ஆறு


ஆறு

வெள்ளியங்கிரி மலை மழையை நன்னீராய்க் கூட்டி வந்து
கோவையம்மா ஊரில்
மக்கள் மனம் குளிர்ந்து,
திரும்பி வந்து திருப்பூரில்
பாலங்கள் பல கடந்து
கரூர் மாநகரத்திலே
நொய்யல் என்னும் ஊரிலே
காவேரி அன்னையை
கரை சேரும் நொய்யலே !

பயிர் நீர் குடிநீர் குளிநீர்
பல நீராகத் தெளிந்து
கண்ணாடியென ஓடிய தங்கமே,
தன் இளம் ப்ராயத்தில்
உன் கரையோரம்
பலர் ஆடப் பார்த்திருக்கும்
என் தோழி கூறுவார்
ஆறென்றால் ஆறு
நொய்யலே நல்லாறென்று !

பல சாயம் ரசாயனம்
உன் உள்ளே கலந்ததால்
தெளிந்த நீர் கருநீராகிக்
கழிவு நீரோடையென
இன்னும் நீ ஓடுகிறாய்
பொறுமை என்னும் பெருமையான அருமை நதியே!

நூறாயிரம் மக்கள்
மகிழ்ந்திருந்த ஆறில்
அந்நாள் ஆறென்றெண்ணி வந்த நாரைகள் இன்னாளாறில் வந்தமர்ந்து குடிநீர் கருநீராகிப் போனதைப் பார்த்து.......?

அந்தோ பூமி மாறியதே
அவள் செல்லக்குழந்தை மனிதனாலே !

சாய நீர்ச் சாலை
வைத்திருக்கும் நல்லவரே,
நொய்யல் வந்த நாரையும்
ஆற்றில்  வந்த மீன்களும்
கடலில் உள்ள உயிர்களும்
காக்க வேண்டி நீங்களே ,

சாய நீரை, சாலையிலே
சுத்தம் செய்தங்கேயே
மரம் செடி கொடி வளர்த்து,
மகிழ்ந்திருத்தல் நலம் அல்லவா?
காசென்னும் காகிதம் செலவானால் என்ன
தாய்க்கு நாம் கொடுத்த
சீதனம் என்றெண்ணி
உவகை கொள்ள வேண்டுகிறேன் !


👇🏼
கடந்த பத்தாண்டுகளாக திருப்பூரில் வசிக்கிறேன்.

வளம் பாலம் வழியாக ஸ்ரீ சக்தி தியேட்டர்  அருகில் போகும் பொழுது நொய்யல் ஆறு மேலேதான்  போவோம்.
ஒவ்வொரு முறையும் அந்த கருப்பு நிறத்தில் ஓடும் நீரை பார்க்கும்பொழுது அவ்வளவு கஷ்டமாக இருக்கும் மனதிற்கு.

அதிலும் வெள்ளை வெளேரென்று  பறவைகள் அந்த நீருக்குள் அமர்ந்திருக்கும்....
அது அதைவிட மிகவும் கஷ்டமாக இருக்கும்....

நாம் அனுப்பும் கழிவுகளால்,
நமக்கு இந்த பூமியில் என்ன உரிமை உண்டோ அதே அளவு உரிமை உள்ள அந்தப் பறவைகள், இந்த கருப்பு நீரில் அமர வேண்டியிருக்கிறது என்று...

ஒருவேளை அந்த நீரையே குடிக்கிறதோ என்னவோ அதுவும் தெரியவில்லை😟

மற்றும் பல நாய்கள் மாடுகள் வேறு சில பறவைகளும் அங்கு வாசம் செய்கின்றனர்.

பெருமழை வரும்போதெல்லாம் வெள்ளநீர் வந்து இந்த கருநீரை அடித்துச் செல்லும் .
அப்பொழுதும் நிம்மதியாய் இருக்காது...
ஏனெனில் கடலுக்குச் சென்று இந்த நீர் அங்குள்ள மீன்களை என்ன பாடுபடுத்தும் என்ற எண்ணம் மேலோங்கும்.
ஒருகாலத்தில் நொய்யல் ஆற்றில் பலர் குளித்தது இல்லாமல் குடிநீராகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்..
உண்மையில் என்னால் அதை நம்ப முடியவில்லை!





Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி