புது எண்ணம் புது வாழ்வு

சிறுவயதில் ரேடியோவில் அடிக்கடி ஒரு பாடல் கேட்டிருக்கிறேன்
 'ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன் மேலே'
என்று போகும்.

இந்தப்பாடலின் உண்மையான அர்த்தம் வயது ஆக ஆகத்தான் தெளிவாக புரிகிறது.

இயல்பிலேயே மனித மனம் ஆசைக்கு அடிமை, நம் மனதில் வரும் ஆசைகளுக்கு அளவும் இல்லை... இயற்கையே நம்மை அப்படிப் படைத்து விட்டதோ என்று தோன்றும் சில நேரங்களில்......

அதே இயற்கை தான் இதை உணரும் அறிவையும் கொடுத்திருக்கிறது.

என் வீட்டில் பல நேரங்களில் நான் மேலும்மேலும் ஆசைப்பட்டு வாங்கிய பொருட்களில் பெரிதாக எனக்கு திருப்தி எதுவும் கிடைத்ததில்லை...
பொருட்கள் வீட்டை அடைந்தது தான் மிச்சம்.

கூடவே நேரம் பணம் மற்றும் என் எனர்ஜி செலவானது வீண் தான்.

இதில் சோகம் என்னவென்றால், இதை நான் உணரவே எனக்குப் பல வருடங்கள் ஆகிவிட்டன.

ஆனால் சிலரை நான் கவனித்திருக்கிறேன் இருக்கும் பொருளை நன்றாக உபயோகித்து அதை வைத்து அழகாக வாழ்க்கை நடத்துவார்கள்..
இவர்களின் வாழ்க்கை பிறருடன் போட்டி போட்டு அதிகமாக பொருட்களை வாங்குவோரின் வாழ்க்கையை விட மிகவும் திருப்திகரமாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன்.
இந்த மாதிரி மனிதர்களிடம் எப்பொழுதும் எல்லாமே நிறைவாகவும் நிறையவும் இருப்பதைப் போலவும் நான். உணர்ந்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட  இதை ஒரு மர்மம் என்று கூட சொல்லலாம்..
ஒரு சின்ன நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது...

குழந்தைப் பருவத்தில் நானும் என் தங்கையும் பள்ளிக்குப் போகும் போது ஒரே டிபன் காரியர் தண்ணீர் பாட்டில் தான் கொடுப்பார்கள் அம்மா.. நான்தான் அதைத் தூக்கிக் கொண்டு செல்வேன்.

உணவு இடைவேளையில் இருவரும் அமர்ந்து உண்ணும் பொழுது தண்ணீர் பாட்டிலை திறந்து குடிக்கும் பொழுது ஒருவருக்கொருவர்
'எனக்குக் கொஞ்சம் மிச்சம்
வை'
என்று சொல்வோம்...
சில நேரங்களில் கறாராகவும் சொல்லிக்கொள்வோம்.
இருந்தும் தண்ணீர் பற்றாக்குறையாகவே இருக்கும்.

எங்களுக்கு பக்கத்தில் இன்னுமொரு ஜோடி அக்கா-தங்கை அமர்ந்து உண்ணுவார்கள் எங்களுடையதை விட சிறிய பாட்டிலில் தான் தண்ணீர் இருக்கும் அவர்களிடம்.....ஆனால் ஒருவருக்கு ஒருவர் எடுத்துக் குடிக்கும் பொழுது எதுவும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள்...
அவர்கள் மதிய உணவு வேளை அமைதியாகப் போகும்.

உணவு முடிந்ததும் நிறைய நீர் மீதமிருக்கும் அவர்கள் பாட்டிலில்.

இது எனக்கு எப்பொழுதுமே ஒரு ஆச்சரியம்......இன்று வரை தெளிவாக ஞாபகத்தில் இருக்கிறது.

'Less is more' என்று இதைத்தான் சொல்கிறார்களோ?

👇


புது எண்ணம் புது வாழ்வு


அவரவர் வாழ்க்கை
அவரவர் விருப்பம்
யாரும் எதுவும்
சொல்லல் ஆகா....

ஆனால் இன்று
சூழல் கேட்டில்
தவிக்கும் பூமி!

தவிக்கும் பூமி
அதனைக் காக்க
ஒரே வழி
குறைப்போம் குறைப்போம் அனைத்தும் குறைப்போம்!

ஒன்றே ஒன்று
எதுவென்றாலும்  ஒன்று,
ஒன்றுக்கு மேலே
என்றும் வேண்டாம்!

வேண்டுவதை உண்ணுங்கள்
வேண்டுவதை உடுத்துங்கள்
வேண்டுவதை செய்யுங்கள்
எதுவென்றாலும் அளவுண்டு
அறிந்து செய்தால் நலம் உண்டு!

உணவென்றால் கொள்ளுமளவு,
உடை என்றால் ஒன்றிரண்டு,
கைபேசி ஒன்றே ஒன்று
அது போதும் வருடம் ஐந்து,
செருப்பென்றால் ஜோடி ஒன்று
அதுவே போதும் வருடம் ஒன்று,
கார் என்றால்  ஒன்று
வருமே  வருடம் இருபது.

இன்னுமின்னும்
இதே கொள்கை அனைத்திலும் நாமே கொண்டிருந்தால்
நம்மால் கெட்ட இந்தப் பூமி  தேற வாய்ப்பு உண்டு சாமி!

ஆசைதனைக் குறைத்தால்
மனத் தாளும் திறக்கும்,
தாள் திறந்த பின்னே
மனம் தானே விரியும்,
மனம்தானே விரிந்தால்
பல அர்த்தங்கள் மாறும்,
அர்த்தங்கள் மாறினால்
வாழ்க்கை வேறாகும்...
வேறான வாழ்க்கை என்னென்று பார்ப்போம் வாருங்கள் தோழா தோழியரே!








Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி