சுண்டைக்காய்

சிறிது காலம் முன்பு கோவையில் என் தாய் எனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார்கள்.... அதில் முன்னும் பின்னும் சிறிது இடம் இருக்கும் செடிகொடி வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

நான் திருப்பூரில் இருந்து அவ்வப்பொழுது சென்று அந்த வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்து முன்னும் பின்னும் இரண்டு மூன்று மரங்களும் செடியும் நட்டு இருக்கிறேன் இதில் வேலையெல்லாம் முக்கால்வாசி என் மகன் தான் செய்வான்...

ஒரு மூலையில் பார்த்தால் நான் வைக்காத ஒரு செடி தளதளவென்று வளர்ந்து நின்றது, மிகவும் சின்னது ஒரு அரை அடி உயரம் தான் இருக்கும்....

நகரத்தில் வளர்ந்த எனக்கு அது என்ன செடி என்று தெரியவில்லை யோசித்துக் கொண்டே நின்றேன் சம்பந்தி அம்மா வந்தார்கள், இது என்ன என்று கேட்டேன் சுண்டைக்காய் செடி என்று உறுதியாகச் சொன்னார்கள்.

எனக்கு ஒரே மகிழ்ச்சி பரவாயில்லையே வீட்டிலேயே சுண்டைக்காய் எடுக்கலாம் என்று.
எனக்குத் தெரியவில்லை அப்பொழுது, சுண்டைக்காய் வெகு சுலபமாய் எங்குவேண்டுமானாலும் வளரும் என்று......

இந்த செடி இருந்த இடம் வாகாக இல்லை என்று அதை பிடுங்கி வேறு இடத்தில் நட்டோம்.
சிறிது நாட்கள் கழித்து அங்கு வந்த சம்பந்தி அம்மா அவர்களும் பிடுங்கி வேறு இடத்தில் நட்டார்கள்..

சில வாரங்கள் கழித்து நான் சென்ற பார்த்த போது புதிய இடத்திலும் நன்றாக வேர்விட்டு தளதளவென்று நின்றது அச்செடி.

அச்செடியின் மனவலிமையை நான் வியந்து பார்த்தேன்.

மீண்டும் சில மாதங்கள் கழித்து பார்த்தால் கொத்துக்கொத்தாய் சுண்டைக்காய்.

ஒரு சிறிய கத்தரிக்கோல் வைத்து அவைகளை எல்லாம் வெட்டி எடுத்து குழம்பும் செய்து சுண்டைக்காய் வத்தல் கொஞ்சம் செய்தேன்....
இரண்டுமே அருமையாக இருந்தது.

குழம்பு எப்படி செய்வது என்று சம்பந்தி அம்மா சொன்னார்கள், வத்தல் செய்வது யூடியூபில் பார்த்து கற்றுக் கொண்டேன்.
ஒரு பைசா செலவு செய்யாமல் தானே என் வீட்டில் வந்து வளர்ந்து எனக்கு இத்தனை கொடுத்தது சுண்டைக்காய்ச் செடி!
'The best things in life are very simple' என்று எங்கோ கேட்டது ஞாபகம் வருகிறது.......

செடியை அவ்வப்பொழுது தரித்து விட்டாலும் சில மாதங்களில் மீண்டும் தழைத்து மீண்டும் காய் கொடுக்கிறது 🙏

👇

சுண்டைக்காய்

சின்னதாய் ஒரு வீடு
சீதனமாய்த்  தாய் கொடுத்தாள்
(ஆமாம்,ஆமாம்! இப்பத்தான்)
சுத்தம் செய்கையில் வாசல் ஓரம்
சின்னஞ்சிறிய செடியைக் கண்டேன்
பெரிது பெரிதாய் இலையுடன்...
யோசனையுடன் நான் நின்றேன்...  அங்கே வந்த சம்பந்தி,
சுண்டைக்காய் செடி என்றார்!

அங்கும் இங்கும் மாற்றி நட்டோம்,
நீரும் இல்லை ஒன்றுமில்லை
சளைக்கவில்லை  அருமைச்செடி! இரண்டு முறை கொடுத்தது
பை நிறைய சுண்டைக்காய்!

பச்சைக் காயைத் நீரில் தட்டி
விதைகள் பாதி
வெளியே தள்ளி,
எடுத்துக் கொண்டோம்
காயை உள்ளே!

கடுகு கருவேப்பிலையும்
பொரிந்ததும்,வெந்தயம் சிவந்ததும் வெங்காயமும்,
தட்டிய பூண்டு தக்காளி
காய்ந்து போன மிளகாயும்
மஞ்சத்தூளும் சிறிதே போட்டு,
அனைத்தும் வதக்கி நல்லெண்ணையில்,
தட்டியெடுத்த சுண்டக்காய்
அதையும் போட்டு வதக்கியெடுத்து,
அரைத்த தேங்காய்
கரைத்தப் புளியும்
அதிலே விட்டு,
கொதித்த பின் உப்பு,
சின்னத் துண்டு வெல்லம்
கடைசியாகச் சேர்த்து,
இறக்கி வைப்போம் இந்தக் குழம்பை!

மீதமிருக்கும் சுண்டைக்காய்
வீச வில்லை வெளியே.
புளித்த மோரும் உப்பும் கலந்து காயை அதிலே ஊறவைத்து
சுடு வெயிலில் காயவைத்து
மொறு மொறுவென்று போட்டு வைத்தால்
வேண்டும்பொழுது வறுக்கலாம்,
தயிரும் சோறும் உண்ணும் போது இதையும் சேர்த்துக் கொள்ளலாம்!



Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி