புத்தாண்டில்.... சிந்திக்க!


தாயின் வயிற்றில் கருவுற்று தாவிப் பறந்து வந்த வாழ்வு, துள்ளித்திரிந்து சுகமாக 

தானே முடிவு பெற வேண்டும்?


பொன்னும் பொருளும் தேவை இல்லை 

மாட மாளிகை வேண்டியதில்லை 

உணவும் உடையும் குடிலும் போதும்....

அதற்கும் மேலே தேவை ஒன்று- எங்கும் போகும் சுதந்திரம்!

அதுவே வாழ்வின் மூச்சாகும்...


கூண்டில் அடைத்த கைதிக்கு

அமுதக்கடைசல் கடைந்தெடுத்து தங்கத்தட்டில் வைத்தாலும்,

விஷமேயாகும் அவ்வமுதம்!


பூமியில் பிறந்த உயிரனைத்தும்

வேண்டுவதந்த சுதந்திரமே,

அதைப் பிடுங்கிவிட்டு அடைத்துள்ளோம்

மனிதர் நாமே விலங்குகளை!

அடைத்து வைத்த விலங்கையெல்லாம் விடுவிப்போமே நாமின்று...


செடியும் கொடியும் தாவரமும் அளிக்கும் உணவு போதும் இந்தப்

பூமியில் வாழ்க்கை இனித்திடவே!

உணவை தினமும் இட்டு வளர்த்து- பின் கழுத்தை அறுக்கும் மாபாதகம் மறப்போம் நாம் இன்றோடு,

தவிர்ப்போம் நம் வாழ்விலிருந்து.


ஏன் தவிர்க்க வேண்டும்?

காரணங்கள் 👇


1.ஊண் உணவு (மாமிசம்)

உயிருடன் விலங்கை அறுத்துக் கொன்று பிறகு எடுப்பது.


2. முட்டை - ஆண் கோழிக்குஞ்சுகளை அரைத்துக்கொன்றுவிட்டுப் பிறகு முட்டையிட்ட கோழியையும் இறுதியில் கொன்றுவிடுவார்கள்.


3. பால் மற்றும் பால் பொருட்கள்- அனைத்து பால் பண்ணைகளிலும் ஆண் கன்று குட்டிகளை சில மாதங்களில் கொன்றுவிடுகிறார்கள்.

தாய் பசுவையும் கறவை வற்றிய பிறகு கொன்று விடுகிறார்கள். பால் குடிப்பதும் மாமிசம் சாப்பிடுவதற்கு இணையானதே.


4. தேன் - தேனீக்கள் நமக்காகத் தேனை சேகரிப்பதில்லை. தங்கள் குடும்பத்திற்காக சேகரிக்கிறார்கள்.

நாம் அதைப் பிடுங்கி குடிக்கிறோம்.

வளர்ப்புத் தேன்கூடு களிலும் ராணித்தேனீயின் காலை ஒடித்து விடுகிறார்கள், பல வேளைகளில் வேலை முடிந்ததும் அதைக் கொன்றும் விடுகிறார்கள்.


5. தோல் - பசு மற்றும் கன்று குட்டிகளை கொன்றுதான் எடுக்க வேண்டும்.


6. பட்டுடை - கூட்டுப்புழுக்களை உயிருடன் கொதிக்கவைத்து கொன்று பின் எடுப்பது.


7. முத்துநகை - கடல்வாழ் விலங்கினத்திடமிருந்து அதைக் கொன்று விட்டு பிறகு எடுப்பது.


8. உல்லன் துணி - ஆடுகளிடமிருந்தும் மற்றும் வேறு சில விலங்குகளிடமிருந்தும் வருடாவருடம் அவர்களின் மேல் வளரும் ரோமத்தை சிரைத்து எடுத்துவிடுவது.

இதனால் அந்த விலங்குகள் மிகவும் துன்பப்படுவார்கள்.

பல நேரங்களில் பெரும் காயங்கள் ஏற்படும். இறுதியில் இந்த விலங்குகளையும் கொன்று விடுவார்கள்.


9. சர்க்கஸ் - இங்கு விலங்குகளின் வாழ்க்கை மிகவும் கொடூரமானது. அடிமை வாழ்வு வாழும் இந்த விலங்குகள் சிறைக் கைதிகளைப் போல் நடத்தப்படுவார்கள். சொல்லும் வேலையை செய்ய வைப்பதற்காக பல சித்திரவதைகளும் நடக்கும்.


10. மிருகக்காட்சிசாலை - சர்க்கஸ் கதை தான் இங்கும் நடக்கின்றது.

அழிந்து கொண்டு போகும் விலங்கினங்களை இங்கு பாதுகாப்பது என்பது பொய்...

அப்படியே பாதுகாத்தாலும் சிறைக்கைதியாய் வாழ்வதைவிட அழிவது மேல் அல்லவா?



11. பரிசோதனை சாலைகளில்      

 விலங்குகளை உபயோகித்தல் -

இங்கு சிறு விலங்குகளின் மேல் நாம் உபயோகிக்கும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்களை, அவர்களுடைய தோலிலும் கண்ணிலும் இட்டுப் பரிசோதனை செய்து இறுதியில் இந்த விலங்குகளைக் கொன்றும் விடுவார்கள்.










Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

சிந்திக்க ஒரு நிமிடம்

செடி கொடிக்கும் வலிக்குமே....!

சிந்தனை சோம்பேறி

வெட்டும் நேரம் வளரும் நேரம்

பொன்னாடை துணி