Posts

Showing posts from November, 2019

புலியும் முறமும்

புலியும் முறமும் வீரத் தமிழ்நாட்டில் சங்கத்தமிழ் காலத்தில், முறத்தால் புலியை அடித்து விரட்டினாள் தனியாய்ப் பெண்ணொருவள்! தீரப்பெண்ணவள் விரட்டிய புலியது வந்ததேன் நம் வீட்டுக்குள்? தானே தான்  வந்ததா? புலியின் காட்டில் புல்லை வெட்டி மானை விரட்டி, மனிதன் கட்டிய வீட்டில், தன் இருப்பிடம் தேடி வந்ததா? கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி காட்டின் ஓரம்  சென்றோம், இன்னும் கொஞ்சம் முன்னேறி காட்டினுள்ளே செல்கின்றோம், இப்படியிந்த முன்னேற்றத்தால் காடே இல்லையாம் பின்னாளில்... புலியும் யானையும் போவதெங்கே காடுகள் இல்லா போனாலே? விலங்கின் காட்டின் உள்ளே, வீட்டைக் கட்டி நாம் போவோம், தம் இல்லம் தேடி அவை வந்தால், முறமிருக்கு அடிக்கவே மின்சாரம் இருக்கு கொல்லவே! அறிவுகள் ஆறு உள்ளன நியாய தர்மம் இல்லையே? மண்ணில் மனிதன் முக்கியம் மனிதன் மட்டுமே முக்கியம், என்ற எண்ணம் மாறி எல்லா உயிரும் தேவையென்ற நிலைப்பாடென்று வருதோ அன்றே பூமி மீண்டும் மலரும்! 👇🏼 Man animal conflict என்ற தலைப்பில் அடிக்கடி  செய்தித்தாள்களில் கட்டுரைகள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் நான் அவற்றைப் படிக்

விட்டால் பறக்கும்

ஏறக்குறைய நாம் அனைவருமே ஏதோ ஒரு கட்டாய சிறையில் நம் மனதை அடகு வைத்து இருக்கிறோமோ? மனிதனாகப் பிறந்தால் பணமீட்டுவது பொருளை வாங்குவது போன்ற வைகளைத் திறம்படச் செய்தால்தான் முழு மனிதனாக க் கருதுகிறோம். அல்லது கட்டாயமாக ஏதோ ஒரு லட்சியத்தை வைத்து அந்த லட்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்...  வருவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனத்தை நாம் யாரும் வரவேற்பதில்லை. இதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்று எப்பவோ சொல்லிவைத்த ஒரு மொழியை வைத்துக் கொண்டு பொருள் தேடுவது ஒன்றே வாழ்க்கை என்று நினைக்கிறோம். கண்டிப்பாக நாம் உலகத்தில் வாழ கொஞ்சம் உழைக்க வேண்டும் பொருளும் சேர்க்க வேண்டும். ஆனால் எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் கொஞ்சம் நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வில்லையோ என்று எனக்கு தோன்றுகிறது... என் உள் மனதுக்கு தோன்றுகிறது. அவரவருக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படி வாழ்க்கையை நடத்த வேண்டியது தான்..... நான் நினைப்பது சரியா என்று எனக்கே இன்னும் விளங்கவில்லை. 👇 விட்டால் பறக்கும் அறிவும் மனமும் மூளையும் அடைந

எள்ளு

நம் நாட்டின் கிட்டத்தட்ட  எல்லாப் பகுதிகளிலும் ஏதோ ஒரு வடிவில் எள்ளைப் பயன்படுத்துகிறோம். நம்ம ஊரில் எள்ளுருண்டை பிரசித்தம். உணவுடன் சேர்த்து உண்ணும் எள்ளுப்பொடியும் பல இல்லங்களில் இருக்கும். எள்ளுருண்டை ஏதோ பெரிய மாபெரும் வித்தை என்று எப்பொழுதும் எனக்கு ஒரு நினைப்பு இருந்தது.எனக்கு அது பிடிக்கும், என் இளைய மகனுக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் எப்படி செய்வதென்று தெரியாமல் இருந்தது. ஒருநாள் என் தோழியின் அம்மாவிடம் நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். மிகவும் சுலபமாக இருந்தது. எள்ளை வறுக்கும் பொழுது மட்டும் கொஞ்சம் கருக விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், படபடவென்று வெடிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவேண்டும். பிறகு வெல்லத்தைப் பொடித்து இரண்டையும் ஒன்றாக மீண்டும் பொடித்து இறுக்கமாக கையால் உருட்டிப் பிடித்தால்,அதுதான் எள்ளுருண்டை! நான் கண் மருத்துவத்திற்கு பிரத்தியேகமாக படித்துக்கொண்டிருந்த பொழுது, உடன் படித்த தோழி ஒருவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர், விடுமுறைக்குச் சென்று திரும்பும் பொழுது அவர் அம்மா பிடித்துக் கொடுத்த இனிப்பு உருண்டைகள் எடுத்து வந்திருந்தார். எள்ளுருண்டை என்பத

நகரும் 🐌 நத்தை

நான் மூன்றாவது படிக்கும் காலத்தில் இருந்து ஏழாவது வரை கோவை விவசாயக் கல்லூரி குவாட்டர்ஸில் குடியிருந்தோம். ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய சிகப்பு கலர் பெரிய பெரிய வீடுகள் அவை. சுற்றிலும் ஏக்கரா கணக்கில் காடுகள் இருக்கும் நிறைய மரம் செடி கொடிகளுடன். மரங்களில் ஒன்றில் ஊஞ்சல் கட்டி வைத்துவிடுவோம், விடுமுறையின்போது என்னை ஒத்த என் சொந்தக்காரர்கள் (கசின்ஸ்) வரும்பொழுது அந்த ஊஞ்சலில் மணிக்கணக்கில் ஆடுவோம், ஒருவர் மாற்றி ஒருவராக. அலுக்கவே அலுக்காத விளையாட்டு ஊஞ்சல், அதுவும் மரத்தில் கட்டி வெளியில் ஆடும் பொழுது. வீட்டுக்குள் இருக்கும் ஊஞ்சலை விட வெளியில் காற்றிலாடும் ஊஞ்சலே மகிழ்ச்சி அதிகம். ஊஞ்சல் ஆட்டத்திற்குப் பிறகு அங்குமிங்கும் நாங்கள் ஓடியாடி விளையாடுவோம், அல்லது மண்ணில் வீடு கட்டி விளையாடுவோம். இன்னொரு மிக விருப்பமான விளையாட்டு 'கில்லித்தாண்டு' என்பது, ஒரு மினி கிரிக்கெட் போல. மழைக்காலம் முடிந்தவுடன் நிறைய நத்தைகள் வரும், அங்குமிங்கும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் அவற்றைத் தொட்டால் பட்டென்று தலையை உள்ளிழுத்துக் கொள்ளும், அதை பார்ப்பதில் எங்களுக்கு ஒரு ஆர்வம். அடிக்கடி இதை ச

🍅🍆🥔🌰

🍆 🍅 🥔🌰 தினமும் இட்லி தேங்காய் சட்னி ? வெறுக்குது எனக்கு வேண்டாம் போங்க, சொன்ன மனைவியைப் பார்த்த மணாளன் சட்டெனச் சென்றான் சமையல் அறைக்குள்... அடுப்பில் நீரை ஏற்றி உருளைக்கிழங்கை போட்டு, கத்தரிக்காயும் மிளகாயும் அரிந்து வைத்த தக்காளி, அனைத்தும்  போட்டு நீரில் கொதிக்க விட்டான் சில நேரம். கசியக் கசிய வெந்ததும் கடுகு பருப்பு சீரகம், வெட்டிப்போட்ட வெங்காயம் தாளித்துள்ளே போட்டு, மஞ்சத்தூளும் உப்புமிட்டு மீண்டும் ஒருமுறை கொதிக்க விட்டான். வெந்த காயை மத்தில் கடைந்து இட்டிலி இரண்டு தட்டில் வைத்து, பக்கம் வைத்தான்  தளதளகொத்ஸு தளதளகொத்ஸின் தலையின் மேலே நல்லெண்ணெய் . ஆவல் முகத்தில்  மின்ன அவளிடம் சென்றான் மெல்ல, தயங்கித் தயங்கி தட்டை நீட்டி 'எப்படி இருக்கு சொல்லு குட்டி' கணவன் அளித்த சிற்றுண்டி- எடுத்து வாயில் போட்டதும், சலித்த பாவம் மாறி சிரிப்பில் மலர்ந்ததந்த முகம் ! பிகு: கொங்கு நாட்டில் கொத்ஸின் பெயர் கத்தரிக்கா பஜ்ஜி! 👇🏼 எங்கள் வீட்டில்எப்பொழுதும் இட்லி என்றால் தேங்காய் சட்னி தான் எனக்கு இன்றுவரை அது அலுத்ததே கிடையாது. ஆனால் சிற

ஆணும் பெண்ணும்

ஆணும் பெண்ணும் ஆங்கில அறிஞர் யாரோஒருவர், என்றோ எழுதிய வாக்கென்பது, கால்பந்தாகும் ஆணின் நட்பு உதைபடுமே அது அங்குமிங்கும். உருளும் ஓடும் நட்பெனும் பந்து, என்றும் இருக்கும் பந்தெனவே உருட்டவும் ஓட்டவும் ஆண்களுக்கு. கண்ணாடிப் பொம்மையாய்க் கைக்குள் வைத்து, பெண்கள் போற்றும் அருமை நட்பு, ஒரு நொடி கீழே விழுந்தாலும் உடைந்து போகும் அந்நட்பு! மேலே சொன்ன வாக்கில் மெய்யும் கொஞ்சம் உள்ளதென மெல்லப் பட்டது என் மனதில். நெருங்கிய நண்பன், வெறும் நண்பன் பாகுபாடில்லை ஆண்களினிடையே, எல்லா நட்பும் ஏறக்குறைய நல்ல நட்பே என்பார்கள்! நெருங்கிய தோழி அருமைத் தோழி யாராகவே இருந்தாலும், வேறுபாடென்று வந்தாலே முக்கால்வாசி பெண்களின் நட்பு முறிந்து விடும் அக்கணமே! அவனுக்குச் சொன்னாய் எனக்கில்லை, அவனை அழைத்தாய் என்னையில்லை அவனுடன் சென்றாய் என்னுடனில்லை.... என்பது போன்ற சிறு சண்டை ஆண்களிடையே வந்தாலும் நட்பதிருக்கும் அப்படியே. பெண்களிடையே இச்சண்டை, வந்தால் முறியும் அன்றே நட்பு. ஆணின் இந்தப் பெருந்தன்மை, அவரே வளர்த்துக்கொண்டதா? இயற்கை கொடுத்த பரிசளிப்பா? எதுவாய் இருந்தபோதிலும் அவரின் இந்தப

புகையில் தலையூர்

புகையில் தலையூர் இந்தியாவின் முதல்நகரம் டில்லி என்னும் புதுநகரம்! நல்லதொரு தலைநகரம் வேண்டும் என எண்ணி,  ஆங்கிலேயன் அன்றொருநாள் அமைத்த புது டில்லி! டில்லியது போரிலே  விழுந்ததும் எழுந்ததும் பலமுறை, சரித்திரம் படித்ததில் அறிந்ததும் அந்தக்கதை. இன்றது விழுந்தது புகையினுள்ளே, மீண்டெழ முடியுமா தெரியவில்லை🧐 அந்த ஊருத் தலையெழுத்து இன்னொரு பக்கம், நம்மூருத் தலையெழுத்து என்னாகுமோ? அனைத்தூரின் தலையெழுத்தும் மனிதன் கையிலே, அவன் சிந்தை போகும் பாதையிலே ஊரும் போகுமே! வண்டிகளும் வாகனமும் ஆலைகளும், தினம் தினம் கக்கிடுமே புகையைத்தானே! அந்தப் புகையினுள்ளே ஊரது அமிழ்ந்து போகுமே.... அதனாலேயது அழிந்தும் போகுமே! குடும்பமொரு காரென்று இருந்த நிலை மாறி ஆளுக்கொரு காரென்று வந்ததம்மா இன்று! சூழல் என்னும் விழிப்புணர்வு வந்தாலன்றி சூழ்ந்து வந்த புகை இனி போவதெங்கே? 👇🏼 நாங்கள் கோவையில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது ஒவ்வொரு விடுமுறைகாகும் கிராமத்துக்குச் செல்வோம். 20 நாட்கள் 30 நாட்கள் என்று அங்கு இருந்துவிட்டு பிறகு திரும்பவோம். ரொம்ப செழிப்பான கிராமங்கள் என்று சொல்லமுடியாது

எட்டப் பார்வை

எந்த விஷயத்தைப் பற்றியுமே அதனுள்ளே இருப்பவர்களை விட  தூர நின்று பார்ப்பவர்களுக்கு ஒரு சரியான பிடிப்பு கிடைக்கும். இது கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே தெரிந்த ஒருவிஷயம் என்றாலும் பல நேரங்களில் இதை நாம் மறந்து விடுகிறோம். வாழ்வின் அன்றாட சச்சரவுகளில் நாம்  அமிழ்ந்து போய் இருக்கும்பொழுது மனதில் குழப்பம் இருந்தாலும் அதை எப்படி தீர்ப்பது என்று புரியாத மனநிலையில் தான் இருப்போம். இதுபோன்ற சூழல்களில் நாம் கொஞ்சம் முயற்சித்து மனதளவில் தூர நின்று நோக்கும் பொழுது ஒரு தெளிவான பார்வையும் தீர்க்கமான முடிவும் கிடைக்கும்.  எட்டப் பார்வை என்பது ஒரு மனநிலை தான்..... சுற்றி நடக்கும் நிகழ்வுகளும், உள்ளே நடக்கும் நிகழ்வுகளும் அப்படியே அது அதன்படிதான் நடக்கின்றன,ஆனால் நாம் அவற்றைப் பார்க்கும் பார்வை.... கொஞ்சம் விலகிப் போய் பார்க்கிறோம் அவ்வளவே. இப்படி ஒரு மன நிலையை நாம் பயிற்சி செய்து வரவழைத்துக் கொண்டோம் என்றால் வாழ்க்கை இன்னும் சுலபமாகவும் இன்னும் கொஞ்சம் நிம்மதியாகவும் ஆகிவிடும். இதை நான் பலமுறை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். 👇 தூரப் பார்வை ஆடியும் ஓடியும் ஆடும் ஆட்டம் காலும் கையும் என்ன ஆகு

வெட்டும் நேரம் வளரும் நேரம்

நகரங்கள் வளர வளர சாலை விரிவாக்கங்களும் நடக்கின்றன. அதில் நாமெடுக்கும் முதலடி மரங்களை வெட்டுவது. நான் என் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது கோவையில் . தற்சமயம் திருப்பூரில். நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில், கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் துடியலூர் அருகில் குடியிருந்த எங்கள் சித்தியின் இல்லத்துக்கு அடிக்கடி செல்வோம். பெரும்பாலும் பஸ்ஸில் கூட்டம் இருக்காது. ரோட்டில் இருபுறமும் அடர்த்தியான புளிய மரங்கள் இருக்கும். பஸ் பயணத்தின் அலுப்பே இல்லாமல் அன்றலர்ந்த மலர்கள் போல போய் இறங்குவோம். இன்று அந்த ரோட்டில் போனால் மரங்களும் இல்லை, மரத்தை வெட்டியதனால் போக்குவரத்து நெரிசலும் பெரிதாகக் குறையவில்லை, வெகு நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. ஏதோ ஒரு வெளிநாட்டில் மரங்களை வெட்டாமல் சாலை அகலப்படுத்தும் வேலை நடக்கிறது என்று வலைத்தளத்தில் பார்த்தேன். 'மனமிருந்தால் வழியுண்டு' நமக்கு அதைப்போல் செய்ய மனமில்லை என்று தோன்றுகிறது. சமீபத்தில் திருப்பூரில் தாராபுரம் ரோட்டில் கிட்டத்தட்ட 5 அடி விட்டமுள்ள மரங்கள் பலதை வெட்டினார்கள். சாய்ந்து கிடந்த அந்த மரங்களைப் பார்த்தா

வாசலில் மண்புழு

வாசலில் மண்புழு பருவ மழை காலத்தில், புறநகர் வீட்டு வாசலில் நாட்கணக்கில் ஒருமுறை நில்லாமல் பெய்த மழை! மூன்றாம் நாள் மாலை மழை விட்ட வேளை, முன்வாசல்  அங்குமிங்கும், மண்புழுக்கள் கண்டோமெங்கும்! காணக்கிடைக்கா அதிசயம் கண்டதிங்கு நகரத்தில் வாசலிலே மண்புழுக்கள்!? மகனும் அதைப் பார்த்தான் விளக்கம் ஒன்று கூறினான், மழை வெள்ள மண்ணிலே மூச்சடைத்து மண் புழு வந்தது வெளியே வீட்டு வாசல் மேலே! வாசல் வாசம் ஆகா மண்ணில் வசிக்கும் நல்லுயிற்கு, வாசல் காய்ந்தால் போய்விடும் சுவாசம் அந்தப் புழுவிற்கு. மெல்லப் பிடித்தோம் ஒவ்வொன்றாய், மீண்டும் விட்டோம் மண்ணின் மேலே, புழுவின் உயிர்போகாதிருக்க! என்னது நகரில் மண்புழு! எப்படி இந்த அதிசயம்? சிந்தனை ஓடிய மனதில் புரிந்தது காரணம் மெல்ல, விவசாயமில்லா நகரில், மருந்தடிக்க மண்ணில், யாரும் இல்லை என்று. மருந்தடிக்கா மண்ணிலே வாழ வந்த மண்புழுவே! காரணம் எதுவென்றாலுமே, கண்டோம் உனையது மகிழ்ச்சியே! 👇🏼 எனக்கு ஒரு பத்து வயது இருக்கும் போது மண் புழு பரிச்சயம் ஆனது. நாங்கள் அப்பொழுது தந்தையார் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயக்கல்லூரி கு

காப்பி காஃபி

காபி குடிப்பதை விட குடிக்கப் போறோம் என்கிற நினைப்பே ஒரு சந்தோஷம். விடுமுறை மாதிரி ..... விடுமுறையை விட, விடுமுறை போகப் போகிறோம் என்கிற சந்தோஷம் தான் ஜாஸ்தி. காலையில் எந்திரிச்ச உடனே ஒரு காபி, அதுக்கு அப்புறம் எப்பத் தலைவலி வந்தாலும் ஒரு காபி. நான் காபி நல்லாப் போடுவேன். பில்டர் காபியும் சரி... ஒரு சாதா காபி, பட்டிக்காட்டுக் காபின்னு நான் சொல்லுவேன்... அந்த காபியும் சரி நல்லாப் போடுவேன். எங்க வீட்டிலேயும், சொந்தக்காரங்க வட்டாரத்திலும்  'அவிக' காபின்னா போதும், குடிக்காதவங்க கூட குடிப்பாங்க! நல்லபில்டர் காபி அப்படின்னா, அப்ப கறந்த பாலைக் காய்ச்சி, பில்டர்ல புதுசா அடர்த்தியா டிகாக்ஷன் இறக்கி, பொங்கற பால்ல டிகாக்ஷனை சொட்டு சொட்டாக விட்டு சர்க்கரையைக் கலந்து சுடச் சுடக் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கனும். அல்லது டிகாக்ஷன் முதல்ல எடுத்து அதுக்குள்ள பொங்குற பால  ஊற்றியும் கலந்துக்கலாம். இதில் முக்கியமானது என்னன்னா தூள் நல்லா இருக்கணும், சிக்கரி ஜாஸ்தி இருக்கவே கூடாது. அதுக்கப்புறம் பால் அப்ப கறந்த பாலா இருக்கணும். மத்தபடி வேற எத்தனையோ வகை இருக்கு, காபி போடறதுல.... சும்மா தண்ணீ

கண்ணாடிக் கோப்பை

சுத்தமாக க் கழுவிக் கவிழ்த்து வைத்தால் கண்ணாடித் தம்ளரை போல தெளிவும் அழகும் வேறு எந்த தம்ளரிலும் இருக்காது. அதேபோல்தான் கண்ணாடிப் பாத்திரங்களும். அடிக்கடி குட்டி சைஸ், சின்ன சைஸ் முதல்கொண்டு பெரிய சைஸ் வரை கண்ணாடித் தம்ளர்கள் மற்றும் கோப்பைகள் நான் வாங்கி வைத்துக்கொள்வேன். ஒரு மூட் வரும்பொழுது கொஞ்சமாக டீ அருந்த, உள்ளதில் சின்ன சைஸ் தம்ளரில் ஊற்றிக் குடிப்பேன்...... ஸ்டீல் தம்ளருக்கும் கண்ணாடி தம்ளருக்குமிடையே சுவையே சற்று வேறாக இருக்கும். கூடவே கண்ணாடிக் கோப்பையை எடுக்கும் பொழுதும் வைக்கும் பொழுதும் உண்டாகும் கிண்கிணிசத்தம் ஒரு தனி இனிமை. பல டீக்கடைகளில் இன்னும் கண்ணாடி தம்ளர்களில் தேநீர் கொடுக்கிறார்கள். அந்தக் காலத்தின் சிங்கிள் டீ பற்றி அடிக்கடி புத்தகங்களில் படித்திருக்கிறேன். சிறுவயதில் கஷ்டப்படும்போது சிங்கிள் டீயும் பன்னும் அருந்தி வயிற்றைக் கழுவினோம் என்று பலர் தங்கள் பால்ய அனுபவங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அந்தச் சிங்கிள் டீ என்பது அரை டீ என்று என் திருமணத்திற்கு பிறகுதான் எனக்குத் தெரிந்தது, என் கணவர் கூறினார் அதைப்பற்றி........அதாவது பாதி டீ! அவர் கல்ல

தன்னிறைவு

இயற்கையான ஈடுபாடு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் இருக்கும். சில நாட்கள் முன்பு வரை எனக்கு என்றுமே அந்த ஈடுபாடு என்னுடைய கல்வி சம்பந்தமாகத் தான் இருந்தது. பள்ளியில் படிக்கும் பொழுது எப்படியாவது மருத்துவராக விட வேண்டும் என்ற அவா மிகுந்திருந்தது. சரியாக நாங்கள் பியூசி முடிக்கும் பொழுது அந்த  வருடம்,நாங்கள் பியூஸியில் வாங்கிய மார்க்கை வைத்தே எம்பிபிஎஸ் சீட் களெல்லாம் கொடுக்கப்பட்டன. நான் எம்பிபிஎஸை என் மனதில் வைத்தே நல்ல மார்க் வாங்கி இருந்தேன் எனக்கு மிக சுலபமாக அட்மிஷன் கிடைத்தது. ஆனால் எனக்கு 'அபஸெஸ்ஸிவ் நியூரோஸிஸ்'எனப்படும் ஒருவிதமான மனப்பிரச்சனையினால் முதல் வருடத்திற்குப் பிறகு படிப்பு ஒரு வருடம் தாமதமாகியது. இருந்தும் அடுத்த வருடம் மீண்டும் சேர்ந்து படித்து முடித்துவிட்டேன். முடித்தவுடன் திருமணம் குழந்தைகள்...... பிறகு மதுரையில் பிஎச்டி சேர்ந்தார் என் கணவர். நானும் ஒரு பெரிய கண் மருத்துவமனை மற்றும் நிறுவனத்தில் சேர்ந்து கண் மருத்துவத்தில் டிப்ளமா வாங்கினேன்.... அதற்கும் மேலே டிஎன்பி என்ற மேற்படிப்பு இருந்தது. எனக்கு எப்படியாவது அந்த டிகிரி வாங்க வேண்ட

திருமணம்

திருமணம் 😍🤩 இருமனம் கலந்து பின் வரும் திருமணம் ... அவ்விரு மனங்கள் ஒரு மனமாகி, அவ்வொரு மனத்தின் எண்ணம் போலவும், நல்லறத்துடனும், இல்லறம் நடத்த ஒரு மனதுடன் வரைந்து வந்த  ஒப்பந்தம். அந்தத் திருமணவிழாவினிலே அவ்விரு மனத்துடன் வேறு எம்மனமும், இருக்கத் தேவை இருக்கா? இருமனம் சேர்ந்து இருக்கென்றால், கைபேசி தொலைபேசி பல பேசியுடனே ஊடகமென்றும் இத்தனை இருக்க புத்தகம் ஒத்த அழைப்பிதழெதற்கு? மாநாடொத்த கூட்டம் சூழ தெருவைச் சேரும் ஊர்திகளும் வீணாய் வெளியே வீசிக் கொட்டும் அளவில்லாத உணவுப்பொருளும், நினைக்கும் நெஞ்சம் பதறும் நெகிழித் தண்ணீர் குப்பிகளும்............ புதிய வாழ்வின்  முதல் அடியே பூமித்தாயின் நெஞ்சில் அடிப்பது நலமென்று கூறல் எங்கனம்? சுற்றுச்சூழல் கெட்டு, ஆட்டம் கட்டுது அடித்தளம் - பூமித்தாயின் அடித்தளம்.. அடித்தளத்தை நிலைநிறுத்த புத்தக அழைப்பைப் புறக்கணித்து பசுமைவுலகம் படைக்க வாரும் புத்தம் புதிய ஜோடிக் கண்களே! 🚴 👇🏼 கலாச்சாரம் சம்பிரதாயம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சம்பிரதாயத்தை விட்டு விலகி வெறும் ஆடம்பரம் ஆகிவிட்ட பல நிகழ்ச்சிகளில்

துரித உணவு

எல்லா இந்தியர்களையும் போல, கிட்டத்தட்ட எல்லா மனிதர்களையும் என்று சொல்லலாம், எனக்கும் தோசை அதுவும் ரோஸ்ட் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். என் மூத்த மகன் என் வயிற்றில் இருந்த பொழுது எனக்கு கிட்டத்தட்ட தினமும் ரோஸ்ட் தோசை சாப்பிட வேண்டுமென்ற அளவில்லாத ஆசை, வெறி என்று சொல்லலாம் இருந்துகொண்டே இருக்கும். நாங்கள் அப்பொழுது பம்பாயில் இருந்தோம், ஒரு சிறிய அறையில் குடியிருந்தோம். என் கணவர் பிஎச்டி படித்துக் கொண்டிருந்தார். நான் அப்பொழுதுதான் எம்பிபிஎஸ் முடித்து, பயிற்சி மருத்துவராக மிகவும் சிரமப்பட்டு பம்பாய்க்கு ட்ரான்ஸ்பர் வாங்கி சென்றிருந்தேன். என் கணவர்தான் அலை அலை என்று அலைந்து ட்ரான்ஸ்ஃபர் வாங்கினார். அடிக்கடி மாவரைத்து தோசை சுட முடியவில்லை அந்த அறையில்... அப்படியே சுட்டாலும் அது ரோஸ்ட் போல இருக்காது.... எனக்கு ஹோட்டலில் வாங்கி கொடுக்க இவருக்குப் பிரியமில்லை, ஏதாவது தொற்று வந்துவிடும் என்று கூறுவார். அது சாக்குப்போக்கு என்ற சந்தேகம் இன்றுவரை எனக்கு இருக்கிறது- ஏனென்றால் இவருக்கு அப்பொழுதெல்லாம் ஹோட்டலில் உண்ணுவது பிடிக்காது. அன்று பிடித்த தோசை பைத்தியம் இன்றுவரை என்னை விடவ

துவாரகையும் உஷையும்

துவாரகையும் உஷையும் துவாரகா செல்லலாம் உணவருந்தி வரலாம், தோழியரே வாருங்கள் என்றழைத்தார் எங்களை, உஷா என்ற பெண்மணி கேரளத்துப் பைங்கிளி! சைவமென்ன அசைவமென்ன அனைத்துமிருந்தது அங்கே, அன்பைக் கூடக் கலந்து, அருமையாகக் கொடுத்தாள்   தோழி எங்கள் உஷா! வயிறு முட்டத் தின்று விட்டு வசதியாகச் சாய்ந்தோம் அரைத்தூக்க நிலையில் அழகாகக் கனவுலகம் சென்றுவிட எண்ணி.... உணவெல்லாம் செரிமானம் ஆக வேண்டும் சரியாக, போகலாமே நீச்சலுக்கு வாருங்கள் பெண்களே என்றழைத்தார் தோழியவர்! அறுபதான வயதையும் பெருத்து விட்ட உடம்பையும், எண்ணி எண்ணித் தயங்கினோம் எங்களிலே சிலர், தயக்கமென்ன பெண்களே குளமிருக்கு மாடியில், யாரும் பார்க்க முடியாது விரைந்து நீங்கள் வாருங்கள் விளித்தார் எங்கள் தோழி! இறங்கினோம் நாங்கள்  உறுதியான நால்வர். குளமதைத் தொட்டதும் தண்ணீர் மேல் பட்டதும், கனத்திருந்த மேனியது காற்றாக மாறியது, அறுபதென்ற வயது இருபதெனத் தோன்றியது! காற்றான மேனியது நீரில் ஆடியதை, கண்திறந்து பார்க்காமல் செவிகொண்டு கேட்டால், சிற்றிளம் கன்னியர் சிலர் குளிக்கின்றார் குளத்திலே, என்றெண்ணி இருப்பார், யார் அங்கே இ

எளியோரும் வலியோரும்

மனித சமுதாயத்தில் நீதி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி கிடைப்பதில்லை சட்டப் புத்தகங்கள் என்ன சொன்னாலும் நடைமுறையில் அது  நடப்பதும் இல்லை. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது காலங்காலமாக இருக்கின்ற விதி. அதேபோல் செல்வந்தருக்கும் செல்வாக்கு உள்ளோருக்கும், வேறு நீதி, ஏழைக்கும் வறியோர்க்கும், வேறு நீதி என்பதும் நாம் அனைவரும் அறிந்தது தான். இதில் இன்னொரு பரிமாணம் என்னவென்றால் ஒரு பெண்ணே கொஞ்சம் எளியவராகவும் இருந்து விட்டால் கண்டிப்பாக அவரையும் அவர் சொல்லும் குறைகளையும்,கேட்க ஒரு செவி கூட கிடைக்காது. கேட்டால்தானே நீதி கிடைக்கும்? "என்ன தைரியம், இவ்வளவு தாமதமாகக் குற்றம் சாட்டுகிறாய்? நீ  தவறு செய்யவில்லையா? உனக்கு ஒரு அவமானம் நேர்ந்திருந்தால், அதற்கு நீ இடம் கொடுத்ததால் தான் அது நேர்ந்தது.... அல்லது நீயே கூட குற்றவாளியாக இருக்கலாம்!" இதுபோல சரமாரியாக சற்றே திரித்துக் கூறப்படும் ஏச்சுப்பேச்சுக்கள் தான் வரும். குறைந்தபட்சம் இரண்டு பக்கமும் ஒரு விசாரணை நடந்திருந்தால் பரவாயில்லை. எதுவுமே இல்லாமல், தனக்கு நேர்ந்த அநீதியைப் பற்றிக் கூறுபவரை, அவரே குற்றவாளி என்பத

சிந்தனையில் சுயம்

சிந்தனையில் சுயம் கல் என்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன். யாரோ ஒருவர் சொன்னாராம் வேதம் என்று நினைத்தாளாம். ஊரும் அதையே நினைத்ததுவாம் கணவன் ஒருநாள் மாண்டானாம் அவன் தீயில் அவளும் இறந்தாளாம். கல்லும் புல்லும் துணை கொண்டு வாழ்க்கை நடத்த இயலாது என்ற ஞானம் இருந்திருந்தால், கொஞ்சம் சிந்தனை செய்திருந்தால், கல் போனாலும் புல் போனாலும் அவளது வாழ்க்கை இருக்கிங்கே, வாழ்ந்து தானதை பார்க்கட்டுமே என்றும் ஊரும் விட்டிருக்கும் அவளும் வாழ்ந்து பார்த்திருப்பாள். வாழ்வின் குறியே பணம் என்பார் பள்ளிக் கல்வியும் அதற்கென்பார் பெரியோர் சொன்னால் கேளென்பார் சொன்னபடி நடவென்பார்.. இவர் ஏதோ சொல்வார் அவர் ஏதோ சொல்வார் ஆகையினாலே திருமணஞ்செய், ஊர் என்ன சொல்லும் நாடென்ன சொல்லும் அதனால் குழந்தை பெற்றுவிடு இதுவே நமக்கறிவுரையாகும்.. யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் மனம் என்ன சொல்லுது கேள் கண்ணே உன் மனம் என்ன சொல்லுது கேள் கண்ணே! சிந்தனை செய்து பார் கண்ணே சுயமாய் சிந்தனை செய்து பார் கண்ணே! 👇🏼 நாலு பேர் என்ன சொல்லுவாங்க.. இதுக்காகத்தான் பெரியவங்க அன்னைக்கு சொல்ல

சாதனையும் செலவும்

பொதுவாக வாழ்வில் பல பேருக்கு எதாவது கனவு இருக்கும் .... எனக்கு மருத்துவராக வேண்டும் என்பது சிறுவயது கனவு. கிட்டத்தட்ட வேறு எந்த நினைவும் இல்லை....அது ஒன்றே என் எண்ணங்களை ஆக்கிரமித்து இருந்தது. எங்கள் காலத்தில் பிளஸ்டூ இல்லை. பள்ளியில் 11 வருடங்கள் முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்து பியூசி என்று ஒருவருடம் படிக்க வேண்டும்.. பியூசியில்  வாங்கும் மார்க்கை வைத்துத்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். இடம் கிடைத்து கல்லூரியில் சேர்ந்து ஆயிற்று... ஒரு வருடம் ஆன பிறகு என்னால் படிப்பை தொடர முடியவில்லை.... ஒருமனதாக கவனத்தை செலுத்தி படிக்க முடியாத காரணத்தால். பிறகு அதற்கு வைத்தியம் பார்த்து மறுவருடம் சேர்ந்து படித்து முடித்தேன். அதன்பிறகு கண் சிறப்பு படிப்புக்காக  சேர்ந்து படித்துக் கொண்டிருந்த பொழுது DNB என்ற உயர் படிப்பு பட்டம் வாங்க வேண்டும் என்பது ஒரு தீராத ஆசையாக இருந்தது. மூன்று முறை அந்த தேர்வில் தேற வில்லை..... விடாப்பிடியாக படித்து முடித்துத் தேறினேன். அந்த DNB  தேர்வு முடிவுகள் அறிந்து நான் பாஸ் ஆகி இருந்த விஷயம் தெரிந்தவுடன் என் மனதில் படர்ந்த ஒரு திருப்தி

சுண்டைக்காய்

சிறிது காலம் முன்பு கோவையில் என் தாய் எனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார்கள்.... அதில் முன்னும் பின்னும் சிறிது இடம் இருக்கும் செடிகொடி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். நான் திருப்பூரில் இருந்து அவ்வப்பொழுது சென்று அந்த வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்து முன்னும் பின்னும் இரண்டு மூன்று மரங்களும் செடியும் நட்டு இருக்கிறேன் இதில் வேலையெல்லாம் முக்கால்வாசி என் மகன் தான் செய்வான்... ஒரு மூலையில் பார்த்தால் நான் வைக்காத ஒரு செடி தளதளவென்று வளர்ந்து நின்றது, மிகவும் சின்னது ஒரு அரை அடி உயரம் தான் இருக்கும்.... நகரத்தில் வளர்ந்த எனக்கு அது என்ன செடி என்று தெரியவில்லை யோசித்துக் கொண்டே நின்றேன் சம்பந்தி அம்மா வந்தார்கள், இது என்ன என்று கேட்டேன் சுண்டைக்காய் செடி என்று உறுதியாகச் சொன்னார்கள். எனக்கு ஒரே மகிழ்ச்சி பரவாயில்லையே வீட்டிலேயே சுண்டைக்காய் எடுக்கலாம் என்று. எனக்குத் தெரியவில்லை அப்பொழுது, சுண்டைக்காய் வெகு சுலபமாய் எங்குவேண்டுமானாலும் வளரும் என்று...... இந்த செடி இருந்த இடம் வாகாக இல்லை என்று அதை பிடுங்கி வேறு இடத்தில் நட்டோம். சிறிது நாட்கள் கழித்து அங்கு வந்த சம்பந்தி அம்மா

ஆடை

ஆடை பட்டுப்பூச்சி முட்டையிட்டு வெளியில் வந்த பட்டுப்புழுவும் - முப்பது நாட்கள் இலையைத் தின்று, மீண்டும் மீண்டும் இலையைத் தின்று , கூட்டுப்புழுவாய் மாறும் அன்று, பட்டுப்புழுவின் வாயில், சுரக்கும் நூலாம் ஆயிரம் அடி, தன்னைத் தானே சுற்றிச் சுற்றி ஓடி ஓடி..... ஓடி ஓடி..... மூன்றே நாளில் கட்டிக்கொள்ளும் கூட்டுப் புழுவாய்த் தன் கூட்டை! தானே பின்னியக் கூட்டுக்குள்ளே  உணவில்லாமல் அந்தப்புழுவும்   இறக்கை உள்ள பூச்சியென்று மாறிப்பறக்க இருபது நாட்கள்! கூட்டை பிரித்துப் பட்டுப்பூச்சி பறந்து பறந்து வெளியே சென்று, தேடிக்கொள்ளும் துணையொன்று, தொடங்கும் அழகாய் தன் வாழ்வை..  ஆனால் மனிதன் விடவில்லை, அங்கும் கண்டான் சுயநலமே ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே, பட்டுப்பூச்சி நானேயென்று மாறிப் பறக்கக் காத்திருக்கும் கூட்டுப்புழுவின் வீட்டுக்கூட்டை, கொதிக்கும் நீரில் வீசிப்போட்டு உள்ளே இருக்கும் புழுவைக்கொன்று நூலைத் தானே வெளியே இழுத்து நெய்து கொண்டான் வேட்டி சேலை! வேட்டி சேலை பாவாடை பட்டுதனிலே செய்ததென்று ஆடுகிறோமே நாமெல்லாம், புழுவைக் கொன்று, அதன் வீட்டைப் பிரித்து எடுத்த நூலதுவ

சுயம்பு வேம்பு

மனிதரில் பலவகை இருப்பதுபோல் மரங்களிலும் உண்டு எனத் தோன்றும் சில நேரங்களில். பனைமரம் தென்னைமரம் வாழைமரம்... என்ற பி.சுசிலாவின் பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது..... ஆனால் அந்தப் பாடலும் மனிதன் தேவையை சுற்றியே மூன்று மரங்களைக் கம்பேர் செய்து பாடுவதால்  அப்பாடல் ஒரு குறுகிய மனப்பான்மையை கான்பிப்பதாகத் தோன்றுகிறது. வேப்பமரம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு 'சுயநலமில்லாத' மரம்.... எந்த உதவியும் கேட்காது அதுபாட்டுக்கு வளரும். நல்ல குளிர்ச்சியான நிழல் கொடுக்கும்.... சீசனில் அந்த வேப்பம்பூ தரையில் உதிர்ந்து கிடந்தால் கம்மென்று ஒரு அருமையான மணம் வீசும்... வெயில் காலங்களில் வேப்ப மர நிழல் போல் சொர்க்கம் எதுவும் கிடையாது. சிறுவயதில் வேப்பம் பழங்களைப் பொறுக்கி தின்றது லேசாக ஞாபகம் வருகிறது.... நல்ல கசப்புடன் சிறிதே இனிப்பு கலந்திருக்கும். என் பசங்களுக்கு அவர்கள் விளையாடிக் கீழே விழுந்து அடிபட்டால் வேப்பங்கொழுந்தை மஞ்சள் தூளுடன் கலந்து அரைத்து பூசி இருக்கிறேன். விரைவில் புண் ஆறிவிடும். வேப்பம்பூ பச்சடியும் வடகமும் செய்ய தெரியாது, இனிமேல் பழகி செய்யலாம் என்று இருக்கிறேன். இறுதியில்