படியாக சில அடுக்கு மொழிகளை எழுதலாம் என்று ஆரம்பித்தேன்... அது ஒரு ஃ

சிலந்திவலை

சிலந்தி வலை வீட்டை சுத்தம் செய்ய எண்ணி துடைப்பக்கட்டை கையில் எடுத்து தரையைப் பெருக்கி மெழுகினேன் அரக்கப் பறக்க ஓடினேன் அங்கும் இங்கும் துடைத்தேன் பளபளவென்று மின்னும் தரை பார்க்கப்பார்க்க மகிழ்ச்சி அண்ணாந்து பார்த்தால் மின்விசிறி அழுக்குப் படிந்த மின்விசிறி அதையும் துடைத்து முடித்தேன். புத்தகம்அடுக்கிய அலமாரி தூசி தட்டி துடைத்தேன் மீண்டும் அழகாய் அடுக்கினேன் மேசை நாற்காலி அனைத்தும் மேலும் ஒரு முறை துடைத்தேன். எல்லாம் முடித்து வந்தேன் கையில் சூடாய் தேனீர் கோப்பை கண்களை மூடி சுவைத்தேன், அப்பாடா வென சாய்ந்தேன். விழிகளைத் திறந்து மேலே பார்த்தேன் அங்கங்கே சில வலைகளைக் கண்டேன் - சிலந்தி வலைகளைக் கண்டேன் வேகம் கொண்டு எழுந்தேன் ஒட்டடை குச்சி கையில் எடுத்து வலையின் மேலே வைத்தேன் சிதறி ஓடின சிலந்திகள் அதிர்ந்து நின்றன கைகள் ! ஓடி ஓடி சிலந்தி கட்டிய கூட்டை நாம்தான் கலைப்பதா வீட்டை சுத்தம் செய்ய வேண்டி சிலந்தியின் குடியைக் கெடுப்பதா? சுத்தமா.. இல்லை ..சிலந்தியா ? கேள்வியில் தவித்தேன் ஒரு வினாடி  சிலந்தியென்ற முடிவு மனதின் உள்ளே வந்ததும் உடனே வந்தது நிம்

நேரென்ற பார்வை

நேர் என்ற பார்வை கண்ணை மறைக்கும் வாரும் வேகம் கொண்ட காலும் குறிக்கோள் நோக்கும் இதயம் , இவை அனைத்தும் உந்தித்தள்ள குறியை நோக்கி ஓடும் குதிரை நிச்சயம் ஜெயிக்கும் , குறிக்கோளை எட்டிப் பிடிக்கும். பிறக்கும் குதிரை குணமென்ன குறிக்கோளுண்டா அவ்வேளை ? காட்டுக்குதிரைக்கென்ன குறிக்கோள் ? புல்லைத் தின்னும் நீரை குடிக்கும் புலி வந்தால் பாய்ந்தோடும் .. புலி போனால் நின்றாடும் ! புலியில்லா நேரம் வாழ்வாங்கு நேரமே, பிறந்த காடு மலையும் பச்சைப்பசேல் புல்வெளியும் அலைந்து திரிந்து அனைத்தும் பார்த்து முழுமை வாழ்வு வாழ்ந்திடுமே! குறிக்கோளைத் தந்தது யார் , கண்ணில் வாரைப் போட்டது யார் ? நாம்தானே ! நாம்தானே ! 'அறிவெமக்கு அதிகம்' கூறிக்கொள்ளும் நாம்தானே ? இயற்கை வாழ்வை விட்டு இழுத்துக் கொண்டு வந்து குதிரைக்குட்டி உனையே எம் குறி நோக்கி ஓடென்றோம்  😐 பின் பார்த்து முன் பார்த்து இரு பக்கம் பார்த்து உலகென்றால் என்ன உணர்வென்றால் என்ன அனைத்தும் பார்த்த வாழ்வு அதுவே நல்ல வாழ்வு . குறியை மட்டும் பார்க்கும் ஓட்டம் வாழ்வேயல்ல ,சாவாகும். குதிரைக் கண்ணின் வாரு நம் கண்ணின் மேலே

அரிசீம்பருப்பு

அரிசீம்பருப்பு சோறு கொங்குநாட்டு சோறு அரிசீம்பருப்பு சோறு சத்துள்ள சோறு செய்வதெப்படிப் பாரு! அரிசி எடுத்துக் களுவிக்கோ அதுல பாதி பருப்பு புடிச்ச பருப்பு சேர்த்துக்கோ அதையும் சேர்த்து களுவிக்கோ அரை மணிநேரம் ஊறப் போடு வெங்காயம் அளகா அரிஞ்சுக்கோ கூட மொளகா சேர்த்துக்கோ கருவேப்பிலையப் போட்டுக்கோ மொளகு சீரகம் அரைச்சு பூண்டெத்தட்டி எடுத்துக்கோ மஞ்சத்தூளும் கொளம்புத்தூளும் கொஞ்சம் கொஞ்சம் கொட்டிக்கோ எல்லாம் ஒன்னா கலந்து தண்ணி சேரு மூனுக்கொன்னு தாளிச்சுக் கொட்டி, மூடீ வெச்சு, வேக வெச்சு எறக்கிக்கோ கத்திரிக்காப் பொரியலு பக்கத்துல வெச்சுக்கோ நெய்யக் கொஞ்சம் ஊத்திக்கோ சூடு பறக்க சாப்பிட்டா இதுக்கு ஈடு இல்லையக்கா!  💃 நேரங்கழிச்சு வந்து சோறு ஆறிப் போச்சுன்னா கெட்டித் தயிர சேர்த்துக்கோ! பிகு: எங்க ஊரு ஸ்பெசலு மொச்சைப் பருப்பு சோறு பச்சையாக அரச்சுக்கோ வரமிளகாய் பூண்டு கொளகொளன்னு எடுத்துக்கோ அரிசீம்பருப்பு சோறு! 👇🏼 நான் வளர்ந்த கோவை மற்றும்  திருப்பூரில் எப்படியும் கிட்டத்தட்ட வாரத்தில் ஒரு 2-3 நாள் ராத்திரி சாப்பாட்டுக்கு அரிசீம் பருப்பு சாப்பாடுன்

பொய்

பொய் ஐம்பது வயதில் இது குறையும் அறுபது வயதில் அது குறையும் எலும்புகள் அனைத்தும் உடைந்துவிடும் இந்த மாத்திரை உண்ணுங்கள் அந்த மாத்திரை உண்ணுங்கள் இரத்த சக்தி ஏற்றுங்கள் ஐம்பது வயதில் இது ஏறும் அறுபது வயதில் அது ஏறும் அடிக்கும் இருதயம் நின்றுவிடும் இந்த மாத்திரை உண்ணுங்கள் அந்த மாத்திரை உண்ணுங்கள் ரத்தக் கொழுப்பைக் குறையுங்கள் இயல்பாய் இருக்கக்கூடாது இருந்தால் இறந்து போவீர்கள் சிறுவர் சிறுமிக்கொரு மருந்து அன்னை தந்தைக்கொரு மருந்து தாத்தா பாட்டிக்கொருமருந்து எல்லாம் இருக்கு மருந்துலகில். "மருந்துகள் இல்லா ஒரு நிலையை நினைத்துக்கூட பார்க்காதீர் நவீன உலக வாழ்க்கையிலே" என்று கத்திக்கதறும் நம்மைச் சுற்றும் ஊடகமே! எனக்கோர் ஐயம் உண்டிங்கே இதற்கு முந்தய மனிதர்கள் யாரும் பிழைக்கவில்லையோ மாத்திரை இல்லாக் காரணத்தால்?! எப்படி வந்தோம் நாம் மட்டும் உயிரில்லாத உலகிருந்து? நமக்கு வேண்டியது மாத்திரையல்ல பொய்களை உணரும் ஞானம் ஐயா! 👇🏼 நானே ஒரு மருத்துவர் என்றாலும் அதிகமாக மருந்துகள் உபயோகிப்பது எனக்கு பிடிக்காது.  எங்கள் மருத்துவ புத்தகங்களிலும் யா

கல்வி

கல்வி என் இளைய மகன் சிறு வயதில் பள்ளி செல்லும் பொழுது ஜோகிரபி என்னும்பூகோளவியல் புத்தகத்தைப் பார்த்து கொஞ்சம் கோபம் கொள்வான்,  'இதையெல்லாம் நாங்கள் எதற்கு படிக்க வேண்டும்?.. இதனால் எனக்கு என்ன பிரயோஜனம்' என்று கேட்பான்.. பல நேரங்களில் அவன் கேட்டது சரி என்று தோன்றுகிறது. கிட்டத்தட்டப் பதினேழு வயது வரையில் கல்வி என்னும் பெயரில் பல விஷயங்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன. அதைக் கொஞ்சம்  குறைத்துக்கொண்டு வாழ்க்கைக்கு ஏதுவாக சிலவற்றை சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். என் தாய் பத்தாவது வரையில் தான் படித்திருக்கிறார். என் தந்தை இன்ஜினியரிங் படித்து இருந்தார். என் தாய்க்கு இருக்கும் மதி யூகமும் பிறரைப் புரிந்து கொள்ளும் மனோபாவமும், என் தந்தைக்கும் எனக்கும் கொஞ்சம் குறைவு. ரொம்பப் படித்து எங்களுக்கு அறிவு மழுங்கி விட்டது என்று என் தாயார் அடிக்கடி கூறுவார்கள்! ரொம்பப் படிச்சவங்க இப்படித்தான் இருப்பாங்க என்றும் பல நேரங்களில் கிண்டல் செய்திருக்கிறார்! அவர் கூறியதில் தவறு ஏதும் இல்லை என்று இப்பொழுது தோன்றுகிறது. அறிவை வளர்த்து உலகப் பார்வையை விசாலமாக ஆக்கி இ

Gray's anatomy

Gray's anatomy மருத்துவப் படிப்பின் முதல் வருடம் உடல் கூறமைப்பை மனப்பாடம் செய்வதை நினைத்தால் குலை நடுங்கும். உடல்கூறு அமைப்பின் விளக்கங்கள் நாளம் நரம்பின் வழித்தடங்கள் அனைத்தும் விளக்கும் ஹென்றி கிரே. இறந்த மனிதன்உடலை எடுத்து, இரவும் பகலும் அதனை அறுத்து, மூளை இருதயம் வயிற்றுப் பாகம் கையும் காலும் எலும்பும் சதையும், அனைத்தும் படித்து அழகாய்ப் பிரித்து, நண்பர் வரைந்த ஓவியம் மூலம் தெள்ளத் தெளிவாய் விளக்கம் கூறும் அருமை நூலைக் கொடுத்த பெருமான்.. ஹென்றி க்ரேவெனும் இளைய பெருமான் . சின்னஞ் சிறிய தசைநாறும் அதனினும் சிறிய எலும்பின் கூறும் கொஞ்சம் கூட விட்டுவிடாமல் ஹென்றி கிரேவின் புத்தகம் பேசும் அழகாய் விரிவாய் நம்மோடு! இன்றும் மருத்துவர் படிக்கும் அடிப்படை அறிவை வழங்கும் உடற்கூறு அமைப்பைக் கொடுத்த ஹென்றி கிரேவின் வாழ்வோ அகவை முப்பத்தி நான்கே! 👇🏼 கோவை மருத்துவக் கல்லூரியில் நாங்கள் படித்துக் கொண்டிருந்த பொழுது, தினமும் காலை ஏழரை மணிக்கு 'அனாடமி லேப்' செல்லவேண்டும். உடற்கூறு அமைப்பை படிப்பதற்கு இரண்டு மணி நேரம். இறந்த மனித உடலை அறுத்து ஒவ்வொ

மழை

கடலம்மா நீரைக் கனிவுடன் வாங்கி நீராவியாகி மேலே சென்று மேகத்திலமர்ந்து காலம் கனிந்ததும்  கார் மேகமாகி கருணையில் பொழியும் மழையே! உன் ஓசை கேட்டு உற்சாகம் உள்ளம் எங்கும் பொங்குதே பச்சைப் புல்வெளி மரங்கள் யாவும் பளீரென நகைக்குதே நீ காற்றைக் கழுவி பூமியில் இறங்கி ஏதேதோ செய்கின்றாய் எங்களைக் காக்கப் பார்க்கின்றாய். ஆனால் நாங்கள் மனிதர்கள்  🦸 ஆறு அறிவு படைத்தவர்கள்! அவ்வளவு சுளுவில் விட மாட்டோம் ஆட்டம் கட்டி இறுதியில் ஓய்வோம் . நீ செல்லும் பாதை அடைப்போம் பூமியை நெகிழியில் மறைப்போம் வரும் நீரெல்லாம் வீணாக்கியபின் வெள்ளத்தில் முழுகி மடிவோம். இனிமேல் மழையே நீ மனிதன் இல்லா இடங்களிலே மலையை நனைத்து மரத்தைக் காத்து நுண்ணுயிர் பல்லுயிர் அனைத்தும் காத்து உன் அருமை காக்க முயல்வாயே  🙏 . 👇🏼 பருவமழை காலத்தில் இந்த வருடம் ஓரளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. பிற்பகல் நேரம் மேகம் கவிய ஆரம்பித்தால் மாலை நேரம் நல்ல மழை. மழை சத்தத்துடன் சில நேரங்களில் சூடான தேனீரும் இருக்கும். அதனுடன் வறுத்த பொரியும் எப்போதுமிருக்கும். கூடவே ஒரு சின்ன கவலை... மழை நீரை நாம் சேமி

அஞ்சலி!

காட்டின் மேலே பறக்கும் ரயில் நகரத்து நெரிசலுக்கு மேம்பாலம் உடனே சட்டம், அதற்கொரு திட்டம் ஏலத்தைப் போட்டு ஒப்பந்தமிட்டு லாபத்தை ஈட்டு. கற்களை அடுக்கு தூண்களை ஏற்று விரைவில் வரவேண்டும் மேம்பாலம் மனிதர் செல்வார் அங்கும் இங்கும் செய்ய வேண்டும் அதையும் இதையும் நகரத்தில் எதற்கு மேம்பாலம்? 'வாகன நெரிசல் அதிகமப்பா விபத்தேற்பட்டால் தொல்லையப்பா மனிதன் கையும் காலும் உடையும் சிலநேரம் மாண்டு போகவும் கூடும்' அதையும் மீறி விபத்தேற்பட்டால் இருக்கவே இருக்கு நூத்தி எட்டு 🤗 காட்டுகேனில்லை இப்படி ஒரு சட்டம்? 🌳 🙊 🐢 🐆 🐅 🌳 🐏 🐘 🦏 🐒 🐦 🦉 🌳 எங்கள் காட்டில் நீங்கள் செல்ல பறக்கும் இரயில் ஏன் இல்லை ? 🐘 என்னுயிர் எனக்கு வேண்டாமா? எனக்குக் குழந்தை இல்லையா ? ரயிலடித்து நான் போனால் யார் பார்ப்பார் என் குழந்தை? அதை நீங்கள் சிறை எடுத்து கோவில் ஒன்றில் கட்டி வைத்து ஆயுளுக்கும் அடிமையாக என் குழந்தை வாடி இறக்கும் மனிதரிலே விபத்துக்கள் வேண்டாம், கொத்தடிமை வேண்டாம்! நாங்களென்ன பாவம் செய்தோம்? அடிமை வாழ்வு வாழவும் விபத்தில் ச