புகையில் தலையூர்



புகையில் தலையூர்

இந்தியாவின் முதல்நகரம் டில்லி என்னும் புதுநகரம்!
நல்லதொரு தலைநகரம் வேண்டும் என எண்ணி,  ஆங்கிலேயன் அன்றொருநாள்
அமைத்த புது டில்லி!

டில்லியது போரிலே  விழுந்ததும் எழுந்ததும் பலமுறை,
சரித்திரம் படித்ததில் அறிந்ததும் அந்தக்கதை.
இன்றது விழுந்தது புகையினுள்ளே,
மீண்டெழ முடியுமா தெரியவில்லை🧐

அந்த ஊருத் தலையெழுத்து இன்னொரு பக்கம்,
நம்மூருத் தலையெழுத்து என்னாகுமோ?
அனைத்தூரின் தலையெழுத்தும் மனிதன் கையிலே,
அவன் சிந்தை போகும் பாதையிலே ஊரும் போகுமே!

வண்டிகளும் வாகனமும் ஆலைகளும்,
தினம் தினம் கக்கிடுமே புகையைத்தானே!
அந்தப் புகையினுள்ளே ஊரது அமிழ்ந்து போகுமே....
அதனாலேயது அழிந்தும் போகுமே!

குடும்பமொரு காரென்று இருந்த நிலை மாறி
ஆளுக்கொரு காரென்று வந்ததம்மா இன்று!
சூழல் என்னும் விழிப்புணர்வு வந்தாலன்றி
சூழ்ந்து வந்த புகை இனி போவதெங்கே?



👇🏼
நாங்கள் கோவையில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது ஒவ்வொரு விடுமுறைகாகும் கிராமத்துக்குச் செல்வோம்.
20 நாட்கள் 30 நாட்கள் என்று அங்கு இருந்துவிட்டு பிறகு திரும்பவோம்.
ரொம்ப செழிப்பான கிராமங்கள் என்று சொல்லமுடியாது, வெய்யிலும் நன்றாக அடிக்கும், இருந்தாலும் அங்கு இருக்கும்போது ஆரோக்கியமாக உணர்ந்திருக்கிறேன். அருமையான காற்று, இயற்கையான உணவு, நல்ல விளையாட்டு, தோட்டம் வீடு என்று மாறி மாறி நடை, என்று பொதுவாக வாழ்க்கையே ஒரு ஆரோக்கியமாகவும் கவலையற்ற தாகவும் இருந்தது.

விடுமுறை முடிந்து நாங்கள் பஸ்ஸில் கோவை திரும்புவோம்.
அப்போது திருச்சி ரோட்டில் கோவை நகரம் நுழைவாயில் உள்ளே வரும் போதே எனக்கு தலைவலிக்க ஆரம்பிப்பது போலிருக்கும், மூக்கில் அந்த புகை வாசம் நன்றாகவே இருக்காது....
நான் சொல்வது ஒரு நாற்பத்தைந்து ஐம்பது வருடங்களுக்கு முன்பு.
அப்பொழுதே நகரங்களில் கொஞ்சம் காற்று மாசுபட்டுத் தான் இருந்திருக்கிறது டவுன் பஸ்கள் கார்கள் லாரிகள் விடும் புகையென்று.
பிறகு வீடு வந்து சேர்வதற்குள் அந்த வாசம் பழகி பழைய வாழ்க்கைக்கு மனம் திரும்பி விடும் அடுத்த விடுமுறை வரும்வரை.
பொதுவாக அந்த நாட்களில் எங்கு செல்வது என்றாலும் நடந்து தான் செல்வோம் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் 2 கிலோ மீட்டர் தூரம் என்றாலும் சுலபமாக மறு எண்ணமின்றி நடந்து விடுவோம் அனைவரும். ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஆஸ்பத்திரிக்கு நான் தினமும் நடந்து சென்றுதான் ஊசி போட்டுக்கொண்டு திரும்ப நடந்து வந்து விடுவேன், எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாத பொழுது.

பெரிய போக்குவரத்து நெரிசலும் இருக்காது. அவ்வப்போது வரும் ஒன்றிரண்டு டவுன் பஸ்கள் அல்லது ஏதோ ஒன்றிரண்டு கார்களைத் தவிர.... இரண்டு சக்கர வாகனங்கள் மிகவும் குறைவு தான்.
அன்றிருந்த ஆர்எஸ் புறத்தை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கும் பெரிய பெரிய மரங்கள் அடர்ந்த வீதிகள், அவற்றில் தான் நாங்கள் நடந்து செல்வோம்.

நகரமே என்றாலும் வாகனங்கள் குறைவாய் இருந்தால் அதுவும் ஒரு அருமையான சூழல் தான்.



Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி