வாசலில் மண்புழு



வாசலில் மண்புழு

பருவ மழை காலத்தில்,
புறநகர் வீட்டு வாசலில்
நாட்கணக்கில் ஒருமுறை
நில்லாமல் பெய்த மழை!

மூன்றாம் நாள் மாலை
மழை விட்ட வேளை,
முன்வாசல்  அங்குமிங்கும்,
மண்புழுக்கள் கண்டோமெங்கும்!
காணக்கிடைக்கா அதிசயம்
கண்டதிங்கு நகரத்தில் வாசலிலே மண்புழுக்கள்!?

மகனும் அதைப் பார்த்தான் விளக்கம் ஒன்று கூறினான்,
மழை வெள்ள மண்ணிலே
மூச்சடைத்து மண் புழு
வந்தது வெளியே
வீட்டு வாசல் மேலே!

வாசல் வாசம் ஆகா மண்ணில் வசிக்கும் நல்லுயிற்கு,
வாசல் காய்ந்தால் போய்விடும்
சுவாசம் அந்தப் புழுவிற்கு.

மெல்லப் பிடித்தோம் ஒவ்வொன்றாய்,
மீண்டும் விட்டோம் மண்ணின் மேலே,
புழுவின் உயிர்போகாதிருக்க!

என்னது நகரில் மண்புழு!
எப்படி இந்த அதிசயம்?
சிந்தனை ஓடிய மனதில்
புரிந்தது காரணம் மெல்ல,
விவசாயமில்லா நகரில்,
மருந்தடிக்க மண்ணில்,
யாரும் இல்லை என்று.

மருந்தடிக்கா மண்ணிலே
வாழ வந்த மண்புழுவே!
காரணம் எதுவென்றாலுமே,
கண்டோம் உனையது மகிழ்ச்சியே!



👇🏼
எனக்கு ஒரு பத்து வயது இருக்கும் போது மண் புழு பரிச்சயம் ஆனது.
நாங்கள் அப்பொழுது தந்தையார் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயக்கல்லூரி குவாட்டர்சில் குடியிருந்தோம்.
சுற்றிலும் பல ஏக்கர் நிலம் மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது.
மரங்கொத்திப் பறவை பார்ப்பதெல்லாம் சர்வசாதாரணம், தினமும் எதோ ஒரு மரத்தைக் கொத்திக் கொண்டிருக்கும்.


பக்கத்து வீட்டிலே குடியிருந்த குடும்பத்தின் அம்மா அவர்கள் தோட்டம் போடுவார்கள். அழகாக பாத்திகட்டி தக்காளி வெங்காயம் கத்தரிக்காய் என்று பயிரிடுவார்கள், அது போக நிறைய காடு இருந்தது.
வீடு என்றால் அது போன்ற சூழலில் தான் இருக்க வேண்டும்.
ஆங்கிலேயர் கட்டிய சிவப்புக்கலர் கட்டிடம் அது பார்க்க அழகாக இருக்கும். அறைகள் ஒவ்வொன்றும் பெரிது பெரிதாய் இருக்கும்.

அங்கேதான் அந்த அத்தை போட்ட தோட்டத்தில் மண்ணை வெட்டும் பொழுது நிறைய மண்புழுக்கள் பார்த்திருக்கிறேன். எனக்கு அப்போது அவைகளின் முக்கியத்துவம் தெரியாது, இப்பொழுது மண்புழுக்கள் அரிதாகிவிட்ட காலத்தில்தான் அவை எவ்வளவு முக்கியம் என்று புரிகிறது.
மண்ணிலே பூச்சிக்கொல்லி மருந்து அடித்தடித்து அநேகமாக எந்தத் தோட்டத்திலும் மண்புழு இருப்பது அரிது இன்றைய காலகட்டத்தில்.

மண்புழுவை பற்றி இன்னொரு ஞாபகம் என்னவென்றால் கல்லூரியில் பியூசி படித்த காலத்தில் தவளை, மண்புழு முதலியவற்றை அறுத்து அவற்றின் உடற்பாகங்களை நாங்கள் படிக்க வேண்டும்.
அவை அனேகமாக அரை மயக்க நிலையில் தான் இருந்திருக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட கொடூர ராட்சசிகளாக நாங்கள் இருந்திருக்கிறோம் என்று நினைத்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. நல்லவேளை இன்று டிசக்ஷ்ன் சப்ஜெக்ட் இல்லை..... அது ஒரு பெரிய நிம்மதி எனக்கு.

👇














Comments

Popular posts from this blog

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

சிந்திக்க ஒரு நிமிடம்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

விருட்சம்

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

புகைபோக்கி

Almond coffee பாதாம் பால் காபி