விருட்சம்
விருட்சம்
அடர்ந்த வனம் ஆயிரம் மரங்கள்
விடியற்காலை பறவை ஒலிகள்
துணையாய் நிற்கும் நிசப்த ஓசை
உள்ளே இருப்பது வேறோர் உலகம்
நமக்குபுதியது உண்மையில் பழையது.
அடர்ந்தவனம் ஆயிரம் மரங்கள்
உள்ளே சென்றால் புரியும் நமக்கு
எத்துனை சிறியவர் நாம் தான் என்பது
எதுவும் இல்லை கவலை என்று !
அடர்ந்த வனம் ஆயிரம் மரங்கள்
உயிரைக் கொடுக்கும் பிராண வாயு
நிறைந்து இருக்கும் என்றும் அங்கே
பூமியைக் காக்கும் பல்லுயிர் பெருக்கம்
அங்கே இருக்கும் வனத்தின் உள்ளே.
அடர்ந்த வனம் ஆயிரம் மரங்கள்
தியானம் செய்யத் தகுந்த இடம்
ஞானம் பிறக்க உகந்த இடம்
வாழ்வின் குறியே ஞானம் அல்லவா
ஞானம் வந்தபின் வேறென்ன வேண்டும்
சிறிய நகரம்
நெருக்கும்வீடுகள்
மனிதக் கூட்டம்
வியர்வை நாற்றம்
ஓட்டம் ஓட்டம்
எங்கோ ஓட்டம்
ஏன் என்றறியா
வேக ஓட்டம்
எதற்கோ அவசரம்
புரியா மனம்
காசு பணம்
அடிக்கும் இதயம்
சிறிய நகரம்
நெருக்கும் வீடுகள்
சுகந்த மணம்
வீசும் காற்று
நெஞ்சம்நிறைய
உள்ளம் உவக்க
அமைதியாகச் அமரச் சொல்லும்
அடர்ந்த வனம் ஆயிரம் மரங்கள்.
ஆயிரம் மரங்களை அறுத்து விற்று
நடுவில் சிமெண்டில் கட்டிடம் போட்டு
அலங்கார மரங்கள் புதிதாய் நட்டு
நீச்சல் குளத்தை வெட்டி எடுத்து
ஆழ்துளைக் கிணறு புதிதாய் போட்டு
நீரை எடுத்து குளத்தை நிரப்பி
நூற்றுக்கணக்கில் வந்திறங்கும்
மனிதருக்கங்கோர் அமைதி(?)
விடுமுறை
ஃபாரஸ்ட் ரிஸோர்ட்டில்!
இதனினும் இனிது எதுவென்றால் -
பொட்டல் காடுகள் ஆயிரம் உண்டு
ஒன்றிரண்டை நாம் எடுத்து
அதிலாயிரம் மரத்தை நட்டு
நடுவில் காரை கட்டிடம் போட்டு
குளமொன்றை வெட்டி எடுத்து
மழையின் நீரை அதிலே செலுத்தி
வந்திறங்கும் மனிதருக்குக்
கொடுப்போம் அமைதி விடுமுறை
புத்தம் புதிய காட்டு வீட்டில்!!
👇🏼
எனக்கு நீண்ட நாட்களாக மிக மிகச் சிறியதாக ஒரே ஒரு அறை கொண்ட ஒரு வீடு
சுற்றிலும் ஒரு 30 40 மரங்கள்
ஒரு குட்டி வனம் போன்ற இடத்தில் வசிக்க வேண்டும் என்ற ஆசை.
கோவையில் நான் ஒரு சிறு மனை வாங்கினேன்..
அதில் மரம் நட வேண்டும் என்ற ஆசையில் ஒரு 45 குழிகளும் எடுத்தாச்சு.
நான் இப்பொழுது வசிப்பது திருப்பூரில்...தாய் வீட்டில்...
திடீரென என் தாய் உடல்நலமில்லாமல் ஆனதால் என் ஆசை நிராசையானது மரம் நட முடியவில்லை.
முன்னொரு சமயம் என் தாய் கொடுத்த இடத்தில் ஒரு 150 மரம் நட்டு தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி அவைகளை பாதுகாத்து வந்தேன்..
அந்த இடத்தை விற்கும்படி ஆயிற்று அவர்கள் அனேகமாக அந்த மரங்களை எல்லாம் வெட்டி இருப்பார்கள் போய் பார்க்க மனமில்லை நான் அங்க போகவே இல்லை.
👇
Comments
Post a Comment