எளியோரும் வலியோரும்

மனித சமுதாயத்தில் நீதி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி கிடைப்பதில்லை சட்டப் புத்தகங்கள் என்ன சொன்னாலும் நடைமுறையில் அது  நடப்பதும் இல்லை.

ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்பது காலங்காலமாக இருக்கின்ற விதி.
அதேபோல் செல்வந்தருக்கும் செல்வாக்கு உள்ளோருக்கும், வேறு நீதி, ஏழைக்கும் வறியோர்க்கும், வேறு நீதி என்பதும் நாம் அனைவரும் அறிந்தது தான்.

இதில் இன்னொரு பரிமாணம் என்னவென்றால் ஒரு பெண்ணே கொஞ்சம் எளியவராகவும் இருந்து விட்டால் கண்டிப்பாக அவரையும் அவர் சொல்லும் குறைகளையும்,கேட்க ஒரு செவி கூட கிடைக்காது.
கேட்டால்தானே நீதி கிடைக்கும்?

"என்ன தைரியம், இவ்வளவு தாமதமாகக் குற்றம் சாட்டுகிறாய்?
நீ  தவறு செய்யவில்லையா?
உனக்கு ஒரு அவமானம் நேர்ந்திருந்தால், அதற்கு நீ இடம் கொடுத்ததால் தான் அது நேர்ந்தது....
அல்லது நீயே கூட குற்றவாளியாக இருக்கலாம்!"

இதுபோல சரமாரியாக சற்றே திரித்துக் கூறப்படும் ஏச்சுப்பேச்சுக்கள் தான் வரும்.

குறைந்தபட்சம் இரண்டு பக்கமும் ஒரு விசாரணை நடந்திருந்தால் பரவாயில்லை.

எதுவுமே இல்லாமல், தனக்கு நேர்ந்த அநீதியைப் பற்றிக் கூறுபவரை, அவரே குற்றவாளி என்பது போல் சில நாட்களில் மாற்றி பேசப்படுகிறது இங்கு.

ஏன் இப்படி நடக்கிறது என்று கொஞ்சம் ஆழமாக சிந்தனை செய்தால்.... எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்,

குற்றம் செய்பவர்களில் பலவகைகள் இருக்கின்றனர்.

யாராயிருந்தாலும் அவ்வப்பொழுது தவறு செய்வது இயற்கை... அது மனிதனின் அடிப்படை குணம்.

ஆனால் தவறு செய்த பிறகு மனிதர்கள் எப்படி நடந்து  கொள்கிறார்கள் என்பதில் வேறுபாடுள்ளது.
ஒரு வகை மனிதர் சரி ஏதோ செய்து விட்டோம் இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி, சில நேரங்களில் மன்னிப்பும் கேட்பார்கள்.

இன்னொரு வகை மனிதர் 'தவறு நான் செய்யவில்லை, நான் உத்தமன் எப்படி என்னை இப்படிக் கூற போயிற்று' என்று சாதிப்பார்கள்.அவர்கள் மனசாட்சிக்கு தெரியும் உண்மை என்னவென்று.....
இருந்தும் தான் நிரபராதி என்று பிறரையும் தன்னையும் நம்ப வைக்க முயற்சி செய்வார்கள்!

இவர்கள் தாங்கள் கூறும் பொய்யை உண்மை என்று நிலைநாட்டுவதற்காக தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துவார்கள்.
எப்பாடுபட்டாவது தான் ஒரு நல்லவர் என்ற உருவகத்தைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள்.
இவரால் காரியமாக வேண்டுபவர்கள், மற்றும் இவரைப்போலவே எண்ணம் உள்ளவர்கள் இவருக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள் இவ்விஷயத்தில்!

இது போன்றவர்களால்தான் குற்றம் இழைக்கப்படுவோர்கு நீதி கிடைப்பதில்லை.

ஒரு கொசுறு விஷயம் என்னவென்றால் இப்படிப் பொய்யை உண்மை என்று  நிலைப்படுத்த முயற்சிப்போர் பற்றி உலகம் நன்றாக அறியும்.....

மன்னிப்பு கேட்போருக்கு இருக்கும் மதிப்பு செய்த குற்றத்தை மறுப்போருக்கு இல்லை என்பது என் கருத்து.

👇

எளியோரும்
வலியோரும்

மகளுக்கிணையான மங்கையைப் பார்த்து கேட்டார் ஒரு பெரிய மனிதர்,
'வருவாயா இல்லை மாட்டாயா?
வந்தாலுன் தொழில் விளங்கும்
வராவிட்டாலுன் கதை முடியும்'
என்ற அருமையான கேள்வி ஒன்றை!

சின்னப் பெண்ணான மங்கையவள்
பிழைப்பில் விழுமே மண்ணென்று
பயத்தில் கொண்டாள் மௌனமன்று.

வருடங்கள் பல சென்று,
பல பெண்கள் இதைப்போன்று
குறை பகரும் நேரமொன்று வந்ததிப்பூவுலகில்.
காலம் கனிந்ததென்று
நினைத்த மங்கையன்று எடுத்துரைத்தாள் தன் கதையை-
முன்பொரு காலத்தில் நடந்த கொடூர கதையை.

உலகம் அனைத்தும்  கேட்டது அவளை,
முன்பே ஏன் நீ சொல்ல வில்லை என்று,
கேட்கவில்லை யாரும் அந்தப் பெரியவரை
ஏன் நீ இப்படி செய்தாய் என்று.

அன்றில்லை என்றால் என்றுமில்லை என்பதென்ன இயற்கை அமைத்த விதியா?
அன்று பயந்தது என்னவோ,
அது நடந்துவிட்டது இன்று,
மங்கையின் பிழைப்பிலே
விழுந்த மண்ணென்று!

எளியோர் நியாயம் என்னவென்றால்,
தவறென்றாலும் இல்லை என்றாலும் தண்டனை மட்டும் நிச்சயமாகும்....
வலியோர் நியாயம் என்னவென்றால்
தவறே அவர் புரிந்திருந்தாலும்
தண்டனை இல்லை கேள்வியும் இல்லை!
சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டு நகைத்தபடி அவர் செல்வார்!
எல்லோருக்கும் ஒரே நியாயம் என்று வருமோ பூமியதில்?

Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓