திர(ரு)ட்டு்ப்பால் வேடதாரி

 திர(ரு)ட்டு்ப்பால் வேடதாரி




கன்றுக்கென்று சுரந்த பாலை

கறந்து சென்று குடித்துவிட்டுக்,

களவில்லையென்று சொன்னால்-

களவென்றால் வேறென்ன?


நம்தாயின்பால் நாமருந்தி, 

நன்றாக இருக்கின்றோம்,

பிறகென்ன தேவைக்கு

பசுவினத்தின் பாலை

பிடுங்கி நாம் குடிக்கின்றோம் ?

அன்று பிறந்த கன்றின் இன்றையமையாத் தேவை,

கடும்பாலைக் நாம் கறந்து

சீம்பாலென கொண்டாடும்

கொடுமைக்குப் பெயரென்ன

வைக்கலாம் சொல்லம்மா? 


பசுவென்ன தாய் நமக்கா, தான் ஈன்ற கன்றுக்கா?

நமக்கும் தான் தாயென்றால்

வற்றிய பின் அடிப்பதேனோ?

அடிமாடென விற்பதேனோ?


🐄🐂🐃  🍼🥛🍼🥛🍶🍶🐄🐂


பாலூட்டி இனங்கள்


போன முறை நான் ஊருக்கு சென்ற பொழுது எங்கள் தோட்டத்திற்கு சென்று ஒரு நாள் தங்கினோம். எங்கள் தோட்டத்தை குத்தகைக்குத் தான் விட்டு இருக்கிறோம். நாங்கள் அனைவரும் நகரத்தில் வசிக்கிறோம், விவசாயமும் பரிச்சயம் இல்லை, ஆகவே பல வருடங்களாக குத்தகைக்குத்தான் தான் இருக்கின்றது.


இந்த முறை சென்று தோட்டத்தில் தங்கிய பொழுது, விடிகாலை  வெளியே வந்தவுடன் ' சடீர் சடீர்' என்று சத்தம் கேட்டு என்னவென்று எட்டிப் பார்த்தால் பசு மாட்டை கட்டி வைத்து பின் புறத்தில் குச்சியால் அடித்து கொண்டிருந்தார் குத்தகைதாரர் மகன். எதற்கு அடிக்கிறார் என்று கேட்டதற்கு பால் கறக்கும் போது அது முரண்டு பிடிக்கிறது என்று கூறினார். எனக்கு எப்பொழுதுமே மூக்கின் மேல் கோபம் வரும்... அன்றும் வந்தது, வாயில்லா ஜீவனை இப்படி வதைக்கிறாரே என்று...

என் கணவர் குத்தகைக்கு எடுத்து இருக்கும் ஆட்களை அதிகம் மிரட்ட மாட்டார். 'விட்டுவிடு அவர்கள் குடும்பத்தில் ஏற்கனவே பிரச்சினை உன்னால் மேலும் பிரச்சனை வரக்கூடாது' என்று கூறி விட்டார்.

நானும் கோபத்துடன் உள்ளே வந்து விட்டேன்.ஆனால் என் மனதில் சில கேள்விகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.


எவ்வளவு தூரம் நாம் சிந்தனை மங்கிப் போய் இருக்கிறோம், முதலில் அது நமக்கு பால் கொடுப்பதே பெரிய விஷயம், தான் ஈன்ற கன்றுக்காக சுரந்த பாலை வேறு வழியின்றி கொடுக்கிறது. 

அதை கட்டி வைக்காமல் நம்மால் கறக்க முடியுமா? கட்டிவைத்தும் கூட முரண்டு பிடிக்கிறது, பின்னங்காலால் உதைக்க வாய்ப்பிருக்கிறது, இவ்வளவு எதிர்ப்புக்கு இடையில் நாம் அதை அடக்கி, பாலை கறந்து குடிப்பது என்பது பிடுங்கிக் குடிப்பதற்கு சமம் தானே என்று எனக்கு தோன்றியது...

பல ஆண்டுகளாக... பல நூற்றாண்டுகளாக வந்துவிட்ட பழக்கம் என்பதால், பசும்பால் நமக்கு சொந்தமில்லாத பொருள், அதுவும் பலவந்தமாகக் கட்டிவைத்து பிடுங்கிக் கொள்கிறோம் என்கிற உண்மையை நாம் மறந்து விட்டோம். 

சொன்னால் ஏற்றுக் கொள்வதும் சிரமமாக இருக்கும்.


பசு என்கிறோம் தெய்வம் என்கிறோம் காமதேனு என்கிறோம் தாய் என்கிறோம்...  தானாக வந்து எந்த பசுமாடாவது இதுவரை பால் நமக்கு சுரக்கிறதா? 

அது ஓட முடியாமல் மூக்கணாங்கயிறு போட்டு கட்டி வைத்து, சில நேரங்களில் பின்னங்கால்கள் வால் அனைத்தையும் பிடித்துக் கொண்டு பிறகு கறக்கிறோம்.அந்தக் கயிற்றின் துணையில்லாமல் என்றாவது நாம் பால் கறக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தால் இந்தப் பேருண்மை புலப்படும்...

இதிலிருந்து தெரியவில்லையா? அது எவ்வளவு தூரம் தன் கன்றுக்கு அந்த பாலைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறது என்று? 

வேறு எதற்காக முரண்டு பிடிக்கிறது?

எல்லா பாலூட்டிகளுக்கும், நாம் உள்பட, உண்டான இயற்கை குணம் இது.


நம் குழந்தைக்கு நாம் வைத்திருக்கும் உணவை ஒருவர் தானுண்ண வந்தால் நாம் தூக்கி கொடுப்போமா?மனிதக் குழந்தைகளுக்கு சுரக்கும் தாய்ப்பாலை வேறு எந்த இனமாவது குடிக்கும் ஒரு காட்சியை நினைத்துப் பார்த்தால் எப்படி இருக்கிறது?! எப்பேர்பட்ட அதிர்ச்சி! எந்தவிதத்தில் இதற்கும் நாம் செய்வதற்கும் வித்தியாசம்?


கோமாதா என்று கூறுகிறோம், இந்த வார்த்தைக்கு எல்லாம் ஏதும் அர்த்தம் இருக்கின்றதா? இவையெல்லாம் வெறும் வார்த்தைகளாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. பார்க்கப்போனால் - ஆரம்பத்திலிருந்தே 

அர்த்தம் இல்லாமல்தான்,

குற்ற உணர்வுள்ள மனதை ஏமாற்றி, நம்மை சமாதானம் செய்து  கொள்வதற்காக வந்த வார்த்தைகள் இவை என்பது எனக்கு இப்பொழுதுதான் உரைக்கிறது.

பெண்களை 'தெய்வம்' என்று கூறி வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவது, பசுமாட்டை 'கோமாதா'  என்று கூறி அடித்து துன்புறுத்துவது, இவை எல்லாம் நாம் செய்யும் கொடுமையை  மறைக்க வந்த வார்த்தைகள். 

மனதிற்குள் பல வக்கிரங்களை வைத்துக்கொண்டு வெளியே வேஷம் போடும் பல சாமியார்களை போலத்தான் இந்த வார்த்தைகள். 

பார்க்க போனால் நாம் அனைவரும் வேடதாரிகள் தான்.....


மாட்டுப் பொங்கலின் போது தன் தற்காப்புக்காக அது வளர்த்திருக்கும் கொம்புகளின் மீது சாயம் பூசுவது, மாலை போடுவது, பூ சுற்றுவது, இதெல்லாம் அந்த மாட்டைக் கோமாளி ஆக்கும் செய்கைகள்.உண்மையான அன்பும் பிரியமும் இருந்தால் அந்த மாட்டை சுதந்திரமாக விட்டு விடுவோம். ஆயிளுக்கும் நம் அடிமையாக வைத்திருக்க மாட்டோம். அன்பும் பிரியமும் இல்லாவிட்டாலும், 'சரி' 'தவறு' என்கிற கோட்பாடுகள் இருக்கின்றன அல்லவா?






Comments

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி