🍅🍆🥔🌰
🍆 🍅 🥔🌰
தினமும் இட்லி
தேங்காய் சட்னி ?
வெறுக்குது எனக்கு
வேண்டாம் போங்க,
சொன்ன மனைவியைப்
பார்த்த மணாளன்
சட்டெனச் சென்றான்
சமையல் அறைக்குள்...
அடுப்பில் நீரை ஏற்றி
உருளைக்கிழங்கை போட்டு,
கத்தரிக்காயும் மிளகாயும் அரிந்து வைத்த தக்காளி,
அனைத்தும் போட்டு நீரில்
கொதிக்க விட்டான் சில நேரம்.
கசியக் கசிய வெந்ததும்
கடுகு பருப்பு சீரகம்,
வெட்டிப்போட்ட வெங்காயம்
தாளித்துள்ளே போட்டு,
மஞ்சத்தூளும் உப்புமிட்டு
மீண்டும் ஒருமுறை கொதிக்க விட்டான்.
வெந்த காயை மத்தில் கடைந்து
இட்டிலி இரண்டு தட்டில் வைத்து,
பக்கம் வைத்தான் தளதளகொத்ஸு
தளதளகொத்ஸின்
தலையின் மேலே நல்லெண்ணெய் .
ஆவல் முகத்தில் மின்ன
அவளிடம் சென்றான் மெல்ல,
தயங்கித் தயங்கி தட்டை நீட்டி
'எப்படி இருக்கு சொல்லு குட்டி'
கணவன் அளித்த சிற்றுண்டி-
எடுத்து வாயில் போட்டதும்,
சலித்த பாவம் மாறி
சிரிப்பில் மலர்ந்ததந்த முகம் !
பிகு:
கொங்கு நாட்டில்
கொத்ஸின் பெயர்
கத்தரிக்கா பஜ்ஜி!
👇🏼
எங்கள் வீட்டில்எப்பொழுதும் இட்லி
என்றால் தேங்காய் சட்னி தான் எனக்கு இன்றுவரை அது அலுத்ததே கிடையாது.
ஆனால் சிறுவயதில் இட்லியே பிடிக்காது. சில காலத்திற்குப் பிறகு இட்லி மிகவும் பிடித்துப் பழகிவிட்டது. அதுவும் விடுமுறையில் கிராமத்திற்கு ச்சென்றால் தட்டில் துணி வைத்து பெரிது பெரிதாக இட்லி செய்து கொடுப்பார்கள்......அதை மூன்று வேளையும் கொடுத்தால் கூட விரும்பி உண்ணலாம்.
அதிலும் சிவப்புத் தேங்காய் சட்னியுடன் மிகவும் பிடிக்கும்.
ஆனால் திருமணமான பொழுது எனக்கு ஒரு குட்டி அதிர்ச்சி..... என் கணவருக்கு தேங்காய் சட்னி பிடிக்கவே பிடிக்காது. அதுவும் சாதா வெள்ளை தேங்காய் சட்னி சுத்தமாய் பிடிக்காது. அவருக்கு தேங்காய் சட்னி என்றால் அதனுடன் வெங்காயம் தக்காளி போன்றவை வதக்கி மிளகு சீரகம் எல்லாம் போட்டு ஒரு கலவை சட்னி என்றால் சாப்பிடுவார்.
அவரைப் பொறுத்தவரை இட்லிக்கு சாம்பார் அல்லது குழம்பு அந்த மாதிரி ஐட்டங்கள் பிடிக்கும்.
திருமணத்துக்குப் பிறகுதான், எங்கள் ஊரில் கத்திரிக்காய் பஜ்ஜி என்று நாங்கள் கூறும் ஒருவித சட்னி எனக்கு அதிக பரிச்சயமானது..... என் கணவர் மூலமாக. அவருக்கு மிக மிகப் பிடித்த காம்பினேஷன் இட்லி கத்தரிக்காய் பஜ்ஜி. நாளடைவில் எனக்கும் அது பழகி மிகவும் பிடித்து விட்டது.
உணவைப் பொறுத்தவரை நமக்கு பிடித்தவை பிடிக்காதவை எல்லாமே ஒருவித பழக்கத்தில் கூட ஏற்படலாம். சில உணவு வகைகளை உண்டு பழகிவிட்டால் அவை மிகவும் நன்றாயிருக்கும். உதாரணத்திற்கு - கடுகு. ஊறுகாய்க்குள் கடுகை அரைத்து போடுவது நான் கேள்விப்படாத ஒன்று......ஆனால் சமீபத்தில் மாங்காய் ஊறுகாய்க்குள் கடுகை அரைத்து சேர்த்து செய்தேன்..... அதைவிட ருசியான மாங்காய் ஊறுகாய் நான் சாப்பிட்டதே கிடையாது அவ்வளவு மனம்......
Comments
Post a Comment