சிந்தனை சோம்பேறி



 

வழிவழி வந்த பழக்கங்களில் ஒன்றிப் போவதில் பல வசதிகள் உண்டு - சிந்தனை சோம்பேறிகளாக இருந்து கொள்ளலாம். பன்பாட்டைப் பாதுகாக்கிறோம் என்ற பெருமையும் சேர்ந்து கொள்ளும்.


அதே வேளை அந்தப் பழக்கங்கள் நமக்கு இடையூறாக இருக்கும் போது நம் சிந்தனை சுறுசுறுப்பாகி பட்டென்று விழித்துக் கொண்டு, அந்தப்பழக்கங்கள் தவறு என்ற கருத்தை யாராவது முன்வைத்தால், உடனே அதை ஏற்றுக்கொண்டு  பலவவற்றை மாற்றி விடவும் செய்கிறது.


பெண்கள் வேலைக்குப் போவது,மற்றும் பெண்களின் உடையில் மாற்றம் எல்லாம் இப்படி வந்தவை தான்.

இது போன்ற வசதிக்கு ஏதுவான சமூக மாற்றங்கள் வரும் பொழுது, முன்னோர்கள் செய்தது, பழங்காலந்தொட்டு வரும் பன்பாடு என்பதை எல்லாம் நாம் பெரிதாக காதில் வாங்கிக் கொள்வதில்லை. யாரோ ஒன்றிரண்டு பேர் கூறினாலும் அதை நாம் அசட்டையாக விட்டு விட்டு வேண்டியதை செய்து கொள்கிறோம்.


இன்று கிட்டத்தட்ட புடவை கட்டுவது பலருக்கு மறந்து போய்விட்டது. அதில் தவறுமில்லை, அதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை.  ஏனென்றால் நானும் இப்படித்தான் மாறிவிட்டேன், சவுகரியமான உடை அணிவதில் என்ன தவறு?

புடவையில் உள்ள பல சிரமங்களினால், புடவையே இனிமேல் உபயோகிப்பதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.

கடந்த பத்து வருடங்களாக, மிகவும் வசதியாக இருக்கும் சுடிதார் போன்ற உடைகளையே நான் அணிகிறேன்....

புடவை என்பது ஒரு உதாரணம்தான், இன்னும் எத்தனையோ உண்டு வாழ்க்கை முறை மாறிக் கொண்டே வருவதைக் காண்பிக்க.


காரில் போகிறோம், பெண்கள் கார் ஓட்டுகிறார்கள், எங்கு வேண்டுமானாலும் சென்று வருகிறோம், விமானத்தில் பயணம் செய்து நாடு விட்டு நாடு போகிறோம்.

கைப்பேசி என்பது கைக்குட்டை போல், அனைவர் கையிலும் இருந்து கொண்டே இருக்கின்றது...


இவையெல்லாம் ஆயிரம் வருடங்கள் முன்பு இருந்ததா என்ன?!

அல்லது நூறு வருடங்கள் முன்பு இருந்ததா?

இல்லை!

நாம் ஏற்றுக் கொள்ளவில்லையா?

மிகவும் சந்தோஷமாக, உற்சாகமாக, வாழ்க்கை வசதியாக மாறிவிட்டது என்ற மிதப்புடன்  அனுபவிக்கிறோம்.

'பழைய பழக்க வழக்கங்களை எப்படி மாற்றுவது' என்னும் தடை எல்லாம் இது போன்ற விஷயங்களில் வருவதில்லை.


ஆனால் வேறு சில பழக்கங்கள் அநியாயமானவை, அவை மாற வேண்டும் எனும்பொழுது......

'பல நூறு வருடங்களாக இதைத்தானே செய்கிறோம்?

இதில் என்ன அநியாயம், முன்னோர்கள் தெரியாமலா இவையெல்லாம் செய்து வைத்தார்கள்?' என்ற கேள்விகள் வருகின்றன.


இதற்கு அடிப்படை காரணம் நமக்கு அதைப் பற்றி சிந்திக்கப் பிடிப்பது இல்லை. அடிமனதில் அநியாயம் என்று தெரிந்தாலும் ஒரு வசதிக்காக,  சிலவற்றை விடமுடியாமல், அது முன்னோர்கள் செய்து வைத்த பழக்கம், தவறாக இருக்க முடியாது,

என்றெல்லாம் கூறுகிறோம்.


அந்த முன்னோர்கள் காரில் போகவில்லை, நாம்  போகிறோம். கார் இல்லாதவர்கள் எப்படியாவது கார் வாங்கி அதில் செல்ல வேண்டுமென்று ஒரு குறிக்கோள் வைத்து பணம் சேர்க்கிறோம்.


நம் வசதிக்காக எந்தப் பழைய பழக்கம், பண்பாடு என்று எதுவாயிருந்தாலும் மாற்றிக்கொள்ள நாம் தயாராக இருக்கும் பொழுது, நாம் இதுவரை செய்து வரும் அநியாயங்களையும், அவை தவறுதான் என்பதை ஏற்றுக்கொண்டு மாறுவதுதான் மனிதத்தன்மை.


நாம்  அடிமைப்படுத்திக் கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கும் விலங்குகளை விடுவிப்பதைப் பற்றித்தான் கூறுகிறேன். விலங்கிடமிருந்து வரும் பொருட்களை நாம் உபயோகிக்கும்வரை  விலங்குகளுக்கு விடுதலையும் கிடையாது, வாழ்வும் கிடையாது.


பால் முட்டை அசைவம் மற்றும் தோல் பட்டு தேன் முதலிய அனைத்தையும் தவிர்த்து,உயிர் நேயம் என்ற நெறிக்கு மாறுவது ஒன்றுதான் மனித நேயம் மிக்க செயல்.

சிந்தனையை விரிவாக்கி, இதை நாம் அனைவரும் செய்ய முற்படுவது தான் நியாயத்துக்கும் தர்மத்துக்கும் ஒரே வழி.


இதைக் கூறும் பொழுது பாலில் பல சத்துக்கள் உள்ளன என்று சாக்குபோக்கு எல்லாம் வரும்.....

பாலில் இருக்கும் சக்தி எதிலிருந்து வருகிறது 🤔...?

தாவரத்தில் இருந்து!


கால்நடைகள் அந்தத் தாவரங்களையும் இலை தழைகளையும் உண்டு, உடம்பில்  சத்தாக மாற்றிப் பாலாக தன் கன்றுகுட்டிக்காக சுரக்கிறது.

குறுக்கே நாம் புகுந்து அதைப் பிடுங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஆண் கன்று குட்டிகளை ஓரிரண்டு மாதத்தில் அடிமாட்டுக்கு அனுப்பிக் கொலை செய்துவிடுகிறோம்.


இந்தப் பழக்கத்தை விட்டுவிட்டு அதே தாவரங்களை நாம் உண்டு நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் பெறலாம். இதுதான் இயற்கை வகுத்த ஒரே வழி என்பதை நாம் உணரும் காலம் வந்துவிட்டது.

Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி