பாப்பாத்தி



பாப்பாத்தி

பாலும் தேனும் கலந்த நிறத்தில் பட்டில் செய்த குட்டி,
வந்தாள் எங்கள் பாப்பாத்தி
பத்து வருடம் குடும்பத்தலைவி.

விழிக்கும் நேரம் உறங்கும் நேரம் அனைத்தும் அவளின் முடிவே.
இரவில் மணி பத்தென்றால் அனைவரும்  உறங்க வாரும்,
வராவிட்டால்  "வள்வள்"
படுக்காவிட்டால் "லொள் லொள்"

வேற்றுக் குழந்தை வீட்டுக்கு வந்தால் கர்ஜனை வருமே உர்ரென்று,
வேற்று மனிதர் வீட்டுக்கு வந்தால் வரவேற்பு உண்டு
வாலை ஆட்டி!

விருப்பமான சிக்கன் சோறு அளவில்லாமல் தின்னலாம்,
வேறு சோறு எதுவென்றாலும்
"வேலை என்ன உங்களுக்கு
வாயில் வந்து ஊட்டுங்கள்
படுக்கை உதறிப் போடுங்கள்
படுக்க வேனும் நானுமே"..
பிடித்தமான வேலைக்காரர்
குடும்பத்தலைவர் குமாரனவர்.

வயது நான்கில் பெற்றாளே
குட்டிகள் ஐந்து கண் போலே!
சுத்தம் செய்து சுத்தம் செய்து மணக்க மணக்க வைத்தவள்,
திங்கள் ஒன்று ஆனதும்
விலகிப் போனாள்  தூரவே..

சென்னை பெங்களூர் கோவை என்று ரயிலில் காரில் பயணம் செய்து,
உலகம் என்றால் என்னவென்று உணர்ந்துகொண்ட பாப்பா,
பத்து வருடம் உடனிருந்து ,
பிறகு மேலே சென்றாளே😢
மனிதர் மட்டும் உலகல்ல
உலகில் மனிதன் ஓர் அங்கம்
உணர வைத்தாள் பாப்பாத்தி!



👇🏼
நாய் என்றாலே எனக்குக்கொஞ்சம் பயம் சிறு வயது முதல்.....

என் குழந்தைகள் இருவரும் உயர் பள்ளி படிக்கும் போது பெங்களூர் சென்றோம்
அங்கு ஒரு ஏழு வருடங்கள் இருந்தோம்.
பெரிய மகன் பத்தாவது முடித்து பிளஸ் 1-க்கு சென்னை வந்துவிட்டான்.
அப்பொழுது சின்னவன் கொஞ்சம் தனிமையாய் உணர்ந்தான்.. அதனால், அவனுக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளை வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைத்து அவன் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த mp3 ப்ளேயர் வேண்டுமா, நாய்க்குட்டி வேண்டுமா என்று கேட்டோம்.

அவன் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் 'சந்தேகமில்லாமல் நாய்க்குட்டி தான் இது என்ன கேள்வி' என்றான்
சரி என்று உடனே பக்கத்தில் உள்ள ஒரு நாய்க்குட்டி வளர்க்கும் இடத்திற்கு சென்று பார்த்தோம், காகேர் ஸ்பணியல் என்று கூறப்படும் ஒருவகையில், இரண்டு குட்டிகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன.
அதில் ஒன்றிற்கு 3000 ரூபாய் கொடுத்து அடுத்த நாள் விடியற் காலையிலேயே வாங்கிக்கொண்டு வந்து விட்டோம்.இப்பொழுது நினைக்கிறேன் அந்த இன்னொன்றையும் வாங்கிக்கொண்டு வந்திருக்க வேண்டும் என்று.... பாவம் அண்ணன் தங்கையாக ஒன்றுக்கொன்று துணையாக இருந்தவைகளைப் பிரித்து ஒற்றை நாயாய்க் கொண்டு வந்துவிட்டோம்.

ஆண் குட்டி தான் வாங்க வேண்டும் என்று முடிவாகி இருந்தது, ஆனால் பெண்குட்டி வாங்கிவந்து வைத்துவிட்டு,அது ஆண் என்று என்னிடம் கூறிவிட்டார் என் கணவர், நானும் நம்பிவிட்டேன்!

சில நாட்களில் பெயர் வைத்தாகிவிட்டது,பாப்பாத்தி  என்று.
எங்கள் குடும்ப சூழ்நிலை, எங்கள் சொந்த காரர்களிடம் எங்கள் உறவு முறை, என்று எல்லாவற்றிலும் ஒரு மாறுதல் தெரிய ஆரம்பித்தது...
அனைத்திலும் பாப்பாவிற்கு முதலிடம் கொடுத்தோம்.
இதனால் உறவினர்கள் கொஞ்சம் எரிச்சல் அடைந்தார்கள்.
ஆனால் எங்களால் மாறமுடியவில்லை......

அறிவுச் சுடராகத் திகழ்ந்த பாப்பா அனைவரையும் அன்பால் கட்டிப் போட்டாள்.
பாப்பாவைப் பார்ப்பதற்காகவே சென்னையிலிருந்து பெரிய மகன் அடிக்கடி வருவான்
பொதுவாகப் பணம் செலவு செய்ய யோசிக்கும் என் கணவர் பாப்பா என்றால் ஆயிரக்கணக்கில் கூட செய்வார்.ஆனால் நாங்கள் யாரும் அதை ஒரு குறையாக நினைக்கவில்லை,எங்கள் குடும்ப அங்கத்தினர்கள் நான்கு பேரையும் இணைக்கும் ஒரே இணைப்பாக
பாப்பா திகழ்ந்தாள்.

நாங்கள் முதன்முதலில் வாங்கிய கார் கூட பாப்பாவை அனுசரித்துத் தான் வாங்கியது..
ஊருக்கு வரும் போதெல்லாம் அவளை கூட்டி வர சௌகரியமாக இருக்கும் என்று...
பாப்பா வந்த நாளிலிருந்து என் நாய் பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கிட்டத்தட்ட அடியோடு மறைந்து விட்டது!

ஆனால் அவள் இறந்தது எங்களைத் தாள முடியாத சோகத்தில் தள்ளி விட்டது.
நாய் தானே போய்விட்டது மாப்பிள்ளை ஏன் வருத்தப்படுகிறீர்கள்... அதுதான் பாப்பாவுடைய குட்டி கிளியோ இருக்கிறாளே என்று என் சித்தி என் கணவரிடம் கூறினார். அதற்கு அவர்
"அத்தை அவள் நாய் அல்ல, என் தாய் என்றார்" 😟






2️⃣6️⃣





Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி