பொன்னாடை துணி
பொன்னாடைத் துணி
தமிழர்களின் அறிவுடைமை தமிழ்நாட்டின் பழம்பெருமை
தம்பட்டம் அடிக்கின்றோம் இந்நாளும் எந்நாளும்.
தமிழகத்தில் எல்லாரும் போர்த்துகின்ற பொன்னாடை வேறெங்கும் கண்டதில்லை
நான் அறிந்த வரையிலே.
இந்தப் பொன்னாடை போர்த்துவதில் பெருமை என்ன வந்ததிங்கு
இன்றுவரை நானறியேன்.
பெருமை இல்லை பயனும் இல்லை, வீட்டுக்குப் போனவுடன் தூக்கி எறிவார் மனைவியதை!
வேறென்ன செய்வது?
துடைக்க அது துண்டும் இல்லை
தைக்க அது துணியும் இல்லை.
தூக்கி எறிய மட்டுமே ஆகுமிந்தப் பொன்னாடை,
இதைப்போர்த்துகின்ற கலாச்சாரம்
ஒன்றாவதொழிந்தால்,
தமிழ்த்திரு நாடு தன்னை
பகுத்தறிவுப் பாசறை
என்றழைக்கக் காரணமாய் இருக்குமே..
இல்லையெனில் இந்தப் பெயர் ஏளனமாய்த் தோணுதே!
👇🏼
MBBS முடித்து விட்டு மதுரையில் கண்ணுக்கு சிறப்பு படிப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது கண் சிகிச்சை முகாம்களுக்கு போவோம்.
சில நேரங்களில் அங்கு எங்களுக்கு பொன்னாடை போர்த்துவார்கள்.
நானும் அதைப் பெருமையாக கொண்டுவந்து மடித்து வைத்து விடுவேன்,எதற்கு அந்தப் பெருமை என்று நினைத்தால் இப்போது சிரிப்பு வருகிறது.........
எதற்கும் பயன்படவில்லை துடைக்க வேண்டுமென்றால் தண்ணியை உறிஞ்சாது..... நமக்கு தைத்துப் போடவும் முடியாது அந்த துணி ஒருவிதமான பிளாஸ்டிக் மாதிரி இருக்கும்.
சில இடங்களில் சால்வை போர்த்துவார்கள்.... இதிலும் அதே கதைதான்...குளிருக்கு போர்த்தும் சால்வையை வைத்துக்கொண்டு மதுரையில் என்ன செய்வது?
குளிர் என்றால் என்னவென்றே தெரியாத ஊர் அது.
பொதுக்கூட்டங்களில் பார்த்திருக்கிறோம் இதே பழக்கத்தை..
இந்தப் பொன்னாடை எனக்கு ஒரு விளங்காத புதிர் தான் ......என்ன துணி எதற்கு தயாரிக்கிறார்கள் என்ன பிரயோஜனம் ஒன்றும் தெரியவில்லை.
ஒரு சில விநாடிகள் மட்டும் அதுவும் சும்மா மேலே போட்டு எடுப்பதற்காக ஒரு துணி தயாரிப்பது என்பது என்னை பொறுத்தவரை பெரும் குற்றம்.
அதிசயமாக சில இடங்களில் பருத்தித் துண்டு போர்த்துவார்கள்.....
ஏதோ துடைக்கவாவது பயன்படும்.
Comments
Post a Comment