சாதனையும் செலவும்

பொதுவாக வாழ்வில் பல பேருக்கு எதாவது கனவு இருக்கும் ....

எனக்கு மருத்துவராக வேண்டும் என்பது சிறுவயது கனவு.
கிட்டத்தட்ட வேறு எந்த நினைவும் இல்லை....அது ஒன்றே என் எண்ணங்களை ஆக்கிரமித்து இருந்தது.

எங்கள் காலத்தில் பிளஸ்டூ இல்லை.
பள்ளியில் 11 வருடங்கள் முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்து பியூசி என்று ஒருவருடம் படிக்க வேண்டும்..

பியூசியில்  வாங்கும் மார்க்கை வைத்துத்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும்.

இடம் கிடைத்து கல்லூரியில் சேர்ந்து ஆயிற்று...
ஒரு வருடம் ஆன பிறகு என்னால் படிப்பை தொடர முடியவில்லை....

ஒருமனதாக கவனத்தை செலுத்தி படிக்க முடியாத காரணத்தால்.
பிறகு அதற்கு வைத்தியம் பார்த்து மறுவருடம் சேர்ந்து படித்து முடித்தேன்.

அதன்பிறகு கண் சிறப்பு படிப்புக்காக  சேர்ந்து படித்துக் கொண்டிருந்த பொழுது DNB என்ற உயர் படிப்பு பட்டம் வாங்க வேண்டும் என்பது ஒரு தீராத ஆசையாக இருந்தது.

மூன்று முறை அந்த தேர்வில் தேற வில்லை..... விடாப்பிடியாக படித்து முடித்துத் தேறினேன்.

அந்த DNB  தேர்வு முடிவுகள் அறிந்து நான் பாஸ் ஆகி இருந்த விஷயம் தெரிந்தவுடன் என் மனதில் படர்ந்த ஒரு திருப்தியும் சந்தோஷமும் இன்றுவரை நிலைக்கிறது ஒவ்வொரு முறை நினைக்கும் பொழுதும்.

அன்று அப் பரீட்சை விதிமுறைகளும்,என் குடும்ப சூழ்நிலையும், இருந்த விதத்தில்.... அதை ஒரு சாதனையாக நான் நினைக்கிறேன்.

எனக்கு இதுதான் லட்சியமாக இருந்தது அந்த காலத்தில்.

ஆசையும் இலட்சியமும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்

👇


சாதனையும் செலவும்

வருடக் கணக்காய் ஆசை எனலாம்,
வாழ்வின் பெருலட்சியம் எனலாம்.......
வாய்ப்பு வந்தது ஒரு நாள்,
வந்த வாய்ப்பை விட்டுவிடாமல் பிடித்து வைத்து சாதித்தார்...
திரைப்படத்தில்  நடிகர்,
மருத்துவத்தில் ஒருவர்,
தொழிலுக்கொரு அதிபர்
விளையாட்டில் வீரர்,
இசையமைப்பாளர்....
இன்னும் பலர்....

அதன் பின்னே வந்தது எல்லாம்
மேலே நோக்கிய பயணம் ஒன்றே!
தேடித் தேடித் தானே வந்தது பணமும் புகழும் இவர்களிடம்!
பணத்தை விடவும் புகழை விடவும்
அருமையானது இன்னொன்று,
அனைவர் வாழ்வின் லட்சியமான
'சாதனை' என்ற பெரும்பயன்,
அடைந்தோம் என்ற  தன்னிறைவு...
அதுவும் வந்தது இவர்களுக்கு!

எல்லாம் வந்தது நண்மையே
பணம் வந்ததும் அவ்வாறே!
வந்த பணத்தை வாரியிறைத்து
ஒன்றுக்குப் பலதாய் வீடுகள் கட்டி,
பத்துப் பதினைந்து வாகனம் வாங்கி,
வரிசை வரிசையாய் வீட்டில் நிறுத்தி, தினம் ஒன்றில் பயணம் செய்து
போவதென்பது சாதனையா?

பிறவிப்பயன் சாதனையாகும், அதை
அடைவதென்பது பெரும் பேறாகும்!
சம்பாதிப்பது வறுமை ஒழிய,
உணவும் வீடும் சரியாய் கிடைக்க,
உடுக்க சில உடைகள் வாங்க,
வாகனமொன்று போகவும் வரவும்...
இவைகளுடன் சேர்ந்து வந்த
பேரும் புகழும் அடைந்த பின்னே,
அதற்கு மேல் ஆடம்பரம் யாருக்கெதைக் காண்பிக்க?
சாதனை என்ற கணக்கில், வராதந்த ஆடம்பரம்,
சுற்றி இருப்போர் மனதில் பொறாமை தூண்டும் ஆடம்பரம்,
பூமித்தாயின் வளமையை சுரண்டி எடுக்கும் ஆடம்பரம்
ஆகாதிந்த பூமிக்கும்
அமைதி தேடும் மனதுக்கும்!

பணம் குவிந்து வந்த போதிலும்
அளந்து வாழும் வாழ்க்கை,
அதுவும் ஒரு சாதனை
அதிலே  வரும் தன்நிறைவு வேறு எதிலும் வருமா சந்தேகமே!









Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி