குறைவே நிறைவு

குறைவே நிறைவு💃

குறைவே நிறைவு
நிறைவே நிம்மதி,
என்றொரு முடிவில்
வருமொரு விடுதலை.
விடுதலை என்பது
தருமொரு சுகம்
அடைந்தால் புரியும்
சுகத்தின் அருமை!

அடுத்தவர் என்பவர்
எதை வாங்கினாலும்,
எனக்கிது போதும்
என்றொரு முடிவு
எடுக்கும் தீர்க்கம்
இருக்கும் வரைக்கும்,
நிம்மதி என்பது
நமக்கே சொந்தம்!

அடிப்படை உணவு
அடிப்படை உடை
இதற்குமேலே எது வாங்கினாலும்,
வீண் மட்டுமல்ல,
வீட்டையும் அடைக்கும்.
வெளியிலுள்ள
விசால உலகம்
அறியா வண்ணம்
விழிகளை மறைக்கும்
வெட்டிப் பொருட்கள்
மீதொரு மயக்கம்.

👇👇👇👇👇👇👇👇👇
🦉🦅🐦🦜🕊️🦢🦃🦆🏠

நாம் அப்படி இருந்தால், இப்படி உடுத்தால்,
இதுபோன்ற உணவு உண்டால், இந்த வண்டியில் போனால்,....... அடுத்தவர் என்ன நினைப்பார்? மற்றவரிடம் நம் மதிப்பு என்னவாகும்? என்ற இது போன்ற எண்ணங்கள் தரும் ஒரு இடைஞ்சலும் மன உளைச்சலும் கிட்டத்தட்ட வேறு எதுவுமே தருவதில்லை என்று கூறலாம்.

சிறிது நேரம் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து நாம் சிந்தனை செய்தால், இதற்கென்று மற்ற எல்லாவற்றையும் சிறிது நேரம் ஒதுக்கிவிட்டு, மனதை செலுத்தினால், விரைவிலேயே நமக்குப் புரிந்து விடும் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று. அடுத்தவரைப் பற்றி நாம்
எவ்வளவு நினைக்கிறோம்?
இதை நினைத்துப் பார்த்தாலே தெரியும் அடுத்தவர் நம்மை பற்றி எவ்வளவு நேரம் நினைப்பார் என்று.
அப்படியே அவர்கள் மணிக்கணக்கில்  நினைத்தாலும் அது நம் பொறுப்பல்ல.
நாம் பிறந்தது நமக்காக!

நம் வீட்டில் பொருட்கள் வாங்குவது, உடைகள் உடுத்துவதும் வாங்குவதும், மற்றும் வாகனங்கள் மாற்றுவது, இன்னும் ஏனைய அவ்வளவாகப் பயன்படாத பல பொருட்கள் நாம் வாங்குவது என்று இவை அனைத்திற்கும், எனக்குத் தெரிந்த சில காரணங்கள் இருக்கின்றன-

ஒன்று கடையில் பார்க்கும் பொழுது அவை மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பது.

இரண்டாவது நம் நண்பர்கள் அதை வாங்குகிறார்கள் சரி என்று நாமும் வாங்கி விடுகிறோம்.

மூன்றாவது காரணம் என்றோ ஒருநாள் பயன்படலாம் என்ற ஒரு எண்ணம்.

நான்காவது காரணம் கையில் பணம் இருக்கிறது வாங்கி வைப்போம் என்ற ஒரு எண்ணம்.

ஐந்தாவது காரணம் இந்த ஊருக்கு நாம் இனி எப்பொழுது வரப் போகிறோம் இப்பொழுது வாங்கினால்தான் உண்டு நம்ம ஊரில் இது கிடைக்காது என்பது!

நியாயமாகப் பார்த்தால் இவை அனைத்தையும் விட மிக மிக முக்கியமான ஒரே ஒரு காரணம்தான் இருக்க வேண்டும்.
இந்தப் பொருள் நமக்கு கண்டிப்பாக வேண்டுமா, இது இல்லாமல் நம் வாழ்க்கை  நடக்காதா?
என்பதுதான், ஆனால் அதை மட்டும் நாம் எப்பொழுதும் ஆலோசித்தது இல்லை!

இந்த ஒரு காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து பொருட்களை நாம் வாங்கி, ஒரு இரண்டு வருடம் இருந்து பார்த்தால் தெரியும் வாழ்க்கை என்றால் என்னவென்று.

இந்தப் பொருள் வாங்கும் ஆசை என்பதும், அதற்குத் தீனி போடும் வியாபார விளம்பரங்களும் நம் கண்களை மறைக்கின்றன என்பது என் கருத்து!









Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி