வெட்டும் நேரம் வளரும் நேரம்

நகரங்கள் வளர வளர சாலை விரிவாக்கங்களும் நடக்கின்றன.
அதில் நாமெடுக்கும் முதலடி மரங்களை வெட்டுவது.

நான் என் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தது கோவையில் .
தற்சமயம் திருப்பூரில்.

நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில், கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் துடியலூர் அருகில் குடியிருந்த எங்கள் சித்தியின் இல்லத்துக்கு அடிக்கடி செல்வோம்.

பெரும்பாலும் பஸ்ஸில் கூட்டம் இருக்காது.
ரோட்டில் இருபுறமும் அடர்த்தியான புளிய மரங்கள் இருக்கும்.
பஸ் பயணத்தின் அலுப்பே இல்லாமல் அன்றலர்ந்த மலர்கள் போல போய் இறங்குவோம்.
இன்று அந்த ரோட்டில் போனால் மரங்களும் இல்லை, மரத்தை வெட்டியதனால் போக்குவரத்து நெரிசலும் பெரிதாகக் குறையவில்லை, வெகு நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

ஏதோ ஒரு வெளிநாட்டில் மரங்களை வெட்டாமல் சாலை அகலப்படுத்தும் வேலை நடக்கிறது என்று வலைத்தளத்தில் பார்த்தேன். 'மனமிருந்தால் வழியுண்டு' நமக்கு அதைப்போல் செய்ய மனமில்லை என்று தோன்றுகிறது.

சமீபத்தில் திருப்பூரில் தாராபுரம் ரோட்டில் கிட்டத்தட்ட 5 அடி விட்டமுள்ள மரங்கள் பலதை வெட்டினார்கள். சாய்ந்து கிடந்த அந்த மரங்களைப் பார்த்தால், இரத்தக்கண்ணீர் தான் வடியும். கண்டிப்பாக வேறு நிறைய வழிகள் இருக்கின்றன..... மரங்களை வெட்டாமல் சாலை விரிவாக்கம் செய்வதற்கு.... அந்த வழிகளை ஆராய நமக்கு மனமில்லை.

பெரிய மரங்களைக் கொண்டு போய் வேறு இடத்தில் நடுகிறார்கள் அல்லது நடுவதாக சொல்கிறார்கள். அது எல்லாம் எவ்வளவு தூரம் தழைத்து வரும் என்பது மிகமிக சந்தேகம்.
மேலும் அப்படி கொண்டுபோய் நடும் மரத்தின் வேர்கள் எல்லாம் மிகவும் பலவீனமாக இருக்கும், காற்றடித்தால் சாய்ந்துவிட வாய்ப்பு இருக்கும் என்பது என் எண்ணம். என் எண்ணம் தவறாகவும் இருக்கலாம் தெரியவில்லை.....

இன்னும் சில மேற்கத்திய நாடுகளில் புதியதாக மரம் நட்டு அது ஒரு பத்தடி வளர்ந்த பிறகுதான் பழைய மரத்தை வெட்ட வேண்டும் என்ற சட்டமும் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். வெட்டுவதுதான் வெட்டுகிறார்கள், நம்மூரில் இப்படியாவது செய்தால் கொஞ்சம் நலமாயிருக்கும்.

👇

வெட்டும் நேரம் வளரும் நேரம்

வெட்டென்று வெட்டிவிட்டு,
"விட்டு விடு கவலையை
நட்டு விடுவோம் நாங்களிங்கு புத்தம்புதிய மரந்தனை"
என்றியம்பும் அதிகாரிகளே,
அரசாங்க முதலாளிகளே,

வெட்டும் முன்னே நட்டிருக்க வேண்டுமே?
வண்ணப் புதிய மரங்களே வெட்டும் மரத்தின் அருகிலே?

இருக்கும் மரம் வெட்டி விடத் தேவை சில நொடிகளே,
நட்ட மரம் வளர்ந்து வர
ஆகும் பல ஆண்டுகளே!

மரம் வெட்டும் நல்லவரே!
எங்கெலாம் வெட்டலாம்
என்ற எண்ணம் வந்தவுடன்,  அங்கெல்லாம் நடவேண்டும் புத்தம் புதிய மரங்களை.
பழைய மரம் வெட்டும் பணி பின்னர் பார்க்கலாம் இல்லை விட்டுவிடலாம்🤗!




Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி