பக்திப் படம்

 






நான் சிறு வயதாக இருக்கும் பொழுது சினிமாப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் ( இப்பொழுது மட்டும் என்ன! விட்டால் தினமும் இரண்டு படங்கள் பார்த்துக் கொண்டே என் மீதி வாழ்நாட்களை கழிப்பதற்கு நான் தயார், சந்தோஷமாக..)  படம் பார்க்கப் போவது என்பது விழா போல்- முதல் நாளில் முடிவு செய்துவிட்டு, அடுத்த நாள் காலையில் இருந்தே ஏற்பாடுகள் நடக்க வேண்டும். அதாவது உணவு தயாரிப்பு எல்லாம் முடித்து, மதிய உணவுக்குப் பிறகு கிளம்பிப்  போனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் க்யூவில் நின்று டிக்கெட் வாங்கி இரண்டு மணி ஆட்டத்திற்கு போவோம். 

கே பாலச்சந்தர் படங்கள் மிகவும் பிடிக்கும். பிறகு பஸ் பிடித்து வீடு வந்து சேர ஆறரை மணி ஆகிவிடும்.

முதல் நாள் இரவிலிருந்து சரியாக தூங்க முடியாமல் அதே ஞாபகமாக ஒரு சந்தோஷத்துடன் காத்துக் கொண்டிருப்போம்.

இதெல்லாம் முக்கியமாக 'கசின்ஸ்' வரும் பொழுது நடக்கும்- கண்டிப்பாக ஒரு விடுமுறைக்கு ஒரு படம் அல்லது இரண்டு படம் பார்த்து விடுவோம். 


விடுமுறை இல்லாத சமயங்களில் சனி ஞாயிறுகளில், சிலநேரம் பக்தி படம் மற்றும் சிவாஜி படங்கள் வந்தால் மட்டும் தான் அன்னையார் எங்களை அழைத்துச் செல்வார். அந்த பக்தி படங்கள் எல்லாம் அந்த சிறுவயதில் அப்படியே மனதில் பதிந்து விடும். மிகவும் ஆழ்ந்து நோக்கி உண்மையிலேயே ஒரு கடவுள் இருக்கிறார், அவர் அதே உருவில் இருக்கிறார்,என்னுடைய விருப்பமான அழகுக்கடவுள் முருகன் - சிவகுமாரை போலத்தான் சிரிப்பார், தேவர்கள் பூதகணங்கள் எல்லாம் உண்மையிலே இருந்தவர்கள் என்றுதான் நான் வெகுநாட்கள் நினைத்துக்கொண்டிருந்தேன். அவ்வளவுதான் பாருங்கள் சிந்தனை அந்தக் காலத்தில்!

இப்பொழுது கடவுள் நம்பிக்கை இல்லாத ஆளாக மாறி இருக்கிறேன்.

Yes dear friends, i am an atheist.


எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் தேவர்கள் அனைவரும் சிவப்பாக அழகாக நல்ல உடை மற்றும் கழுத்தில் நெக்ளஸ் அணிந்து, அமைதியே உருவாக சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் மனைவிமார்களை (ஆமாம்- 'கள்' தான்) கிண்டல் செய்து கொண்டும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பார்கள். அசுரர்கள் சிறிது ஆழ்ந்த நிறத்தில் தடியான உருவத்தில் பெரிய மீசை வைத்து கையில் ஒரு மிகப்பெரிய  கத்தியுடன் திம் திம்மென்று நடந்து கொண்டு, பார்க்க ஒரு பயங்கரமான உருவத்துடன் இருப்பார்கள். அந்த அசுரர்கள், பூமியில் அதாவது பூலோகத்தில் வாழும் மனிதர்களை வதை செய்து துன்பப்படுத்துகிறார்கள் என்ற செய்தி மேலே தேவலோகத்துக்கு வந்தால், தேவர்கள் யாராவது இறங்கிப் போய் அசுரர்களிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றுவார்.சில நேரங்களில் அம்மன் போன்ற பெண் கடவுள்களும் வந்து காப்பாற்றுவார்கள்.

நிறைய புராணக் கதைகளில் இது நடக்கும். நான் ஒரு பொதுவான 'டெம்ப்ளேட்டை' கூறுகிறேன். 


இப்பொழுது அந்த படங்களை நினைத்துப் பார்க்கையில் எனக்கு சந்தேகம் வருவது என்னவென்றால், உண்மையிலேயே பூமியில்  அசுரர்கள் இருக்கிறார்கள் என்று....


அவர்கள் பாட்டுக்கு சந்தோஷமாக மகிழ்ச்சியாக அழகாக எந்தக் குற்றமும் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் விலங்குகளைப் பிடித்து, அடைத்து வைத்து வெட்டி உண்டு கொண்டிருக்கும் நாமெல்லாம் அசுர கணங்கள் போல் தான் என்  அறிவுக்குப்டுகிறது.


 கண்டிப்பாக அனைத்து விலங்குகள் பசு மாடுகள் கன்று குட்டிகள் மற்றும் கோழிக்குஞ்சுகளின் ஆட்டுக்குட்டிகளின் - கண்களில் நாமெல்லாம் அசுரர்களாகத்தான் தெரிவோம்.


அசுரத்தனம் நல்ல குணம் இவை அனைத்தும் இங்கேயே உள்ளன எங்கேயும் தேடிப்போக வேண்டியது இல்லை.

நாம் தான் உண்மையான அசுரர்கள்.

ஆனால் நம்மை தேவர்கள் காப்பாற்ற வேண்டும் என்பதுபோல் சினிமா படம் மற்றும் கதைகள் புனைந்து நாம் நம்மைநாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். அசுரர்கள் மட்டுமில்லை பொய் பித்தலாட்டம் புரியும் ஏமாற்றுக்காரர்களும் நாமே தான்.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி