புரியும் பேச்சு


புரியும் பேச்சு

தொங்கும் அட்டைப்பெட்டியிலே சிட்டுக்குருவி கட்டிய கூடு,
முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து,
ஒற்றைக் குஞ்சு எட்டி பார்த்தது!

தினமும் விடியல் வேளை
நில்லா ஒலியா கேட்கும்
சின்னக் குஞ்சின் சத்தம்!

தந்தை தாயின்
அலகில் வரும்
பூச்சியும் புழுவும்
நிமிடம் ஒன்றாய்ச் செல்லும்
சின்னக் குஞ்சின் வாயின்
உள்ளே!

விடியல் தொடங்கி
மாலை வரை
சலிப்பின்றிப் போகும் சாப்பாட்டுக்கடை!

வியப்புடன் பார்க்க நாம் வந்தால்
புழுவுடன் வரும் தந்தை தாயும் சட்டெனஅமர்வார் சுவர் மேலே,

"அமைதி குஞ்சே அமைதி
மனிதர் இங்கே வந்து விட்டார்"
அபாயக் குரல் குஞ்சுக்கு;
'கீக்கி கீக்கி கிக்கீ'
அந்தக்கணமே குஞ்சும்
தலையை உள்ளே இழுத்து குரலை உடனே நிறுத்தும்!
பேரமைதி!

சரியென்று நாம் விலகிச்
சென்றால்,
தாயும் தந்தையும் கூட்டுக்குப் போகும்
அலகில் தொங்கும் புழுவுடனே!

பிறந்தொரு திங்கள் ஆகா குஞ்சு
புரிந்து கொண்டு பெற்றோர் பேச்சை
நடந்துகொண்டது அதன்படியே!
மனிதக் குழந்தை பேசப்புரிய குறைந்தது ஆகும் ஒரு வருடம்.

பறவைக்கறிவு ஐந்தென்பார்
நமக்கது ஆறு என்கின்றார்
என்ன என்ன என்ன இது!
 😇!


👇🏼
நான் கடந்த சில வருடங்களாக என் தாய் வீட்டில் தான் அவருடன் இருக்கிறேன்.
வெகுநாட்களாக சிட்டுக்குருவிக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பதுண்டு... சிட்டுக்குருவிகள் இடம் இன்றி தவிக்கின்றன,
சரி என்று ஒரு பழைய மருந்து அட்டைப் பெட்டி எடுத்து பக்கவாட்டில் சிட்டுக்குருவி மட்டும் போகுமாறு ஒரு ஓட்டை போட்டு,
ஒருவேளை குஞ்சு பொரித்தால் அது வெளியே வர முடியாதபடி ஒரு அரை இன்ச் உயரத்திற்கு சின்ன தடுப்பு வைத்து கூரை நடுவிலிருந்து பூனை போக முடியாத இடத்தில் தொங்கவிட்டேன்.
சுமார் ஒன்றரை வருடங்கள் அதுபாட்டுக்கு தொங்கிக்கொண்டிருந்தது எந்த ஆக்டிவிட்டியும் காணோம்.

பிறகு ஒருநாள் இரண்டு குருவிகள் வந்து மாறிமாறி அதைப் பார்க்கவும் போகவும் இருந்தன
பிறகு ஒரு வாரத்தில் சின்ன சின்ன வக்கிப்பில் சில குச்சிகள் முதலியவை கொண்டுவந்து அட்டைப் பெட்டிக்குள் வைத்து கூடு செய்துவிட்டன.

அதன் பிறகு உள்ளே முட்டையை வைத்து அடைகாத்து இருக்கும் என்று நினைக்கிறேன் சத்தமில்லாமல் இருந்தது சில நாட்கள்...
 குஞ்சு பொரித்த பிறகு நில்லாமல் குஞ்சின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் காலை முதல் மாலை வரை...
விடிந்ததும் ஆரம்பித்தால் தாயும் தந்தையும் மாறி மாறி 10 நிமிடத்திற்கு ஒருமுறை புழுவோ பூச்சியோ கொண்டு வந்து கொடுப்பார்கள், அலுக்காமல்  செய்வார்கள் .....

மூன்றாவது ஒரு குருவியும் கூடவே எப்பொழுதும் இருந்து வந்தது.
அதனுடைய வேலை என்ன அது எப்படி இவைகளுக்கு சொந்தம் எதுவும் எனக்கு தெரியவில்லை..
இந்த மூன்று வருடங்களில் ஆறு
தலைமுறை குஞ்சு பொரித்து ஆகிவிட்டது
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரே ஒரு குஞ்சு தான்... ஒரு 20 25 நாட்களுக்கு பிறகு தாய் தந்தை குஞ்சு மூவரும் சேர்ந்து கூட்டை விட்டு பறந்து போவார்கள்.
சிலசமயம் ஒருவாரம் வரை திரும்ப வருவார்கள் தினமும்.. ஓய்வு எடுப்பதற்கு.





Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி