கண்ணதாசன்



கண்ணதாசன்

எளிமைத் தமிழும்
ஒலியின் அழகும்
எதுகையும் மோனையும்
எளிதாய் புரியும்
திரை இசையில்
அது ஒரு காலம்..
கண்ணதாசன் என்பவர் காலம்,

நாயகன்  உணர்வும்
நாயகி உணர்வும்
நம் உணர்வாகும்,
ஆனந்தம் அழுகை
உற்சாகம் உவகை
ஏக்கமும் உறுதியும்
எல்லாம் நமதே..
இயக்குனர் உணர்வும் தெள்ளெனப் புரியும்
இவரது பாட்டில்...

படம் வரும் முன்னே
பாடல் வராக் காலம்,
படத்தில்  திளைத்து
காட்சியின் அதிர்ச்சியில்
உறையும் போது,
திரையில் சட்டென்றொலிக்கும்,
கேட்கும் நம்மை சிலிர்க்க வைக்கும்,
கதையின் உணர்வை நாலே வரியில் சொல்லி முடிக்கும், கண்ணனின் தாசன் எழுதிய பாடல்.

கண்ணதாசன் பாட்டு
காற்றில் வந்தால்,
பழகிய குரலில்
பாடல் தெளிவில்,
கருத்தின் மெய்யில்
கானம் என்றால்
அர்த்தம் அதுவே!

வயதெனக்காகி மனமது மூடியதா?
இல்லை மெய்யே இதுதானா?
காரணம் எதுவென்றறியேன்-
தமிழ்த் திரையிசையில்
இவருக்குப் பின்னால்
இசையுண்டானால் இயல் இல்லையோ?

ஆமாம் அம்மா ஆமாம்!
இல்லைதானது இல்லையம்மா!
என்கிறார்கள் என்னனையொத்தோர்
என் காதில் 😁.

👇🏼

சிறு வயதில் சினிமா பார்ப்பதென்றால் எனக்கு மிகவும் பிரியம்....
இப்பொழுதும் கூடத்தான்!
என்றாவது ஒருநாள் தான் அம்மா அழைத்துச் செல்வார்கள், அதுவும் நல்ல படமா என்று விசாரித்துவிட்டுப் பிறகு தான்!

பாலச்சந்தர் படம் மற்றும் சிவாஜி படம் என்றால், கண்டிப்பாகப் போய்விடுவோம்.

'நிழல் நிஜமாகிறது' எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. கமல்ஹாசனும் சுமித்ராவும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள், ஆனால் சுமித்ரா காலண்டர் பின்னாடி கமல் படத்தை ஒட்டி வைத்திருப்பார்.

கம்பராமாயணம் படித்துக் கொண்டிருப்பார் சுமித்ரா,
அதைப் பார்த்துவிட்டு
கமல் திடீரென தன் அறையில் இருந்து 'கம்பன் ஏமாந்தான்' என்று பாடுவார்... பாட்டு எஸ்பிபியின் கம்பீரக் குரலில் ஒலிக்கும்.

அந்தக் காட்சிக்கு மிகவும் பொருந்துகிறது போல சட்டென்று தோன்றியது மனதிற்குள்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து '47 நாட்கள்', கலர் படம்...
சிரஞ்சீவி ஜெயபிரதா இருவரும் நடித்தது,
சிரஞ்சீவி அருமையான நடிப்பு!

திருமணமாகி பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, அங்கு கணவரது உண்மை சொரூபம் அறிந்து அதிர்ச்சி அடைகிறார் மனைவி... வீட்டை விட்டுத் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீதியில் ஓடுகிறார்.

அப்போது பின்னணியில் வருகிறது  பாடல் 'மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே'
அந்த காட்சியில் அவ்வளவு பொருத்தமாக இந்தப் பாடல் ஒலிக்கும். கிராமத்திலிருந்து வந்த ஏதுமறியா பெண், அந்த இளம் மனைவி மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்று மனதில் உறைத்தது இந்தப்  பாடல் கேட்டதும்!
                         
மீண்டும் எஸ் பி பி யின் குரல் அருமையான பின்னணி இசையில்....

இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன் என்று எனக்குத் தெரியும்...
அப்பொழுதே நான் ஒரளவுக்கு சினிமா பின்னணி விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பேன். பாலச்சந்தர் கமல் கண்ணதாசன் போன்ற பெயர்கள் எனக்கு பரிச்சயமாக இருந்தன...

(All time favourite Sivaji, அது வேறு விஷயம்.
Childhood favourite MGR,
அதுவும் வேறு விஷயம்)

இந்த இரண்டு பாடல்கள் மூலம் கண்ணதாசன் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டார்.

கர்ணன் படத்தில் வரும் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடல் எல்லாம் காலத்தால் கூட அழிக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன், ஏன் என்றால் தலைமுறை இடைவெளி தாண்டி என் மகனுக்கும் அது மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
கண்ணதாசன் பாடல்கள் இசைக்கு மெருகூட்டியதா, இசை பாடலுக்கு மெருகூட்டியதா, என்று பிரிக்க முடியாத வண்ணம் கண்ணதாசன் பாடல்களும் எம் எஸ் விஸ்வநாதன் இசையும் அப்படி ஒரு கலவையாக இருக்கும்!

யோசித்துப்பாருங்கள் 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' பாடலில் எது சிறப்பு ?கவிஞரின் பாடல்வரிகளா,  சீர்காழிகோவிந்தராஜனின் அருமையான குரலா, எம் எஸ் விஸ்வநாதனின் அற்புதமான இசையா?
சொல்வது கடினமாக இருக்கிறதல்லவா?



Comments

  1. மயக்கமா கலக்கமா, மனதிலே குழப்பமா ...

    மனிதன் மாறிவிட்டான், மதத்தில் ஏறிவிட்டான் ...

    இத்யாதி தத்துவ பாடல்கள் என்றும் நினைவில் நிற்பவை. அவை எக்காலத்திற்கும் பொருந்துபவையும் கூட.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி