நகரும் 🐌 நத்தை

நான் மூன்றாவது படிக்கும் காலத்தில் இருந்து ஏழாவது வரை கோவை விவசாயக் கல்லூரி குவாட்டர்ஸில் குடியிருந்தோம்.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய சிகப்பு கலர் பெரிய பெரிய வீடுகள் அவை. சுற்றிலும் ஏக்கரா கணக்கில் காடுகள் இருக்கும் நிறைய மரம் செடி கொடிகளுடன்.
மரங்களில் ஒன்றில் ஊஞ்சல் கட்டி வைத்துவிடுவோம், விடுமுறையின்போது என்னை ஒத்த என் சொந்தக்காரர்கள் (கசின்ஸ்) வரும்பொழுது அந்த ஊஞ்சலில் மணிக்கணக்கில் ஆடுவோம், ஒருவர் மாற்றி ஒருவராக.
அலுக்கவே அலுக்காத விளையாட்டு ஊஞ்சல், அதுவும் மரத்தில் கட்டி வெளியில் ஆடும் பொழுது. வீட்டுக்குள் இருக்கும் ஊஞ்சலை விட வெளியில் காற்றிலாடும் ஊஞ்சலே மகிழ்ச்சி அதிகம்.

ஊஞ்சல் ஆட்டத்திற்குப் பிறகு அங்குமிங்கும் நாங்கள் ஓடியாடி விளையாடுவோம், அல்லது மண்ணில் வீடு கட்டி விளையாடுவோம்.
இன்னொரு மிக விருப்பமான விளையாட்டு 'கில்லித்தாண்டு' என்பது, ஒரு மினி கிரிக்கெட் போல.
மழைக்காலம் முடிந்தவுடன் நிறைய நத்தைகள் வரும், அங்குமிங்கும் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் அவற்றைத் தொட்டால் பட்டென்று தலையை உள்ளிழுத்துக் கொள்ளும், அதை பார்ப்பதில் எங்களுக்கு ஒரு ஆர்வம்.
அடிக்கடி இதை செய்வோம்.  ஒரு சின்ன உயிரான அதைத் துன்புறுத்துகிறோம் என்று யாரும் எங்களுக்கு அறிவுறுத்தவில்லை, எங்களுக்கும் அது தானாகத் தெரியவில்லை. அந்த அளவுதான் எனக்கு அறிவு இருந்திருக்கிறது.......நான் கொஞ்சம் மந்தமான குழந்தையோ என்னவோ தெரியவில்லை.
பிறகு விடுமுறையில் 'கஸின்'களுடன் கிராமத்துக்குச் சென்று ஒரு பதினைந்து நாட்கள் கழித்து திரும்பி வந்தபொழுது பார்த்தால் எல்லாப்பக்கமும் சின்ன சின்ன வெள்ளை காகிதங்கள் நோட்டீஸ் போல் ஒட்டி, செடிகளையும், பூக்களையும், நத்தைகளையும் மற்ற எதையும் தொட வேண்டாம் என்று எழுதி இருந்தது....
பார்த்தவுடன் கொஞ்சம் பயமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
அந்த நோட்டீசை மீறி எதையும் தொடுவதற்கு தயக்கமாக இருந்தது... நாங்கள் தொடவும் இல்லை.
பிறகு தெரிந்தது கீழ் வீட்டில்  புதிதாகக் குடி வந்த குடும்பத்தில் இருந்த ஒரு அண்ணா இதைச் செய்து இருக்கிறார் என்று. அவர் இயற்கை ஆர்வலர்.
அவர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார், நாங்களெல்லாம்  ஐந்தாவது ஆறாவது படிக்கும் பருவம்.

👇
நகரும்  🐌   நத்தை

குழந்தைப் பருவத்தில் குடியிருந்த வீடு,
வீட்டைச் சுற்றி
அடர்ந்த காடு,
கூட்டைத் தூக்கி நகரும் நத்தை
காட்டில் எங்கும் நிறையக் கண்டோம்..

'தொட்டுப்பாரு தலையை
உடனே செல்லும் உள்ளே'-
சொல்லிக் கொடுத்தான் நண்பன்,

தொட்டேன் நத்தையின் தலையை,
உள்ளே சென்றது உடனே  தலை,
மீண்டும் வந்தது வெளியே,
மறுபடி தொட்டேன் விளையாட்டென்று.....

பிறிதொரு நாள் வெளியே பார்த்தால்
பதாகை பறந்தது செடியின் மேலே,
தொடாதே நத்தை என்ற எழுத்துடன்!
பக்கத்து வீட்டில் புதிதாய் வந்த
அண்ணன் செய்த பதாகை அது!

நத்தை தொடும் விளையாட்டை,
விட்டோம் நாங்கள் அன்றுமுதல்,
மனதில் மட்டும் சிறு வருத்தம் அண்ணன் செய்த வேலையினால்!

ஆனால்  உனக்கே நன்றி அண்ணா,
இன்று நானே கூறுகிறேன்,
சரியான பாதை இதுதான் என்று
எனக்கு நீயே காட்டினாய் அன்று!

வீட்டை விட்டு வெளியே,
விளையாட்டென்று வரும்போதெல்லாம், தலையின் மேலொரு அடி  விழுந்தால்
அடியைத் தாங்குமா அந்தத் தலை?
அப்படித்தானே நத்தை தலைக்கும்?🐌

நமக்குத்தானது விளையாட்டு-
நத்தைக்கதுதான்  வாழ்க்கையே! 😧

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

பொன்னாடை துணி

புகைபோக்கி

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅