வெள்ளை உப்புமா


  • வெள்ளை உப்புமா

'அம்மா வெள்ளை உப்புமா
எனக்கு வேண்டும், எப்பம்மா'?
விடிந்ததும் செய்றேன் தங்கமே!

கெட்டிச் சட்டி,
கடலெண்ணெய் ஊற்றிக், காயக் கடுகும் பருப்பும்
போட்டுப் பொரியப்,
பச்சை மிளகாய்,
உடனே சேரும் வெங்காயம்,
மணக்கக் கலக்கும் கருவேப்பிலை,
கூடச் செல்லும் இஞ்சித் துண்டு
வதக்கித் தண்ணீர் - நாலுக்கொன்று

அருகில் ரவையை வறுத்து
கொதிக்கும் நீரில் போட்டு
அளவாய் உப்பு சேர்த்து
கிளறிக் கிளறி மூடும் முன்
மீண்டும் ஒரு முறை கடலெண்ணெய்

பதமாய் வெந்ததும்
அடுப்பை அனைத்து
பத்து நிமிடம் புழுங்கவிட்டு
எடுக்க வேண்டும் உணவுத் தட்டு

பஞ்சின் மென்மை உப்புமா
பக்கம் சேரும் சர்க்கரை
வாயில் போட்டால் அம்மம்மா
ஏழை வீட்டின் சொர்க்கம் அம்மா!

பிகு:
பணமுள்ள கனவான்கள்
போடுங்கள் பட்டானி
சத்துள்ள உணவாகும்
நெய் கொஞ்சம் சேர்த்தாலே!

👇🏼

செக்கில் அரைத்த கடலை எண்ணெய் வாங்கிவரச் சென்றேன் அம்மாவுடன்.
எண்ணையின் மணம் மூக்கில் ஏறியதும் முதலில் நினைவில் வந்தது வெள்ளை உப்புமா.
அம்மா செய்யும் பதமான வெள்ளை உப்புமா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
உப்புமா என்றாலே பல பேர் முகம் சுளிப்பார்கள்,
ஆனால் எனக்கு அது  பிடிக்கும்.

வெள்ளை நிறத்தில் நடுநடுவே கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பார்க்கவும் ஒரு அழகு.
கிட்டத்தட்டத் தினமும் செய்தாலும் அலுக்காமல் உண்ணலாம்..

அதன் சிறப்பம்சமே கடலெண்ணெயின் மணம்தான்..
தொட்டுக்கொள்ள சர்க்கரை மற்றும் தேங்காய் சட்னி இரண்டுமே சிறப்பு.

நான் சிறு குழந்தையாய் இருந்தபோது வெள்ளை உப்புமாவை நெய் விட்டுக் கலக்கி ,உருட்டி, சர்க்கரையில் புரட்டி, தட்டில் அம்மா வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது....

கடந்த சில மாதங்களாக என் தாய் உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். அவருக்கு இதே வெள்ளை உப்புமாவை வாரம் மூன்று நாள் காலை உணவாக நான் செய்து தருகிறேன் அவரும் விரும்பி உண்ணுகிறார்.
அவருக்கும் அது மிகவும் பிடித்த உணவு.

எனக்குத் திருமணமான புதிதில் என் கணவருக்கு உப்புமா என்றாலே ஆகாது, தூர ஓடிவிடுவார். இதற்குக் காரணமாக அவர் கூறியது ஹாஸ்டலில் கொடுக்கும் உப்புமாவைப் பல வருடங்களாக சாப்பிட்டு  முகத்தில் அடித்தது போல் ஆகிவிட்டது என்று.
ஆனால் நான் செய்து கொடுத்து சாப்பிட்டுப் பழகி இப்பொழுதெல்லாம் அவருக்கும் மிகவும் பிடிக்கிறது.






Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி