அரிசீம்பருப்பு




அரிசீம்பருப்பு சோறு

கொங்குநாட்டு சோறு
அரிசீம்பருப்பு சோறு
சத்துள்ள சோறு
செய்வதெப்படிப் பாரு!

அரிசி எடுத்துக் களுவிக்கோ
அதுல பாதி பருப்பு
புடிச்ச பருப்பு சேர்த்துக்கோ
அதையும் சேர்த்து களுவிக்கோ
அரை மணிநேரம் ஊறப் போடு

வெங்காயம் அளகா அரிஞ்சுக்கோ
கூட மொளகா சேர்த்துக்கோ
கருவேப்பிலையப் போட்டுக்கோ
மொளகு சீரகம் அரைச்சு
பூண்டெத்தட்டி எடுத்துக்கோ
மஞ்சத்தூளும் கொளம்புத்தூளும்
கொஞ்சம் கொஞ்சம் கொட்டிக்கோ

எல்லாம் ஒன்னா கலந்து
தண்ணி சேரு மூனுக்கொன்னு
தாளிச்சுக் கொட்டி, மூடீ வெச்சு,
வேக வெச்சு எறக்கிக்கோ

கத்திரிக்காப் பொரியலு
பக்கத்துல வெச்சுக்கோ
நெய்யக் கொஞ்சம் ஊத்திக்கோ
சூடு பறக்க சாப்பிட்டா
இதுக்கு ஈடு இல்லையக்கா! 💃

நேரங்கழிச்சு வந்து
சோறு ஆறிப் போச்சுன்னா
கெட்டித் தயிர சேர்த்துக்கோ!

பிகு:
எங்க ஊரு ஸ்பெசலு
மொச்சைப் பருப்பு சோறு
பச்சையாக அரச்சுக்கோ
வரமிளகாய் பூண்டு
கொளகொளன்னு எடுத்துக்கோ
அரிசீம்பருப்பு சோறு!


👇🏼
நான் வளர்ந்த கோவை மற்றும்  திருப்பூரில் எப்படியும் கிட்டத்தட்ட வாரத்தில் ஒரு 2-3 நாள் ராத்திரி சாப்பாட்டுக்கு அரிசீம் பருப்பு சாப்பாடுன்னு செய்வோம்.

செய்யறதுக்கு ரொம்ப சுலபமான இந்த சாப்பாடு நல்ல சத்தும் கூட குழந்தைங்க பெரியவங்க யார் வேணா சாப்பிடலாம்
அரிசி -பருப்பு சதவிகிதம் நமக்கு எப்படி வேணுமோ போட்டுக்கலாம்.

செய்யற வழிவகைகளையும் அவங்க அவங்க நிறைய மாறுதல் பண்ணிக்கலாம்.
பருப்பில் பலவகை இருக்கு எந்தப்பருப்பு வேணா போட்டுக்கலாம்.

தண்ணி நிறைய ஊத்தி குழைய செஞ்சுக்கலாம், கம்மியா நீர் ஊத்தி உதிரி உதிரியாக செய்யலாம்.
ரசம் வைத்து சாப்பிடலாம்.
ஊறுகாய் கத்திரிக்காய் பொரியல் வைத்தும் சாப்பிடலாம்.

தயிர் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்.

குக்கரிலும் செய்யலாம் பாத்திரத்திலும் செய்யலாம்.

எங்களுக்கு ரொம்ப விருப்பமான உணவு .

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி